

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீரவசந்தராயர் மண்டப கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ்.
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தள்ளிப்போகாது, குறித்த தேதியில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று தெரிவித்தார்.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி. அதன்படி 2021-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. இதற்கிடையில் 2018 பிப். 2-ம் தேதி வீரவசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டு சேதமடைந்ததால் குறித்த காலத்துக்குள் கும்பாபிஷேகம் நடத்தவில்லை. தற்போது வீரவசந்தராயர் மண்டபப் பணிகளோடு கும்பாபிஷேக திருப்பணிகளும் நடந்து வருகின்றன.
கடந்த திமுக ஆட்சியின்போது வரும் செப். 17-ம் தேதிகாலை 7.45 முதல் 8.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. இதனால் கடந்த திமுக ஆட்சியில் குறித்த தேதியில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமா, மாற்றுத்தேதியில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கோயிலில் நடந்து வரும் கும்பாபிஷேகத் திருப்பணிகள், வீரவசந்தராயர் மண்டபப் பணிகளை நேற்று ஆய்வு செய்தார். அப்போது இணை ஆணையர் மாரியப்பன், கோயில் இணை ஆணையர் நா.சுரேஷ், உதவி ஆணையர் முத்துராமன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதன்பின்னர் அமைச்சர் ரமேஷ் கூறுகையில், மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகப் பணிகள் நடந்து வருகின்றன. திட்டமிட்ட தேதியில், திட்டமிட்ட நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதற்காக ஆய்வு செய்ய வந்துள்ளேன். வீரவசந்தராயர் மண்டப கட்டுமானப் பணிகளை பார்த்தேன். கும்பாபிஷேகப் பணிகளில் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன, மீதமுள்ள 10 சதவீத பணிகளை விரைந்து முடிக்க உள்ளோம்.
கும்பாபிஷேக விழா தள்ளிப் போகாது. குறித்த தேதியில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கும்பாபிஷேக விழா தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.