

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66-வது பழக்காட்சி தொடங்கியது. ஒரு டன் பேரீச்சம்பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட டைனோசர்கள், குழந்தைகளையும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளன.
கோடை விழாவின் ஒரு பகுதியாக, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66-வது பழக்காட்சி நேற்று தொடங்கியது. இந்த ஆண்டு பழக்காட்சியின் சிறப்பம்சமாக 1 டன் எடை கொண்ட பேரீச்சம்பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட டைனோசர் சிற்பம் பூங்கா முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு பழவகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூராசிக் பார்க் நுழைவுவாயில், சிறிய வகை டைனோசர்கள், டைனோசர் முட்டை மற்றும் முட்டையிலிருந்து வெளிவரும் உயிரினங்கள், தாவரங்களை உண்ணும் டைனோசர்கள், டைனோசர் காலத்து பறவை போன்ற வடிவமைப்புகள் 4.5 டன் பழங்களைப் பயன்படுத்தி தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த வடிவமைப்புகள் குழந்தைகள், சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன. பல இடங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் 160 வகையான பழங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் அரசு, தனியார் மற்றும் போட்டியாளர் அரங்குகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் பழ வகைகளை அறிமுகப்படுத்தும் வகையில் கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத் துறை பணியாளர்கள் அதியமான் கோட்டை, இருவாச்சி பறவை, மரகதப் புறா, இரட்டை மயில், பவானி சாகர் அணை, கழுகு, வீணை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களை, பழங்களைக் கொண்டு அலங்கரித்து காட்சிப்படுத்தியுள்ளனர். இந்தக் கண்காட்சி வரும் 30-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.