Published : 20 Jul 2014 03:25 PM
Last Updated : 20 Jul 2014 03:25 PM

டேல் ஸ்டெய்ன், மோர்கெல் வேகத்தில் இலங்கை படுதோல்வி: ஆம்லா தலைமையில் முதல் டெஸ்ட்டிலேயே வெற்றி

கால்லே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை தென் ஆப்பிரிக்கா அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடையச் செய்துள்ளது.

இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்று முன்னிலை பெற்றது. தனது தலைமையின் கீழ் முதல் டெஸ்ட் போட்டியிலேயே வெற்றி தேடித் தந்துள்ளார் ஹஷிம் ஆம்லா.

138/2 என்ற நிலையில் வெற்றி இலக்கான 370 ரன்களை எடுக்க இலங்கை நிச்சயம் போராடி தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்டெய்ன், மார்கெல் ஜோடியின் வேகத்தில் இலங்கை 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 153 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

தென் ஆப்பிரிக்கா இலங்கையில் பெற்ற 3வது டெஸ்ட் வெற்றியாகும் இது. நேற்று ஆட்டத்தை முடிக்கும் போது 110/1 என்று நல்ல நிலையில் இருந்தது இலங்கை.

தென் ஆப்பிரிக்கா வெற்றிக்குக் குறுக்கே வழக்கம்போல் சங்கக்காரா நின்றார். ஆனால் அவர் 76 ரன்கள் எடுத்து டுமினியின் ஷாட் பிட்ச் பந்தை கேட்ச் கொடுத்து வெளியேறினார். சங்கக்காராவுக்கு மோர்கெல் பந்தில் டி காக் கேட்ச் ஒன்றை கோட்டைவிட்டார். ஆனாலும் தளராத தென் ஆப்பிரிக்கா அவருக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தது.

வழக்கம் போல் இன்று ஸ்டெய்ன், மோர்கெலை வைத்துத் தொடங்கினார் ஹஷிம் ஆம்லா. முதல் ஓவரிலேயே குஷால் சில்வா மோர்கெல் பந்தில் அடி வாங்கினார். பிறகு பீட்டன் ஆனார். டேல் ஸ்டெய்ன் பந்தை சங்கக்காரா எட்ஜ் செய்ய அது ஸ்லிப் கையில் செல்லவில்லை.

ஆனால் 2வது ஓவரில் டேல் ஸ்டெய்ன் பந்தை ஆட முயன்று எட்ஜ் செய்தார் குஷால் சில்வா பந்து விக்கெட் கீப்பர் டி காக்கிடம் செல்ல அவர் அபாரமாக வலது புறம் பாய்ந்து ஒரு கையில் கேட்ச் பிடித்தார்.

பிறகு பிலாண்டர், தாஹிர் பந்து வீச வந்தனர். ஆனால் பயனில்லாமல் போக, மீண்டும் மோர்கெலையே நம்பினார் ஆம்லா. அவர் வந்தவுடன் ஜெயவர்தனே (10) அவுட் ஆனார்.

அதன் பிறகுதான் டுமினி வந்தார். ஷாட் பிட்ச் பந்து ஒன்றை வீசினார். அதாவது கிட்டத்தட்ட அரைப் பிட்சில் குத்திய ஷாட் பிட்ச் ஆகும் அது. அதனை எங்கு வேண்டுமானாலும் அடிக்கலாம், ஆனால் சங்கக்காரா குறிபார்த்து மிட்விக்கெட் ஃபீல்டர் கையில் அடித்து வெளியேறினார்.

திரிமன்னவை ஸ்டெய்ன் எட்ஜ் செய்ய வைத்து வெளியேற்றினார். தினேஷ் சந்திமாலுக்கு மோர்கெல் பவுன்சர் வீசினார் அவர் ஹுக் ஆட முயன்று விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார்.

இலங்கை விறுவிறுவென விக்கெட்டுகளை இழக்க கேப்டன் மேத்யூஸ் மட்டுமே நின்று கொண்டிருந்தார். முதல் இன்னிங்ஸில் 89 ரன்கள் எடுத்த மேத்யூஸ் இந்த முறையும் நின்றார் 27 ரன்கள் எடுத்தார். அவரை வீழ்த்த முடியவில்லை. மற்றொரு முனையில் பெரேரா, ஹெராத், லக்மல், எரங்கா ஆகியோர் வீழ்ந்தனர்.

மோர்கெல் 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், ஸ்டெய்ன் 45 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, டுமினி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஸ்டெய்ன் இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். ஸ்டெய்ன், மோர்கெல் இருவரும் இணைந்து 16 விக்கெட்டுகளை இந்தப் போட்டியில் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x