

பழநி: மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அக்ரஹாரங்களில் அதிகாலை பஜனை தொடங்கியது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி, இன்று (டிச.16) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன் யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, விநாயகருக்கு கலச நீர் அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல், பழநி திருஆவினன்குடி கோயில், பெரியநாயகி அம்மன் கோயில், மாரியம்மன் கோயில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், பெரியாவுடையார் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஜன.14 வரை மார்கழி மாதம் முழுவதும் பழநி முருகன் கோயில் மற்றும் உப கோயில்களின் நடை திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை பஜனை தொடக்கம்: தமிழ் மாதங்களில் முக்கியமானதாக தனூர் மாதம் எனப்படும் மார்கழி மாதம் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து இறை வழிபாடு செய்வது வழக்கம். மார்கழி மாதம் தொடங்கியுள்ளதை அடுத்து பழநி அருகேயுள்ள கலையம்புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் அதிகாலை பஜனை தொடங்கியது.
இப்பகுதியில் உள்ள ஸ்ரீ கல்யாணி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி கோயிலில் இருந்து தொடங்கி அஸ்டபதி, திருப்பாவை, திருவெம்பாவை போன்ற பாடல்களை பாடியபடி தெரு முழுவதும் பஜனை குழுவினர் வலம் வந்தனர். பஜனையின் நிறைவில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மார்கழி மாதம் முடியும் வரை பஜனை நடைபெறும் என, பஜனை குழுவினர் தெரிவித்தனர்.