Last Updated : 26 Jul, 2014 09:20 AM

 

Published : 26 Jul 2014 09:20 AM
Last Updated : 26 Jul 2014 09:20 AM

கட்டிடத்தின் உறுதி: யார் பொறுப்பு? - தி இந்து பட்ஜெட் வீடு கலந்துரையாடல்

சமீபத்தில் நடந்த மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்குப் பிறகு, இது போன்ற விபத்துகள் சம்பவிக்கும்போது சம்பந்தப்பட்ட ஆகியவை தொழிலாளர்களின் உரிமைகள், கட்டிடப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மத்திய பட்ஜெட்டில் ரியல் எஸ்டேட் துறை தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்புகளைப் பற்றி விவாதிக்கவும் பல்துறை வல்லுநர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு ‘தி இந்து’ கடந்த வாரம் ஏற்பாடு செய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டம் தொடர்பான செய்தி கடந்த சனிக்கிழமை இந்தப் பகுதியில் வெளியானது. அதன் தொடர்ச்சியாக இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

வெங்கடேசன், சென்னை கட்டுமானப் பொறியாளர் சங்கத் தலைவர்:

போலி டாக்டர்கள் பிடிபட்டார்கள் என்ற செய்தியை நாளிதழ்களில் படிக்கிறோம். ஆனால் போலிப் பொறியாளர்கள் பிடிபட்டார்கள் என்ற செய்தி மட்டும் வருவசில்லை. கட்டுமானப் பணிகளில் தகுதியான பொறியாளர்தான் ஈடுபட்டிருக்கிறாரா என்பதைக் கண்டறிய வழியில்லை.

தகுதியான பொறியாளர் ஆலோசனை இல்லாமல் கட்டுமானத்தைச் செய்வதைத் தவிருங்கள். புதிய கட்டிடங்களைக் கட்டும் பொறியாளர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையை உருவாக்க வேண்டும்.

ஒரு கட்டிடத்தைக் கட்டி முடிப்பதற்குள் சுமார் 12 துறை களிடம் சென்று அனுமதி பெற வேண்டியுள்ளது. அனுமதிக்காகப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. அதனால், அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் பெறக்கூடிய ஒற்றைச் சாளர முறையை ஏற்படுத்த வேண்டும். கொஞ்சம் கூடுதல் தொகை செலுத்தினால், குறுகிய காலத்தில் அனைத்து அனுமதியும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது அரசுக்கு வருவாயும் கூடும்.

நந்தகுமார், மாநிலத் தலைவர், இந்திய ரியல் எஸ்டேட் கட்டுநர்கள் கூட்டமைப்பு (கிரெடாய்):

நம் நாட்டில் தேர்ந்த தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. தேசிய கட்டிடச் சட்டத்தின்படி ஒரு தொழிலாளர் இத்தனை மணி நேரத்தில் இவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்ற வரைமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலானோரிடம் அத்திறமை இருப்பதில்லை. எனினும்,

விதிகளில் குறிப்பிடப் பட்டுள்ளதைவிட அதிக ஊதியத்தையே, அதாவது, ரூ.750 வரை தருகிறோம். திறன் குறைந்த தொழிலாளர்களை வைத்து ஒரு கட்டிடத்தை கட்டி முடிப்பதற்குள் பல விஷயங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆயினும் தரமான கட்டிடத்தைக் கட்டிவிட்டோம் என்று திருப்தி ஏற்படுவதேயில்லை.

நிலத்தின் விலையும் யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல் தாறுமாறாக உயர்கிறது. ஒரு பகுதியில் வசிப்பவர் போகிற போக்கில் அதிக விலையை மற்றவர்களிடம் சொல்லிவிட்டுப் போவார். பிறகு அதே விலைக்கு நிலத்தை வாங்க வேண்டியிருக்கிறது. கடந்த 9-ம் தேதி சிமென்ட் விலை ரூ.260 ஆக இருந்தது. சிமென்ட் விலை உயராது என்று அரசு அறிவித்தது.

