Last Updated : 03 Nov, 2017 05:57 PM

 

Published : 03 Nov 2017 05:57 PM
Last Updated : 03 Nov 2017 05:57 PM

பேட்டிங் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் ஷ்ரேயஸ் ஐயர்; இந்திய அணிக்கு பதிலடி கொடுக்குமா நியூசிலாந்து?

சனிக்கிழமை (4-11-2017) அன்று ராஜ்கோட்டில் நடைபெறும் 2-வது போட்டியில் இந்திய அணி தொடரை வெல்லும் என்ற ஆவலுடன், தன்னை வெளிப்படுத்தக் காத்திருக்கும் ஷ்ரேயஸ் ஐயருக்கு பேட்டிங் வாய்ப்பளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

டெல்லி டி20 போட்டியில் தவண், ரோஹித், கோலி ஆகியோருக்கு கேட்ச்களை விட்டதோடு, பீல்டிங்கிலும் நியூஸிலாந்து சொதப்பினர், இதனால் தோல்வி ஏற்பட்டது. அந்தப் பிட்ச் 202 ரன்களுக்கான பிட்ச் அல்ல. இதனால் நியூஸிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் ஏமாற்றமடையுமாறு தோல்வி தழுவியது.

பினிஷர் பொறுப்பை யாரிடம் கொடுப்பது என்பதில் நியூஸிலாந்து தடுமாறி வருகிறது. ஹென்றி நிகோல்ஸ் ஒருநாள் போட்டிகளில் இதற்கு தான் தயார் என்று தன் ஆட்டம் மூலம் அறிவித்தார், ஆனால் கொலின் டி கிராண்ட்ஹோம் அந்த ரோலுக்கு தன்னை இன்னமும் தயார் படுத்திக் கொள்ளவில்லை, அதே போல் ராஸ் டெய்லரை மிடில் ஆர்டரில் கொண்டுவருவது பற்றியும் நியூஸிலாந்து பரிசீலிக்க வேண்டிய தேவையுள்ளது.

பேட்டிங்கில் நியூஸிலாந்து புவனேஷ் குமார், சாஹல், அக்சர் படேலை அடித்து ஆட முயற்சி செய்ய வேண்டும், அன்று கொலின் மன்ரோ புவனேஷை அடித்து ஆடி அதிரடி தொடக்கம் கொடுத்தார், அதே போல் ஆட வேண்டும், கெவின் பீட்டர்சன் போன்ற பேட்ஸ்மென்களிடமிருந்து கற்றுக் கொள்வது அவசியம், மெக்ரா, டேல் ஸ்டெய்ன் போன்றவர்களையே டெஸ்ட் போட்டிகளிலும் நடந்து வந்து ஆடக்கூடிய தைரியம் படைத்தவர் பீட்டர்சன், அவர் புவனேஷ் போன்ற பவுலர்களுக்கு கிரீசிலேயே நிற்கமாட்டார். அது போல் ஏதாவது செய்ய வேண்டும், அப்போதுதான் தோனி ஸ்டம்புக்கு அருகில் நிற்க புவனேஷ் குமார் ஷார்ட் ரன் அப்பில் குறைந்த வேகத்தில் வீசுவார், இதனை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் நியூஸிலாந்து கேப்டன்.

காத்திருக்கும் ஷ்ரேயஸ் ஐயர்:

மும்பை வீரர் ஷ்ரேயஸ் ஐயர் இந்திய அணியில் அடுத்த வளர்ந்து வரும் நட்சத்திரமாவார், உள்நாட்டு கிரிக்கெட்டில் 100 ரன்கள் ஸ்ட்ரைக் ரேட்டுடன் தன் சதங்களை அடித்து வருபவர், டெல்லி போட்டியில் அவர் களமிறக்கப்படவேயில்லை, இது போன்ற முடிவு திறமையான வீரர்களையும் வலுவிழக்கச் செய்து விடும். புதிய வீரரை முயற்சி செய்தால்தான் மைதானத்துக்கு ரசிகர்களை அதிக அளவில் ஈர்க்க முடியும், இவர்களுக்குள்ளேயே ஆடினால் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் ‘அறுவை’யாகி விடும். ஷ்ரேயஸ் ஐயர் தன்னை வெளிப்படுத்த ஆயத்தமாகியுள்ளார், இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 4-ம் நிலையை உறுதி செய்ய இந்திய அணிக்கு வழிபிறக்கும் இது 2019 உலகக்கோப்பையில் பெரிதும் கைகொடுக்கும். காயமடைந்த வீரர்கள் இடத்தில் ஆடும் மாற்று வீரர் அல்ல ஷ்ரேயஸ் ஐயர். நிரந்தர இடத்தை வலியுறுத்தும் ஒரு வீரர். வாய்ப்பு கொடுத்து பார்ப்பதில் தவறில்லை.

இந்திய அணியில் ஆஷிஷ் நெஹ்ரா இடம் காலியாக இருப்பதால் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சாளர் மொகமத் சிராஜுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலிக்குத் தேவை 12 ரன்கள்:

இலங்கை வீரர் திலகரத்னே தில்ஷான் டி20 கிரிக்கெட்டில் எடுத்த 1889 ரன்களை கடக்க விராட் கோலிக்கு 12 ரன்களே தேவைப்படுகிறது. பிரெண்டன் மெக்கல்லம் 2140 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார்.

யஜுவேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்த ஆண்டு டி20 சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கன் வீரர் ரஷீத் கான், மே.இ.தீவுகளின் கேஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோருடன் இணைவார்.

ராஜ்கோட் அக்சர் படேலின் சொந்த ஊராகும். இந்தப் பிட்சில் பந்துகள் அதிகம் திரும்பாது, பவுன்ஸும் குறிப்பிடும்படியாக இருக்காது, பந்துகள் வழுக்கிக் கொண்டு செல்லும் என்று அக்சர் படேல் தெரிவித்துள்ளார். ஆட்டம் சனி இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x