Published : 26 Oct 2017 10:37 AM
Last Updated : 26 Oct 2017 10:37 AM

சாதனையாளர் சனா இக்பால் கார் விபத்தில் உயிரிழப்பு

இந்தியாவை பைக்கில் வலம்வந்து, தற்கொலைக்கு எதிராக பிரச்சாரம் செய்த பெண் சாதனையாளர் சனா இக்பால், கார் விபத்தில் உயிரிழந்தார்.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் சனா இக்பால். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் தற்கொலைக்கு எதிராக பைக்கில் சென்றபடி பிரச்சாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். மாணவர்கள், பெண்கள் தற்கொலைக்கு முயற்சிப்பதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சிகளை அளித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் தனது கணவர் அப்துல் நதீமுடன் காரில் டோலிசோவ்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

ஹைதராபாத்தின் நரசிங்கி பகுதியில் சென்று கொண்டிருந்த போது கார், சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சனா இக்பாலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அப்துல் நதீமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக நரசிங்கி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x