Published : 07 Jun 2023 08:14 AM
Last Updated : 07 Jun 2023 08:14 AM

WTC Final | ரிசர்வ் டே முதல் அதிக டிரா வரை - அறிக 10 தகவல்கள்

கோப்புப்படம்

லண்டன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இந்தப் போட்டி லண்டனில் உள்ள தி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 குறித்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்து பார்ப்போம்.

44 ரன்களும் ஆஸி.யும்: ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 1896ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 44 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. அதேவேளையில் 1938ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 903 ரன்களை ஆஸ்திரேலியா விட்டுக் கொடுத்துள்ளது. கடைசியாக 2019-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி கண்டிருந்தது.

ஓவலில் இந்திய அணி: இந்திய அணி ஓவல் மைதானத்தில் 2 வெற்றிகள், 5 தோல்விகள், 7 டிராக்களை பதிவு செய்துள்ளது. கடைசியாக 2021-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்த மைதானத்தில் 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

டிரா அதிகம்: ஓவல் மைதானத்தில் இதுவரை 104 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இங்கிலாந்து அணி 43 போட்டிகளில், வெளிநாட்டு அணிகள் 23 போட்டிகளிலும் வென்றுள்ளன. 37 போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.

டிரா ஆனால்? ஒருவேளை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி டிரா ஆகும் பட்சத்தில், கோப்பை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். புள்ளிப் பட்டியலில் முதலில் இருக்கும் அணிக்கு கோப்பை போன்ற விதிமுறைகள் எதுவும் இல்லை. ஆட்டம் டிரா ஆனால், நிச்சயம் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும்.

ரிசர்வ் டே இருக்கா? மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டால் மட்டும்தான், அந்த நேரத்தை ஈடுசெய்ய 6-வது நாளான ரிசர்வ் டே கொண்டு வரப்படும். மற்றபடி 5 நாட்களில் ஆட்டம் முடியவில்லை என்றால் ரிசர்வ் டே கொண்டு வரப்படமாட்டாது. போட்டியில் முடிவு கிடைக்காவிட்டால் ஆட்டம் டிரா என்றுதான் அறிவிக்கப்படும்.

நேதன் லயன் டாப்: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பந்து வீச்சில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயன் முதலிடத்தில் உள்ளார். அவர், 32 இன்னிங்ஸில் 83 விக்கெட்களை வேட்டையாடி இருந்தார். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் 26 இன்னிங்ஸில் 61 விக்கெட்களை கைப்பற்றி 3-வது இடத்தில் உள்ளார்.

2-வது இடம்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடரில் இந்தியா, நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்து 2-வது இடத்தை பிடித்திருந்தது.

முதன்முறையாக: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதன் முறையாக பொதுவான இடத்தில் டெஸ்டில் மோத உள்ளன.

இந்திய பேட்ஸ்மேன்கள் (2021-2023)

இந்திய பந்துவீச்சாளர்கள் (2021-2023)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x