Published : 05 Jul 2014 12:39 PM
Last Updated : 05 Jul 2014 12:39 PM

திரில்லர் காலிறுதி: டேவிட் லூயிஸின் அதிரடி கோலினால் அரையிறுதியில் பிரேசில்

உலகக் கோப்பைக் கால்பந்து காலிறுதி ஆட்டத்தின் பரபரப்பான திரில்லரில் கொலம்பியாவை பிரேசில் 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

அதிரடி ஆக்ரோஷத்துடம் துவங்கிய பிரேசில் அணி, அதன் கேப்டன் தியாகோ சில்வாவின் அபாரமான சாதுரியத்தினால் முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது. அதன் பிறகு 68வது நிமிடத்தில் டேவிட் சில்வாவின் அந்த அசாத்தியமான ஃப்ரீ கிக் கோல் விழ 2-0 என்று பிரேசில் ஆதிக்கம் செலுத்தியது. 80வது நிமிடத்தில் கொலம்பியாவின் அபாய வீரர் ஜேம்ஸ் ரோட்ரிகஸ் பெனால்டி கிக் மூலம் ஒரு கோலை அடித்தார்.

இதன் மூலம் அரையிறுதியில் அபாயகரமான ஜெர்மனியை சந்திக்கிறது பிரேசில். இடைவேளைக்கு முன்பாக கொலம்பிய கோல் கீப்பர் ஆஸ்பினோ குறைந்தது 4 அல்லது 5 கோல்களையாவது தடுத்திருப்பார். அதுவும் ஒரு முறை பந்து அவர் பகுதிக்குள் வந்தால் குறைந்தது 2 அல்லது 3 முறையாகவது கோல் நோக்கி ஷாட்களை ஆடிய வண்ணம் இருந்தது பிரேசில்

விறுவிறுப்பான ஆட்டம்:

பிரேசில் அணி கால்பந்தாட்டத்தை விளையாடுவதற்கும் மற்ற அணிகள் விளையாடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டால் அது கொலம்பியாவுடன் ஆடிய இந்த ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்கு நன்றாகவே புரியும்.

ஓய்வு ஒழிச்சலில்லாத தாக்குதல் ஆட்டம். அதுவே அவர்கள் தாரக மந்திரம். எதிரணியினரின் தடுப்பு வீரர்களை தொடர்ந்து அச்சுறுத்தி அவர்கள் நரம்பைத் தளர்ச்சியடையச் செய்வதே தங்க வேலை என்பது போல் பிரேசில் ஆடியது.

இடைவேளைக்கு முன்பாக மட்டுமல்ல ஆட்டம் முழுதுமே பிரேசில் எப்படி விளையாடவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனரோ அப்படியே விளையாடினர்.

இந்த ஆக்ரோஷமான ஆட்டத்தினால் கேப்டன் தியாகோ சில்வா ஃபவுல் செய்ய அரையிறுதியில் அவர் விளையாட முடியாது போயுள்ளது. ஆக்ரோஷ பிரேஸிலுக்கு எதிர் தாக்குதல் செய்த கொலம்பியாவின் ஆக்ரோஷத்திற்கு முதுகில் காயம் பட்டு வெளியேறிய நட்சத்திர வீரர் நெய்மார் இந்த உலக கோப்பை ஆட்டத்தில் இனி விளையாட முடியாத அளவுக்குக் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தப் போட்டியில் மைகான் என்ற புதிய வீரரை களமிறக்கியது பிரேசில். அவர் களம் புகுந்து விளையாடுபவர் என்று எடுத்த எடுப்பில் புரிந்தது. 5வது நிமிடத்தில் வலது புறம் பந்தை வாங்கிய மைகான் அதனை அபாரமாக வெட்டி எடுத்துச் சென்று கோலை நோக்கி ஷாட் ஒன்றை ஆட அது கோல் வலையின் கூரையில் போய் விழுந்தது. அதிர்ச்சிகரமான முயற்சி வெற்றியடையவில்லை.

