

பழநி: ராட்சத கிரேன் உதவியுடன் அந்தரத்தில் தொங்கியபடி ‘வைர வேலுடன்’ பழநிக்கு பறவை காவடியில் வந்து கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன.26-ல் தொடங்கி பிப்.4-ம் தேதி வரை நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இந்நிலையில் தைப்பூச விழா முடிந்த பிறகும் கூட பழநிக்கு பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநி மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வியாழக்கிழமை காலை கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் 50-வது ஆண்டாக பழநிக்கு பாத யாத்திரையாக வந்தனர். அவர்கள் பழநி சண்முக நதியில் புனித நீராடி விட்டு அங்கிருந்து மலைக்கோயிலுக்கு புறப்பட்டனர். உடல் முழுவதும் அலகு குத்தி 2 ராட்சத கிரேன்கள் உதவியுடன் அந்தரத்தில் தொங்கியபடி பறவை காவடியில் வந்தனர். இதனை, பழநிக்கு வந்த மற்ற பக்தர்களூம், உள்ளூர் மக்களும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
வால்பாறை பக்தர்கள் பால், பன்னீர், தீர்த்த காவடி எடுத்தும், அலகு குத்தியும் கிரிவீதியில் வலம் வந்து மலைக்கோயிலில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். அப்போது, ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட, வால்பாறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வாங்கப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்பிலான வைரவேலை மலைக்கோயிலில் மூலவர் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.