ஆனால் மறுநாளே ரூ.70 விலை உயர்த்தப்பட்டது. இவ்வாறாக அனைத்தும் கட்டுப்பாடில்லாமல் இருக்கையில், கட்டுநர்கள் மட்டும் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். சிமென்ட் விலை உயர்வைக் கண்டித்துப் போராட்டத்தைத் தொடங்கவிருந்த நிலையில் மவுலிவாக்கம் விபத்து நடந்தது.

அதனால், வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தற்காலிகமாகத் தள்ளிவைத்தோம். மீண்டும் அதை விரைவில் தொடங்குவோம். சிமென்ட், மணல், ஸ்டீல் ஆகியவற்றின் விலை 3 மாதங்களுக்கு ஒரு முறை அதிகரிக்கிறது. அதனால் வீடு வாங்குவதைத் தள்ளிப்போட வேண்டாம்.

எஸ்.பி. செந்தில்குமார், நிர்வாக இயக்குநர், ஜனனி ஹோம்ஸ்:

நிலத்தின் விலை சதுர அடிக்கு ரூ.1700 என்று வைத்துக்கொண்டாலும், கட்டுமானச் செலவு ரூ.2000 என வைத்துக்கொண்டாலும், அதனைச் சதுர அடிக்கு ரூ.100 லாபம் வைத்து விற்போம். ஆனால் திட்ட அனுமதி, இதர அனுமதி ஆகியவற்றுக்குப் போய் பல மாதம் கழித்து வருவதற்குள், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துவிடுகிறது. அதற்கு, அந்த இடத்தில் கட்டிடத்தைக் கட்டாமல், நிலத்தை விற்றிருந்தாலேயே லாபம் கிடைத்திருக்கும் என எண்ணத் தோன்றும். எனவே, திட்ட அனுமதி தருவதைத் துரிதப்படுத்த வேண்டும்.

கர்னல் நல்லதம்பி, கட்டிடக் கட்டமைப்பு ஆலோசகர்:

கனவு இல்லத்தை ரூ.50 லட்சம் போட்டு வாங்குகிறோம். ஆனால், அது உறுதியானதென்று யாருக்காவது தெரியுமா? படுக்கை அறையை எங்கே வைப்பது, சமையலறை எங்கே என்று வாஸ்து பார்த்து வீட்டை வாங்கும் நாம், அதன் உறுதித்தன்மையை ஆராய்ந்து பார்ப்பதில்லை.

ஒரு 19 அடுக்குமாடிக் கட்டிடத்தை கட்டும்போது, அதன் 8-வது மாடியில் கட்டிய நபர், வாஸ்து நிபுணர் பேச்சைக் கேட்டுக்கொண்டு ஒரு தூணை இடித்துவிட்டார். கட்டிடத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. டாக்டரிடம் சென்று சோதித்துக்கொண்டால், புதிய நோய் இருந்தால் தெரிந்துவிடும் என்று அச்சப்படுவதுபோல், கட்டிடக் கட்டமைப்பு நிபுணரைப் பார்த்து ஆலோசனைக் கேட்க பயப்படுகின்றனர்.

மேலும், பில்டரிடமிருந்து கட்டிட வடிவமைப்பு வரைபடத்தைப் பெரும்பாலானோர் வாங்குவதில்லை. பிற்காலத்தில், கட்டிடத்தில் பிரச்சினை என்று வரும்போது, அந்த வரைபடம் இல்லாமல் அதைச் சரிப்படுத்துவது சிரமம். எனவே, சிஎம்டிஏ, மாநகராட்சித் திட்ட அனுமதி ஒப்புதலை எப்படிப் பாதுகாத்து வைத்திருக்கிறோமோ அதுபோல், கட்டிடக் கட்டமைப்பு வரைபடத்தையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

அகஸ்டின், பேராசிரியர், கட்டுமானத்துறை, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்:

தமிழகத்தில் கட்டிடக் கட்டமைப்பு மற்றும் அஸ்திவாரப் பொறியாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பிடம் சான்றிதழ் பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும். எல்லாக் கல்லூரிகளுமே தரமான மாணவர்களை உருவாக்கிவிடுவதில்லை. எனவே, கட்டுமானப் பொறியாளர்களுக்கு அகில இந்திய அளவில் தேர்வு வைத்து அவர்களுக்கு அIங்கீகாரம் வழங்க வேண்டும்.

