Published : 01 Jul 2014 03:55 PM
Last Updated : 01 Jul 2014 03:55 PM

பால் போக்பாவின் கடைசி நேர கோல்: காலிறுதியில் பிரான்ஸ்

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் போராடிய நைஜீரியாவை பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

79 நிமிடங்கள் வரை கோல் இல்லாமல் சென்ற ஆட்டம் அந்த நிமிடத்தில் முதல் கோலை சந்தித்தது. பிரான்ஸ் வீரர் பால் போக்பா கார்னர் ஷாட் ஒன்றை தலையால் கோலுக்குள் செலுத்தினார். நைஜீரியா கோல் கீப்பர் வின்சென்ட் என்யீமா, கார்னர் ஷாட்டைப் பிடிக்க கோலை விட்டு முன்னே வந்தார். ஆனால் பந்தைப்பிடிக்க முடியவில்லை. இதனால் கோல் காலியாக இருந்தது. போக்பாவின் ஷாட் கோலுக்குள் சென்றது.

2வது கோல் நைஜீரிய வீரர் ஜோசப் யோபோ மூலம் ஜெர்மனிக்கு விழுந்தது. அது நைஜீரியா ஜெர்மனிக்குப் போட்டுக் கொடுத்த கோல்.

19வது நிமிடத்தில் நைஜீரியாவின் 19 வயது புயல் அகமட் மூசா ஒரு சாதுரியமான ஆட்டத்தில் பந்தை இம்மானுயேல் எமினிகேயிற்கு அளிக்க அதனை அவர் கோலுக்குள் அடித்தார். பிரான்ஸ் ரசிகர்கள் வாயடைத்துப் போயினர். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் உயிர் வந்தது. காரணம் அது ஆஃப் சைடு என்று அறிவிக்கப்பட்டு கோல் மறுக்கப்பட்டது.

22வது நிமிடத்தில் நைஜ்ரிய கோல் கீப்பர் திடுக்கிடும் விதமாக உறுதியான கோலைத் தடுத்தார். மைதானத்தின் நடுவில் பிரான்ஸ் வீரர் போக்பா ஏகப்பட்ட இடம் கிடைக்க பந்தை வெகு வேகமாக முன்னேற்றினார். பிறகு பந்தை வல்புயெனாவிற்கு பாஸ் செய்தார், அவர் மீண்டும் போக்பாவுக்கு பாஸ் செய்தார். பாக்ஸிற்கு அருகேயிருந்த போக்பா கோலை நோக்கி வலது புறத்தில் புல்லட் ஷாட் ஒன்றை அடித்தார். ஆனால் கோலை நோக்கிச் சென்று கொண்டிருந்த பந்தை நைஜீரிய கோல் கீப்பர் என்யீமா பின்னால் வளைந்து எம்பி தட்டி விட்டார். இந்த உலகக் கோப்பை கோல் கீப்பர்களின் உலகக் கோப்பை என்றே அழைக்கப்படவேண்டும். இது ஒரு திடுக்கிடும் தடுப்பாகும்.

இடைவேளைக்குப் பிறகு அரைமணி கழித்து நைஜீரியாவின் நெருக்கடியை தாங்க முடியாத பிரான்ஸ் மேலாளர் ஆலிவர் கிரவ்திற்கு பதிலாக கிரீய்ஸ்மானை களமிறக்கினார். இது உடனடியாகப் பலனளித்தது. கரிம் பென்சீமா, கிரீய்ஸ்மென் கூட்டணியில் ஒரு கோல் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் கோலாக மாறவில்லை.

பிறகு பிரான்ஸ் நெருக்கடி கொடுக்க பென்சீமா தலையால் சக்தி வாய்ந்த ஒரு ஷாட்டை ஆட மீண்டும் நைஜீரியா கோல் கீப்பர் 2வது அபாரத் தடுப்பை நிகழ்த்தினார். ஆனாலும் நீண்ட நேரம் கோல் கீப்பரால் தடுத்துக் கொண்டேயிருக்க முடியுமா? கடைசியில் பிரான்ஸ் வீரர் வல்பியூனா கார்னர் ஷாட்டில் போக்பா கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார்.

மீண்டும் கிரீய்ஸ்மான் அடித்த ஷாட்டை நைஜீரிய கோல் கீப்பர் என்யீமா கையால் தட்டி விட்டார். பிறகு ஆட்டம் முடியும் தறுவாயில் கிரீய்ஸ்மான் மீண்டும் நெருக்கடி கொடுக்க அவர் அடித்த ஷாட்டை நைஜீரிய வீரர் யோபோ தன் கோலுக்குள்ளேயே அடித்தார் பிரான்ஸ் 2-0 என்று வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x