

காரைக்கால்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் அமைந்துள்ள, பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான 5 தேர்கள் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
இதையொட்டி நேற்று முன்தினம் இரவு செண்பக தியாகராஜர் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து நீலோத் பாலாம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளும் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். பின்னர் தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனைக் காட்டப்பட்டு, நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது.
திருநள்ளாறு தொகுதி எம்எல்ஏ ஜி.என்.எஸ்.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி, நிர்வாக அதிகாரி (கோயில்கள்) ஆர்.சுப்பிரமணியன், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை மத் சிவகுருநாதன் தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நான்கு வீதிகளையும் சுற்றி வந்த தேர்கள், பின்னர் மாலையில் மீண்டும் நிலையை வந்தடைந்தன. தொடர்ந்து இரவு செண்பக தியாகராஜர் சுவாமி எண்ணெய்க்கால் மண்டபத்துக்கு எழுந்தருளினார். தேரோட்டத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று (மே 28) இரவு செண்பக தியாகராஜர் சுவாமி எண்ணெய்க்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்துக்கு எழுந்தருளல் மற்றும் சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளும் சகோபுர வீதியுலா நடைபெறுகிறது. நாளை இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.