

ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை சித்திரைத் திருவிழாவில் அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும்போது கள்ளழகருக்கு சாற்றுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த பூ மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கல பொருட்கள் இன்று (புதன்கிழமை) மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) தினசரி பூஜையின் போது ஆண்டாள் சூடிய மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
ஆண்டாள் சூடும் மாலையில் 108 திவ்ய தேச பெருமாளும் இருப்பதாக ஐதீகம். திருப்பதி பிரம்மோற்சவ கருட சேவை, ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம், மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் திருவிழா ஆகியவற்றில் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிந்தே பெருமாள் காட்சியளிப்பது வழக்கம்.
அதன்படி மதுரை சித்திரைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை (மே 1) காலை வைகை ஆற்றில் இறங்கும்போது கள்ளழகருக்கு அணிவிப்பதற்காக ஆண்டாள் சூடிக் கொடுத்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்களப் பொருட்கள் இன்று (புதன்கிழமை) மாலை மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பிரத்யேக மலர்களால் தொடுக்கப்பட்ட பிரம்மாண்ட மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கல பொருட்கள் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை அதிகாலை தல்லாகுளம் வெங்கடேச பெருமாள் கோயிலில் கள்ளழகர் தங்க குதிரையில் எழுந்தருளும் போது, ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பட்டு வஸ்திரம் ஆகியவை அணிந்து வைகை ஆற்றில் எழுந்தருள உள்ளார்.