சென்னை, நிலநடுக்கப்பகுதி மூன்றில் வருகிறது. இங்கு குறைந்தபட்சம், ஐஎஸ்13920 விதிப்படி, 5 மீட்டருக்கு மேல் உள்ள ‘பீம்’, ‘ஸ்பேனு’க்கு கம்பிகள் 300 மி.மீ.க்கு மேல் கனமானதாக இருக்க வேண்டும். இது சாதாரண அடிப்படை விதி. இதை வைத்துப் பார்த்தாலே சென்னையில் பாதிக்கட்டடிங்கள் தேறாது. கட்டிடத்தின் பாதுகாப்புக்கு பில்டர் மட்டுமே பொறுப்பல்ல. கட்டிடக் கட்டமைப்புப் பொறியாளர்தான் அங்குலம், அங்குலமாகச் சரிபார்க்க வேண்டும். அதுபோல் அஸ்திவாரப் பொறியாளருக்கும் பெரும் பொறுப்பு உள்ளது.

அசித் மேத்தா, பிரின்ஸ் பவுன்டேஷன் இயக்குநர்:

அரசுக் கட்டிடங்களைக் கட்டுவோர் மட்டும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதுபோல், தொழில்நுட்பத் திறன் கொண்டவர்களே கட்டுமானத் துறையில் ஈடுபடுவதை உறுதிப்படுத்த வேண்டும். அரை கிரவுண்ட் இடம் இருந்தால் போதும், நான் ஒரு பில்டர் என்று கூறிக்கொண்டு இத்தொழிலில் இறங்கிவிடுகிறார்கள். எனவே, இத்துறை வல்லுநர்களுக்குக் குறைந்தபட்ச தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டும்.

டி.சிட்டிபாபு, தலைவர், அக் ஷயா ஹோம்ஸ்:

சென்னைக்கு வெளியே தரமான வீடுகளைக் குறைந்த விலையில் கட்டித் தரத் தயாராக இருக்கிறோம். ஆனால், மின்சாரம், சாலை, போக்குவரத்து வசதி, பொழுதுபோக்கு வசதிகள் இருக்காது. எனவே, பில்டர்களே நுகர்வோருக்குத் தேவையான வசதிகளை முடிந்தவரை முயல வேண்டும். ஆனால், அதற்கு நிலத்தின் விலையைக் கட்டுப்படுத்த அரசு முன்வர வேண்டும்.

ஸ்வேதா மதுசூதனன், கட்டிடக் கலைத் துறைத் தலவைர், எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்:

நிலத்தை அதிக விலை போட்டு வாங்கிவிட்டோம். அதனால் கட்டுமானச் செலவை முடிந்தவரை குறையுங்கள் என்று பலர் கேட்கின்றனர். கட்டிடத்துக்குப் பல்வேறு அனுமதிகள் வாங்குவதில் சிரமம் உள்ளது. எனவே, ஆன்லைனில் அனுமதி உடனடியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிடம் கட்டப்படும்போது சிஎம்டிஏ அதிகாரிகள் ஒவ்வொரு கட்டத்திலும் சோதித்துப் பார்க்க வேண்டும்.

செந்தில்குமார் (குறுக்கிட்டு): அப்படியானால் தாமதம் ஏற்பட்டுக் கட்டிடம் கட்டி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். கட்டிடங்களை உறுதியாகக் கட்ட பில்டர்கள்தான் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நந்தகுமார்: சிஎம்டிஏ என்பது ஒரு திட்ட அனுமதி வழங்கும் துறை. அதைக் கண்காணிக்கும் ஏஜென்சியாக நினைக்கக் கூடாது. பில்டர்கள்தான் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

ஸ்வேதா மதுசூதனன்:- ஒரு கட்டிடத்தைக் கட்டும் வெவ்வேறு வல்லுநர்களுக்கிடையே லிங்க் இல்லை. அனைவரும் ஒன்று சேர்ந்து கட்டிடத்தை உருவாக்க வேண்டும். இதற்கெனப் பதிவு பெற்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.

