மஹாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்

மஹாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்
Updated on: 
1 min read

ராமேசுவரம்: மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தனர்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு ஆடி, தை மற்றும் புரட்டாசி மாத அமாவாசை தினங்கள் மற்றும் மாத அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி, மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில் இன்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் வருகை தந்தனர். பின் இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, மறைந்த முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக சங்கல்பம், திதி, தர்ப்பணம் செய்தனர். சிலர் பிண்டமிட்டு, கோதானம், வஸ்திர தானம், அன்னதானம் செய்து பிதுர் கர்மா பூஜை செய்து வழிபட்டனர்.

பின்னர் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அமாவாசையையொட்டி ஆயிரகணக்கானோர் வருகை தந்ததால் ராமேசுவரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதனால் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 2 முதல் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பாதுகாப்பிற்காகவும், 700-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலில் புனித நீராட செல்லும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாமல் இருக்க, மரைன் போலீஸார் கடற்கரை ஓரம் ரோந்து படகுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மதுரை, திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து ராமேசுவரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மஹாளய அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்
“டெல்லி கைது நடவடிக்கைகள் ஜனநாயகத்தையே அழிக்கும் செயல்” - மு.க.ஸ்டாலின் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in