Published : 16 Jun 2023 01:36 PM
Last Updated : 16 Jun 2023 01:36 PM

ஹைபிரிட் மாடலில் நடைபெறும் ஆசிய கோப்பை: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மகிழ்ச்சி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி

லாகூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய 6 அணிகள் இதில் கலந்து கொள்கின்றன.

இம்முறை பாகிஸ்தான் அணி தொடரை நடத்துகிறது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்தது. இதைத் தொடர்ந்து ஹைபிரிட் மாடலில் தொடரை நடத்தும் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதை ஜெய்ஷா தலைமையிலான ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி இந்திய அணி பங்கேற்காத 4 ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறும். மீதம் உள்ள 9 ஆட்டங்கள் இலங்கையில் நடத்தப்படும். இதில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் ஒரே பிரிவில் உள்ளன. மற்றொரு பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் தலா இரு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்றில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். பாகிஸ்தானில் லாகூரிலும், இலங்கையில் கண்டி மற்றும் பல்லேகலேவிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.

“ஆசிய கோப்பை 2023 தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்துவது தொடர்பாக நாங்கள் முன்வைத்த யோசனையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்றுக்கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இதன் மூலம் இந்த தொடரை பாகிஸ்தான் நடத்துவது உறுதியாகி உள்ளது. என்ன இந்தியா, பாகிஸ்தான் வர மறுத்த காரணத்தால் இரு நாடுகளுக்கும் பொதுவாக உள்ள இலங்கையில் சில போட்டிகள் நடத்தப்படுகிறது.

எங்கள் ரசிகர்கள் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி, பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதைப் பார்க்க ஆர்வமாக இருந்தனர். ஆனால், அது நடக்கவில்லை. பிசிசிஐ-யின் நிலை எங்களுக்குப் புரிகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை போலவே பிசிசிஐ-யும் எல்லை தாண்டி வர அரசின் அனுமதி பெற வேண்டி உள்ளது.

இந்தப் பின்னணியில் ஹைபிரிட் மாடல் சிறந்த தீர்வாக அமைந்துள்ளது. அந்த வகையில் ஆசிய கோப்பை தொடர் திட்டமிட்டபடி சிறப்பாக நடத்தப்படும். அதற்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம். அடுத்து வரும் 20 மாதங்கள் துணை கண்டத்தை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரியான ட்ரீட் கிடைக்கும் என நம்புகிறேன். கடந்த 15 மாத காலமாக இருநாட்டு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. வரும் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரும் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. நிச்சயம் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை எங்கள் தரப்பில் இருந்து வழங்குவோம்.

இது அனைத்தும் கிரிக்கெட் எனும் ஒற்றைப் புள்ளியில் இணைந்து நிற்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் ஒற்றுமையை வெளிக்காட்டுகிறது. வரும் நாட்களிலும் இந்தப் பயணம் இப்படியே தொடரும். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா முன்னெடுத்த நடவடிக்கைகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன்” என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்திய அணி ஆசிய கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் வரவில்லை என்றால் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது என சொல்லப்பட்டது. தற்போது அதற்கு ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x