

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் வீட்டில் 122 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் கடற்கரைராஜ் போட்டியிடுகிறார்.
இவர் சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி நிர்மலா, முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர்.
நேற்று முன்தினம் இரவு சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டிபகுதியில் திமுக வேட்பாளர் கடற்கரை ராஜுவை ஆதரித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பிரச்சாரம் செய்தார்.
வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில் தேர்தல் பணி தொடர்பாக பலர் வந்து சென்றனர். அதைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் நேற்று முன்தினம் இரவு வீடு புகுந்து 122 பவுன்தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
நேற்று காலையில் வீட்டிலிருந்த பீரோவை குடும்பத்தினர் பார்த்தபோது அதிலிருந்த நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து, கடற்கரை ராஜின் மகள் வத்சலாதேவி சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தடயவியல் நிபுணர் எஸ்ஐ சுரேஷ்குமார் தடயங்களைச் சேகரித்தார்.
மோப்ப நாயும் துப்புத்துலக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா விசாரணை மேற்கொண்டார். நகை திருட்டில் ஈடுபட்டோரைப் பிடிக்க காவல் ஆய்வாளர் துரைப்பாண்டி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.