

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் நவராத்திரி பிரமோற்சவ விழாவின் 4-ம் நாளான நேற்று காலை, கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் நவராத்திரி பிரமோற்சவ விழாவின் 4-ம் நாளான நேற்று காலையில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் மலையப்பர் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மாட வீதிகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் பாரம்பரிய நடனமாடி பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தனர். ஊர்வலத்தில் யானை, குதிரை, காளைகள் முன்னே செல்ல, ஜீயர் குழுவினர், தேவஸ்தான அதிகாரிகள் கலந்துகொண்டனர். இரவு சர்வ பூபால வாகனத்தில் உற்சவர்கள் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இன்று கருட சேவை
நவராத்திரி பிரமோற்சவத்தின் 5-ம் நாளான இன்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்பர் எழுந்தருள உள்ளார். இரவு கருட சேவை நடைபெற உள்ளது.
கருட சேவைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், நேற்று மாலை 6 மணி முதலே திருமலைக்கு இருசக்கர வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கருட சேவைக்கு 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 2,500 தேவஸ்தான விஜிலென்ஸ் பாதுகாப்புப் படையினரும், ஆக்டோபஸ் கமாண்டோ படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.