

திண்டுக்கல்: வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து 64 நாட்களுக்கு பிறகு, பழநி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை இன்று (செப்.22) காலை முதல் மீண்டும் தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல படிப்பாதை, யானைப் பாதை, மின் இழுவை ரயில் (வின்ச்) மற்றும் கம்பி வட ஊர்தி (ரோப் கார்) ஆகிய வசதிகள் உள்ளன. இழுவை ரயிலில் 7 நிமிடங்களிலும், ரோப் காரில் 3 நிமிடங்களிலும் மலைக்கோயிலை அடையலாம்.
பழநி மலையின் அழகை ரசித்தபடி, ரோப் காரில் செல்லவே பக்தர்கள் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். மாதந்தோறும் ஒரு முறையும், ஆண்டுதோறும் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக 50 முதல் 60 நாட்கள் வரை ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது.
அதன்படி, கடந்த ஜூலை 20-ம் தேதி முதல், வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், பக்தர்கள் படிப்பாதை, யானைப் பாதை மற்றும் வின்ச் ரயில் மூலம் மலைக்கோயிலுக்கு சென்று வந்தனர்.
புதிய ரோப் கார் பெட்டிகள்
ரூ.3 லட்சம் செலவில் ரோப் காரை இயக்குவதற்கு உதவும் ‘ஷாப்ஃட்’ கருவி, ரூ.30 லட்சம் செலவில் புதிதாக வாங்கப்பட்ட 8 ரோப் கார் பெட்டிகளை பொருத்தி கடந்த சில நாட்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது, எடை தாங்கும் திறனை சோதிக்கும் வகையில் ஒவ்வொரு பெட்டியிலும் தலா 312 கிலோ எடை கற்கள் வைத்து இயக்கப்பட்டன. இதனை, சென்னையில் இருந்து வந்த ரோப் கார் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்து, ரோப் காரை இயக்குவதற்கு அனுமதி வழங்கினர்.
இதையடுத்து, 64 நாட்களுக்கு பிறகு இன்று (செப்.22) காலை முதல் பக்தர்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கியது. முன்னதாக, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கோயில் இணை ஆணையர் (பொ) வெங்கடேஷ், கண்காணிப்பாளர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
மீண்டும் 4 பேருக்கு அனுமதி
புதிதாக வாங்கப்பட்டுள்ள பெட்டிகள் பக்தர்களுக்கு பாதுகாப்பானதாகவும், அதிக எடை தாங்கும் திறன் கொண்டதாகவும் இருப்பதாக சோதனை ஓட்டத்தில் தெரிய வந்தது. இதனால் ஒரே நேரத்தில் 16 பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்லவும், 16 பக்தர்கள் மலைக்கோயிலில் இருந்து அடிவாரத்துக்கு வரவும் வசதியாக மீண்டும் ஒரு பெட்டியில் 4 பேர் வரை செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த 2022-ல் புதிதாக வாங்கப்பட்ட ரோப் கார் பெட்டிகளில் ஒரு பெட்டி பாறையில் மோதியதால், அதனை அகற்றிவிட்டு பழைய பெட்டிகளை பொருத்தி இயக்கப்பட்டன. இந்த சம்பவத்துக்கு பிறகு பாதுகாப்பு கருதி 3 பேர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.