செந்தில்குமார்: கட்டிடம் வாங்குவோர், பில்டரிடம் நீங்கள் தகுதியானவரா எனக் கேட்க முடியாது. எனவே, பதிவு பெற்ற அமைப்பை அரசு உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிட்டிபாபு , அக் ஷயா பிரைவேட் லிமிட்டெட், தலைவர்:

கட்டிடத்தின் உறுதித்தன்மைக்கு பில்டர்தான் பொறுப்பு. இடத்தைத் தேர்வு செய்யும்போது காட்டும் ஆர்வத்தை, தொழில்நுட்ப நிபுணர் களைத் தேர்வு செய்வதிலும் காட்ட வேண்டும். அந்தப் பொறுப்பை நாம்தான் (பில்டர்கள்) எடுத்துக்கொள்ள வேண்டும். சிஎம்டிஏவை எல்லாவற்றுக்கும் நம்ப முடியாது. சென்னையில் ஆயிரம் கட்டிடடங்கள் ஒரே நேரத்தில் கட்டப்படுகின்றன. எல்லா இடங்களிலும் அவர்கள் சென்று ஆய்வு செய்வது சாத்தியமற்றது. இதனால் தாமதம் ஏற்பட்டு விலை உயர்வுதான் ஏற்படும்.

இதனை அனைத்து வல்லுநர்களும் ஆமோதித்தனர்.

கட்டிடத் தொழிலாளர்களின் உரிமைகள் என்னென்ன?

செந்தில்நாதன், மூத்த வழக்கறிஞர்:

கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளூர், வெளிமாநிலத்தவர் என்று இருவகைப்படுகிறார்கள். குறைந்த ஊதியம் காரணத்தால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிக அளவில் வரவழைக்கப்படுகிறார்கள். உள்ளூர்த் தொழிலாளர்களுக்கு ஓரளவுக்கு, இங்கிருக்கும் சங்கங்கள் பாதுகாப்பைத் தருகின்றன. ஆனால், வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு பிரச்சினைகளைச் சொல்வதற்கே மொழி முக்கியத் தடையாக இருக்கிறது. அவர்களைப் பாதுகாப்பதற்கான சட்டம், 1979-ம் ஆண்டிலேயே வந்துவிட்டாலும் போதிய விழிப்புணர்வு இல்லை.

அதன்படி, இந்தத் தொழிலாளர்கள் தங்குவதற்குக் கட்டுநர்கள் தக்க வசதி ஏற்பாடுத்தித் தர வேண்டும். கட்டுமானப் பணி நடக்கும் இடத்திலேயே தங்க வைக்கக் கூடாது (உரிய வசதிகள் பின்பற்றப்பட்டிருந்தால் 61 பேர் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கும்). அவர்களுடைய சுகாதாரம், சுற்றுச்சூழல், கல்வி அனைத்தையும் கட்டுநர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு இருந்தாலும் அதைப் பயன்படுத்திக்கொள்வதில் சிரமங்கள் உள்ளன.

உதாரணத்துக்கு பீகாரைச் சேர்ந்த ஒரு தொழிலாளி சென்னையிலேயே ஒரு கட்டிட விபத்தில் உயிரிழந்துவிட்டால், அவரது ஏழைக் குடும்பத்தினர் அங்கிருந்தபடி வழக்குப் போட முடியாது. அந்த முதலாளி பணத்தைச் செலுத்திவிட்டால், அதனை அவர்களது ஊரில் உள்ள நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ள வழி உண்டு. ஆனால் அப்படிச் செலுத்தாதபட்சத்தில் இறந்து போனவர்களின் உறவினர்கள் இங்கு வழக்குத் தொடர்ந்தால், அவர்கள் பலமுறை வந்து போக வேண்டியிருக்கும். பொதுவாகவே ஒரு தொழிலாளி இறந்துவிட்டாலோ, காயமடைந்துவிட்டாலோ, இழப்பீட்டுத் தொகையைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் கட்டுநர்கள் கொடுக்க வேண்டும். தொழிலாளர்கள் மத்தியில் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லை. அதைச் சிலர் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

