திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.200 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்கள் காணிக்கை

சென்னையைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் வழங்கல்
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.200 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்கள் காணிக்கை
Updated on: 
2 min read

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு சென்னையை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியரும், வரா ஃபியூச்சர் எல்எல்பி நிறுவனத்தின் சேர்மனுமான வர்த்தமான் ஜெயின் எனும் பக்தர் இன்று ரூ.200 கோடி மதிப்புள்ள 121 கிலோ மதிப்பிலான 45 ரக தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்கினார்.

திருப்பதி ஏழுமலையானுக்கு அரசர் காலம் முதற்கொண்டு தற்போதைய அம்பானி காலம் வரை பலர் தங்கம், வைரம், வைடூரியம், வெள்ளி உள்ளிட்ட விலையுயர்ந்த ஆபரணங்களும், பணம், வீட்டு, மனை பத்திரங்கள், பங்கு சந்தை பத்திரங்கள் உட்பட ஏராளமான காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். இதுவரை திருப்பதி ஏழுமலையானுக்கு 650 டன் ஆபரணங்கள் உள்ளன. இதன் இன்றைய மதிப்பு சுமார் 10 ஆயிரம் கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் விலை மதிப்பிட முடியாத விலை உயர்ந்த வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம் போன்றவை உள்ளது.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த எல்எல்பி நிறுவனத்தின் சேர்மன் வர்த்தமான் ஜெயின் எனும் வெளிநாட்டு வாழ் இந்தியர், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே ஏழுமலையானுக்கு சிரசு முதல் பாதம் வரை அனைத்து ஆபரணங்களையும் காணிக்கையாக வழங்க உள்ளேன் என்பதை அறிவித்தார்.

ஏழுமலையானுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிஷேகம் முடிந்த பின்னர் 120 கிலோ எடையுள்ள ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. இவ்வாறு சுவாமிக்கு 3 ‘செட்’கள் உள்ளன. ஆதலால், இதே போன்று 4-வது ‘செட்’ வழங்கப்போவதாக வர்த்தமான் ஜெயின் அறிவித்திருந்தார். இதற்காக அர்ச்சகர்கள் மூலம் ஆபரணங்களின் அளவுகள் எடுக்கப்பட்டு அவற்றை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இவ்வாறு தயாரிக்கப்பட்ட 121 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்கள் இன்று காலை கன்டெயினர் லாரியில் மிகவும் பாதுகாப்பாக திருமலைக்கு வந்தடைந்தது. அதன் பின்னர் அவற்றை கோயிலில் உள்ள ரங்க நாயக மண்டபத்தில் பாதுகாப்பாக பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதியினர், நன்கொடையாளர் வர்த்தமான் ஜெயின் குடும்பத்தினர், தேவஸ்தான நிர்வாக அதிகாரி ரவிசந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி மற்றும் உயர் அதிகாரிகள் அந்த ஆபரணங்களை இன்று காலை ஊர்வலமாக கோயிலுக்குள் கொண்டு சென்று அங்கு சிறப்பு பூஜைகள் செய்து தேவஸ்தானத்துக்கு ஒப்படைத்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.200 கோடியே 6 லட்சம் என கூறப்பட்டது. இதில் மொத்தம் 47 ஆபரணங்கள் உள்ளன.

மூலவர் சுமார் 8.5 அடி உயரம் கொண்டவர். அதற்கு தகுந்தாற்போல் சுவாமிக்கு தங்க கிரீடம், கர்ண பத்திரங்கள், திருநாமம், சகஸ்ர 1008 தங்க காசு மாலை, அஷ்டோத்திர காசு மாலை, சத்ர்புஜ லட்சுமி ஹாரம், சந்திர ஹாரம், சங்கு, சக்கரம், லட்சுமி ஹாரம், கண்ட ஹாரம், தங்க பூணூல், மகா லட்சுமி பதக்கம், நாகாபரணம், புஜ கீர்த்திகள், வைகுண்ட ஹஸ்தம், கடி ஹஸ்தம், கங்கணங்கள், சூரிய கட்டாரி, கமர பட்டை, தங்க திருப்பாதங்கள் மற்றும் பத்ம பீடம் உள்ளிட்ட 47 ரக தங்க ஆபரணங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டது. தனி பக்தர் ஒருவர் வழங்கப்பட்ட காணிக்கைகளில் இதுவே திருப்பதி தேவஸ்தான் வரலாற்றில் முதன்மையானது என கூறப்படுகிறது.

வர்த்தமான் ஜெயின் ஏற்கெனவே 2025-ம் ஆண்டு ஜனவரி 19-ம் தேதி ரூ.6 கோடி, கடந்த ஆண்டு மே.16-ம் தேதி பக்தர்களுக்கான இலவச எலக்ட்ரிக் பேருந்துகளை திருப்பதி தேவஸ்தானத்துக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார். இவரது நிறுவனத்தில் வரும் லாபத்தில் ஒரு பங்கை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக வர்த்தமான் ஜெயின் தெரிவித்தார்.

திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.200 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்கள் காணிக்கை
தமிழகத்தில் மத்திய அமைச்சர்களின் நிகழ்வுகளை புறக்கணிக்க காவிரி உரிமை மீட்புக் குழு வலியுறுத்தல்

X