

தி.நகர் ஸ்ரீபாரதி வித்யாஷ்ரமத்தில் ஹம்ச வாகன அலங்காரத்தில் நேற்று அருள்பாலித்த ஸ்ரீசாரதாம்பாள். | சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள் சந்நிதியில் நவராத்தியில் நடைபெறும் ராஜ தர்பார் காட்சி. (கோப்புப் படம்)
சென்னை: துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி எனும் தேவியரைப் போற்றிக் கொண்டாடுவதுதான் நவராத்திரி திருவிழா. நவராத்திரி என்பது ஓராண்டுக்கு 4 முறை வரும். அதில், புரட்டாசியில் வரும் நவராத்திரிதான் மிக விசேஷமாக கருதப்படுகிறது.
இதை ‘சாரதா சரண் நவராத்திரி’ என்பார்கள். இந்த நாட்களில் பெண்கள் வீட்டை அலங்கரித்து கொலுப்படியில் பொம்மைகளை வைத்து காலையிலும், இரவிலும் அம்மனை பூஜிப்பது வழக்கம்.
சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தில் இந்த நவராத்திரி உற்சவத்தை மிக விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். தென்னிந்தியாவில் 14-ம் நூற்றாண்டில் இந்து சாம்ராஜ்யமான விஜயநகரப் பேரரசு தோன்ற முக்கிய காரணமாக இருந்த சிருங்கேரி மடத்தின் 12-வது பீடாதிபதியான ஸ்ரீவித்யாரண்ய சுவாமிகள் காலத்தில் இருந்து விஜயநகர மன்னர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று, ஸ்ரீசாரதாம்பாள் சந்நிதியில் ராஜ தர்பார் உற்சவம் நடத்தும் வழக்கம் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது.
சிருங்கேரி போலவே, நாட்டின் பல்வேறு நகரங்களில் இருக்கும் மடத்தின் கிளைகளிலும் வைதிக முறைப்படி நவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீபாரதி வித்யாஷ்ரமத்தில் தினமும் காலையில் ஸ்ரீசாரதாம்பாளுக்கு விசேஷ பூஜைகள், மாலையில் சிறப்பு அலங்காரம், சுவாசினி மற்றும் கன்னியா பூஜைகள், ஹோமங்கள், சங்கீத மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
நிறைவு நாளான விஜயதசமி அன்று காலையில் குழந்தைகளுக்கு கல்வியை கற்றுத் தரும் அட்சராப்பியாசம் நடைபெறும். நவராத்திரி முதல் நாளான நேற்று ஹம்ச வாகன அலங்காரத்தில் ஸ்ரீசாரதாம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல, சென்னையில் மேற்கு மாம்பலம் கிருபா சங்கரி தெருவில் இருக்கும் மடம், ராஜா அண்ணாமலைபுரம், கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி வளாகம், ஜார்ஜ் டவுனில் இருக்கும் கிளை மடத்தின் கோயில்களிலும் நவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.