பிரேசிலின் முதல் கோல்:

ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் பிரேசில் ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்த, எதிரணியினர் எவ்வளவு நுண்திறமை கொண்டிருந்தாலும் ஒன்றும் செல்லுபடியாகப்போவதில்லை என்பதை கொலம்பியாவுக்கு அறிவுறுத்துவதாக அமைந்தது. பிரேசில் வீரர் பெர்னான்டினோ இடது உள்புறம் ஒரு அபாரமான பாஸ் செய்ய, அங்கு நெய்மார் அதிவிரைவாக பாம்பு போல் உள்நுழைகிறார். வேறு வழியில்லாமல் கொலம்பியா ஃபவுல் செய்ய கார்னர் வாய்ப்பு கிடைத்தது பிரேசிலுக்கு.

கார்னர் கிக்கை நெய்மார் அடித்தார். நெய்மார் அடித்த பந்து மேலாக சுழன்றபடியே வர, அதனைத் தலையால் அடிக்கவும் தடுத்து வெளியேற்றவும் என சில பல வீரர்கள் எம்பிக் குதித்தனர். ஆனால் அவர்கள் தலைக்குச் சிக்கவில்லை அந்த பந்து.

இதனால் பந்து எங்கு வரும் என்பதை உணர்ந்த தியாகோ சில்வா கோல் நோக்கி சில அடிகள் நகர்ந்தார். தலைகளைத் தாண்டி வந்த பந்தை கொலம்பிய வீரர் சான்சேஸ் பார்த்துக் கொண்டிருக்க தியாகோ சில்வா முட்டிக்காலால் கோலுக்குள் செலுத்தினார். மிகவும் சாதுரியமான கோல் இது.

இதற்குச் சில நிமிடங்கள் கழித்து கொலம்பியாவின் எதிர்தாக்குதலை ஒன்றும் செய்ய முடியாமல் டேவிட் லூயிஸ், கொலம்பிய வீரர் குவாட்ராடோவை லேசாக முட்டிக்காலால் இடறி விட பிரேசில் கோலிலிருந்து 35 அடியில் ஃப்ரீ கிக். கொலம்பிய வீரர் குவாரின், கொஞ்சம் ஓவர்தான் என்று நாம் நினைக்கும் ஒரு ஷாட்டை அங்கிருந்து நேராக கோலுக்கு அடித்தார். ஆனால் பந்து கோலுக்கு மேல் வலது பக்க மூலைக்குச் சென்றது. ஆனால் ஒரு அபாரமான முயற்சி இது.

இது நடந்து அடுத்த நிமிடத்தில், அதாவது 11வது நிமிடத்தில் வலதுபுறத்தில் குவாட்ராடோ மீண்டும் அதிவேகமாக பந்தை எடுத்து செல்ல அவரிடமிருந்து பந்து கிளியர் செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் அபாரமாக பந்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்த குவாட்ராடோ, புறப்பகுதியிலிருந்து வெட்டி உள்ளே வந்து கோலை நோக்கி அடித்த ஷாட் கோலை விட்டு சில அடிகளே விலகிச் சென்றது. அதில் பிரேசில் கோல் கீப்பரின் கை பட்டதால் கார்னர் வாய்ப்புக் கிடைத்தது குவாட்ராடோவே கார்னர் ஷாட்டை அடித்தார் அதனை பிரேசில் எளிதில் ஊதியது.

அப்போதே புரிந்து விட்டது இது சாதாரணக் கால்பந்தாட்டம் அல்ல என்பது. இருபுறமும் நாம் தொடர முடியாத அளவுக்கு இரு நாட்டு வீரர்களும் பந்தை எடுத்து சென்று கோல் கீப்பர்களுக்கு சில நெருக்கடியான தருணங்களைக் கொடுப்பார்கள் என்பதை எதிர்பார்க்க முடிந்தது. அதுதான் நடந்தது.

