Published : 17 Apr 2014 12:28 PM
Last Updated : 17 Apr 2014 12:28 PM

மகளிர் ஹாக்கி: அயர்லாந்தை வீழ்த்தியது இந்தியா

அயர்லாந்தின் துல்பின் நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தைத் தோற்கடித்தது.

சாம்பியன்ஸ் சேலஞ்ச் ஹாக்கிப்போட்டி வரும் 27 முதல் மே 4-ம் தேதி வரை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ளது. அதற்குதயாராகும் வகையில் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது இந்திய அணி.

புதன்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தின் 4-வது நிமிடத்திலேயே அயர்லாந்தின் மெகான் பிரேஸர் கோலடித்தார். ஆரம்பத்திலேயே அந்த அணி முன்னிலை பெற்றதால் முதல் பாதி ஆட்டம் இந்தியாவுக்கு கடும் சவாலானதாக அமைந்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு கோல் எதுவும் கிடைக்கவில்லை.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டம் முழுவதுமாக இந்தியாவின் வசமானது. ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் (அதாவது 37-வது நிமிடம்) பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவுக்கு முதல் கோலை பெற்றுத்தந்தார் பூனம் ராணி. இதனால் ஸ்கோர் சமநிலையை எட்டியது.

அயர்லாந்து அணிக்கு 45-வது நிமிடத்தில் பெனால்டி வாய்பு கிடைத்தபோதும், அதை இந்திய வீராங்கனைகள் முறியடித்தனர். இதனால் 60-வது நிமிடம் வரை இரு அணிகளுமே 1-1 என்ற கணக்கில் சமநிலையிலேயே இருந்தன.

61-வது நிமிடத்தில் இந்தியா முன்னிலை பெற்றது. அந்த கோலை ரீது ராணி அடிக்க, அதைத் தொடர்ந்து 68-வது நிமிடத்தில் சுனிதா லகரா கோலடித்தார். இதனால் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x