திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இக்கோயிலில், மூலவரான பார்த்தசாரதி பெருமாளுக்கு சித்திரை மாதத்திலும், மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் யோக நரசிம்மருக்கு ஆனி மாதத்திலும் பிரம்மோற்சவம் நடைபெறும்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவ விழா இன்று (25-ம் தேதி) தொடங்கியது. இதை முன்னிட்டு, நேற்று மாலை அங்​கு​ரார்ப்​பணம் எனும் முளை​யிடு​தல் நிகழ்வு நடை​பெற்​றது.

விழா முன்னேற்பாடுகளைப் பார்வையிடும் விதமாக, சேனாதி​காரி​யான விஷ்வக்​சேனர் மாட வீதி​களில் உலா வந்தார். இன்று அதிகாலை 2.30 மணி முதல் 3.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்​​கியது.

இதைத் தொடர்ந்து, 10 நாட்​களுக்​கு தின​மும் காலை, இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் நரசிம்ம பெருமாள் வீதி உலா நடைபெறும்.

பிரம்​மோற்​சவத்​தின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் ஜூலை 1-ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு திருத்தேரில் பெருமாள் எழுந்தருள்கிறார்.

பக்தர்கள் வடம்பிடிக்க, காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கும். அன்று இரவு 9 மணிக்கு தோட்டத் திருமஞ்சனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, பெரிய தங்கப் பல்லக்கில் லட்சுமி நரசிம்மர் திருக்கோலத்தில் வீதி உலா, ஆளும் பல்லக்கு மற்றும் தீர்த்தவாரி நிகழ்வுகள் நடைபெறும்.

ஜூலை 4-ம் தேதி இரவு 9.30 மணிக்கு சிறிய தேர் விழாவுடன் பிரம்மோற்சவ நிகழ்வுகள் நிறைவுபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் நித்யா உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்
மாமல்லபுரத்தில் மாணவியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் - 2 இளைஞர்கள் சிறையில் அடைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in