இது போன்ற வெறித்தன ஆட்டத்தில் இரண்டு முறை பிரேசில் வீரர் ஹல்க்கிற்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கொலம்பிய கோல் கீப்பர் சரி நிகர் சமமாக விளையாடினார். ஹல்க் எப்போதும் கோல் அடிப்பதில் குறியாக இருந்தார்.

டேனி அல்வேசுக்குப் பதிலாக வலது புறத்தைக் கட்டுப்படுத்தும் புதிய வீரர் மைகான், அல்வேசை விடத் தான் ஒரு ஆக்ரோஷ வீரர் என்பதை நிரூபித்தார் அடிக்கடி பந்தை வலது புறத்திலிருந்து தனது அபார வெட்டி ஆடும் திறமையினால் ஒவ்வொரு நிமிடமும் கொலம்பிய எல்லைக்குள் பந்தைக் கொண்டு சென்று கொண்டேயிருந்தார்.

ஆஸ்கார் நிலையாக ஒரு இடத்தில் நிற்காமல் சுற்றித் திரிந்தபடியே இருந்தார். இவரது இந்த ஆட்டம் காரணமாக கொலம்பிய வீரர்களுக்கு பந்தை கட்டுப்படுத்தி தங்கள் இஷ்டத்திற்குப் பாஸ் செய்ய போதிய காலமும் இடமும் கிடைக்கவில்லை.

இந்த பிரேசில் அணி கொலம்பியாவை கடைசி வரை செட்டில் ஆகவிடவில்லை. இதுதான் கொலம்பியா மற்ற அணிகளுக்கு எதிராக ஆடிய ஆட்டத்திற்கும் பிரேசிலுடன் ஆடியதற்கும் உள்ள வித்தியாசம்.

ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் கொலம்பிய கோல் கீப்பர் ஆஸ்பினோ கோல் கிக்கை அடிக்க விடாமல் அவரைத் தொந்தரவு செய்ததற்காக பிரேசில் கேப்டன் புக் செய்யப்பட்டார் இதனால் அவர் அரையிறுதியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்குச் சில நிமிடங்கள் கழித்து கொலம்பிய கேப்டன் மரியோ யெபெஸ் அபாராக கொண்டு வரப்பட்ட பந்தை கோலுக்குள் அடித்தார். ஆனால் நடுவர் சரியாக அதனை ஆஃப் சைடு என்று தீர்ப்பளித்தார்.

டேவிட் லூயிஸின் அசாத்தியமான வெற்றி கோல்:

ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் ரோட்ரிகஸ் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தார். பிரேசில் அணியினர் சாதுரியமாக பாஸ்களைச் செய்து ஹல்க்கிடம் பந்தை அடிக்க ஹல்க் அங்கு மார்க் செய்யப்படாதைக் கண்ட ரோட்ரிகஸ் சறுக்கிக் கொண்டு வந்து ஹல்க்கை ஃபவுல் செய்தார். 30 அல்லது 35 அடி ஃப்ரீ கிக் பிரேசிலுக்குக் கிடைத்தது.

ஃப்ரீ கிக்கிற்கு முன்னால் கொலம்பிய, பிரேசில் வீரர்கள் சுவர் போல் நெருங்கியும் சிதறலாகவும் நிற்க ஃப்ரீ கிக்கை அடிக்க டேவிட் லூயிஸ் வந்தார். அவர் வந்தா பந்தை ஓங்கி, தூக்கி அடித்தார், பந்து ராக்கெட் போல் கோலுக்குள் சென்றது அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. இந்த உலகக் கோப்பை போட்டிகளின் தலை சிறந்த ஃப்ரீ கிக் கோல் அது. டேவிட் லூயிஸ் உடனே மைதான மூலைக்குச் சென்று முட்டிக்கால் போட்டு கைகளை உயர்த்தி பிரேயர் செய்யத் தொடங்கினார். கேப்டன் தியாகோ சில்வா அவரைக் கட்டிப்பிடித்து அவரது தலையை வருடிக் கொண்டேயிருந்தார்.

