“டெல்லி கைது நடவடிக்கைகள் ஜனநாயகத்தையே அழிக்கும் செயல்” - மு.க.ஸ்டாலின் கண்டனம்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

Updated on: 
1 min read

சென்னை: “ஜனநாயகத்தைக் காப்பதற்காக எழும் குரலை ஒடுக்குவது ஜனநாயகத்தையே அழித்துவிடும்” என டெல்லியில் போராடுபவர்கள் மீதான கைது நடவடிக்கைகளைக் கண்டித்துப் பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இன்று டெல்லியில் அரங்கேறி வரும் நிகழ்வுகளும், அமைதிவழியில் போராடுபவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளும், நான் அனுபவித்த நெருக்கடிநிலைக் காலத்தின் வலிமிகுந்த நினைவுகளை மீண்டும் கண்முன் கொண்டுவருகின்றன.

டெல்லியிலும் நாடு முழுவதிலும் கைது செய்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள், மாணவர்கள், போராடும் இளைஞர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் போராடும் மாணவர்கள் மீது, பாஜகவின் கிளையாகச் செயல்பட்டுக்கொண்டு, காவல்துறை அடக்குமுறையை ஏவிவிடும் தவெக அரசையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

அமைதிவழியில் போராடுவதற்கான தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதலை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். எதிர்ப்பை வெளிப்படுத்துவது குற்றமல்ல. ஜனநாயகத்தைக் காப்பதற்காக எழும் குரலை ஒடுக்குவது ஜனநாயகத்தையே அழித்துவிடும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. அவர் பதவி விலகுவதோடு மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து பாதிப்புகளும் சரிசெய்யப்பட்டு, அதன் சுதந்திரமும் நேர்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இன்று (அக்.10) சிஜேபி சார்பில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தச் சூழலில் போராட்டத்துக்கு டெல்லி காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால், அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிஜேபி போராட்டம் 2.0

ஜந்தர் மந்தர் மற்றும் மத்திய டெல்லி பகுதியை இணைக்கும் பல்வேறு முக்கிய சாலை சந்திப்புகளில் டெல்லி போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

டெல்லியில் ஜந்தர் மந்தர் மற்றும் அந்த பகுதியை ஒட்டிய இடங்களில் காணப்படும் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் காவல் துறையினர், அவர்களை கைது செய்தும் வருகின்றனர். பெண்கள் அதிகளவில் இந்த போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்ற காரணத்தால் ‘பிங்க் மகளிர் காவல் படை’-யினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

சிஜேபி போராட்டத்தில் யூடியூபர் துருவ ராட்டி பங்கேற்க வாய்ப்புள்ளது என்று கருதப்படும் நிலையில், குருகிராமில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை போலீஸார் எங்கு கொண்டு சென்றுள்ளனர் என்ற தகவலும் கிடைக்கவில்லை. இதற்கு சிஜேபி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒற்றை நபரை காக்க மத்திய அரசு அதன் படை பலத்தை பயன்படுத்துகிறது. இதனால் டெல்லி முடங்கியுள்ளது என்று ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

அந்த வரிசையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

<div class="paragraphs"><p>மு.க.ஸ்டாலின்</p></div>
சிஜேபி ஜந்தர் மாந்தர் போராட்டம் 2.0: போலீஸ் கைது நடவடிக்கை - டெல்லி ஸ்தம்பிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in