மதன்மோகன், தொழிலாளர் கூடுதல் ஆணையர்:

கட்டுமானத் தொழிலாளர்களது பாதுகாப்பு, நல்வாழ்வு அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியம். உள்ளூர்த் தொழிலாளர்களைப் பொறுத்தவரை ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குமுறைச் சட்டமும், வெளி மாநிலத்தவர்களுக்கு மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்ந்தவர்கள் சட்டமும் பொருந்தும். இது பற்றித் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

“கட்டிட, இதர கட்டுமானச் சட்டம் 1996” அமலில் உள்ளது. ஒரு கட்டிடத்தைக் கட்டும்போது அதன் உரிமையாளர், தொழில் பாதுகாப்பு இயக்ககத்தை அணுகி, அவர்களிடம் தொழிலாளர்களுக்குச் செய்யப்பட்டிருக்கக்கூடிய வசதிகளை விளக்கி, “சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு திட்ட” ஒப்புதலைப் பெற வேண்டும். அப்படிப் பெறாமல் கட்டினால் அது தவறு.

இவை தவிர, கட்டுமானத்தின்போது ஒவ்வொரு தளத்திலும் ஏதேனும் ஒரு வண்ணத்தில் தளத்தின் எண்ணை எழுதி வைக்க வேண்டும். கட்டிடம் கட்டுவதற்கான சாரத்தை அமைப்பதற்கென விதிமுறைகள் உண்டு. அதன்படிதான் அமைக்க வேண்டும். தொழிலாளர்கள் கீழே விழுவதைத் தடுக்கவும், கட்டுமானப் பொருட்கள் விழாமலிருக்கவும். கட்டிடத்தைச் சுற்றிலும், பாதுகாப்பு வலை அமைக்கப்பட வேண்டும்.

இந்த விதிகளைக் கண்காணிக்கத் தொழிலாளர் துறையில் ஒரு பொறியாளர் குழு உள்ளது. இந்த விதிகள் பின்பற்றப்படாதபட்சத்தில், கட்டுமானப் பணியை நிறுத்த ‘ஸ்டாப் ஒர்க்’ நோட்டீஸ் தரும் அதிகாரம் அத்துறைக்கு உள்ளது.

கட்டுமானம் நடக்கும் இடங்களில் முதலுதவிப் பெட்டியும், மருத்துவ உதவி உடனடியாகக் கிடைக்கும் வகையிலும் இருக்க வேண்டும். வெளி மாநிலத் தொழிலாளர்களாக இருந்தால், அங்கீகாரம் பெற்ற மருத்துவர் அளித்த ரசீதைப் பெற்றுக் கொண்டு பணத்தைத் திரும்பத் தர வேண்டும். இது தொழிலாளியுடன் தங்கியுள்ள குடும்பத்தினருக்கும் பொருந்தும். 150 தொழிலாளர்கள் இருந்தால் அங்கு ஒரு ஆம்புலன்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர்களது குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க ஒருவரை நியமிக்க வேண்டும், வெளி மாநிலத்துக் குழந்தைகளாக இருந்தால் அவர்களது மொழியைப் பயிற்றுவிக்கும் ஆசிரியரை நியமிக்கச் சொல்கிறோம்.

தொழிலாளர்களை வேலைக்கு நியமிக்கும்போது, கட்டுமானத் தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்துகொள்ளும்படி அவர்கள் கட்டிட உரிமையாளர்களும், காண்டிராக்டர்களும் அறிவுறுத்த வேண்டும். அப்போதுதான், விபத்து நேரிடும்பட்சத்தில் உதவித்தொகையை எளிதில் பெற முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x