காற்றில் சீறிப்பாய்ந்து எழும்பிச் சென்ற அந்த பந்து கோல் அருகே சொல்லி வைத்தாற்போல் சற்றே கீழிறங்கி கோல் வலையை அடித்தது. ஒருவரும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இதுதான் பிரேசிலின் வெற்றி கோல். மறக்க முடியாத ஒரு கோல்.

ரோட்ரிகஸின் 6வது கோல்!

இந்த கோலை அடித்த பிறகு கொலம்பிய ஆட்டத்தில் பேய் புகுந்தது. தொடர்ச்சியாக பிரேசில் கோல் பகுதிக்குள் புகுந்து அச்சுறுத்தினர். அப்படிப்பட்ட அச்சுறுத்தலில்தான், ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் கொலம்பிய நட்சத்திரம் ரோட்ரிகஸ் ஒரு பந்தை சக வீரர் பாக்காவிற்குத் தட்டி விட அவர் உறுதியான கோல்தான் என்று முன்னேறினார். கோலாகத்தான் அது ஆகியிருக்கும், ஆனால் பிரேசில் கோல் கீப்ப்ர் சீசரே ஃபவுல் செய்தார். நியாயமாகப் பார்த்தால் சிகப்பு அட்டை வழங்கப்பட வேண்டிய ஃபவுல் ஆனால் மஞ்சள் அட்டையுடன் தப்பித்தார். பெனால்டி கிக் கொலம்பியாவுக்கு வழங்கப்பட்டது.

ரோட்ரிகஸ் பெனால்டி கிக்கை கோலாக மற்றினார். கொலம்பியா 1- 2. ரோட்ரிகஸ் இந்த உலகக் கோப்பையில் தனது 6வது கோலை அடித்தார்.

அதன் பிறகு கொலம்பியா உயிரைக் கொடுத்து ஆடியும் பிரேசிலை முறியடிக்க முடியவில்லை. கொலம்பிய கோல் கீப்பரே அன்று ஸ்விட்சர்லாந்து கோல் கீப்பர் போல் தனது கோல் போஸ்ட்டை விட்டு நடுக்களத்தில் புகுந்து விளையாட ஆரம்பித்தார் ஆனால் அப்போதே பிரேசில் தனது தடுப்புச் சுவரை வலுப்படுத்தியது. ஒன்றும் செய்ய முடியவில்லை. பிரேசில் அணி கொலம்பியா அணிக்கு எதிராக தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது.

விசில் ஊதப்பட்டது. ரோட்ரிகஸ் கண்களில் கண்ணீர். இந்த உலகக் கோப்பையின் 5 போட்டிகளில் 6 கோல்களை அவர் அடித்துள்ளார். தங்க பூட் பரிசுக்கு உகந்தவர்தான் ஆனால் கொலம்பியா வெளியேறியது.

பிரேசில் அணிக்கு ஜெர்மனிக்கு எதிரான அரயிறுதியில் கடும் சிக்கலகள் உள்ளது. நெய்மார் காயம், அவரால் விளையாட முடியாது. கேப்டன் தியாகோ சில்வா மஞ்சள் அட்டைக் காண்பிக்கப்பட்டு அடுத்த போட்டியில் விளையாட முடியாது போனது.

ஆனால் பிரேசில் இன்று ஆடிய ஆட்டத்தைப் பார்க்கும்போது நெய்மார், சில்வா ஆகியோரை மட்டுமே நம்பி உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ளது போல் தெரியவில்லை. இவர்கள் இல்லாவிட்டால் இவர்களை விடவும் திறமை உடைய வீரர்கள் உள்ளே இருக்கிறார்கள் என்ற எண்ணத்தையே பிரேசில் வெளிப்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x