

பயிற்சிக்கு வந்திருக்கும் இளைஞர்களுடன் செந்தில் குமரன் (முண்டாசு அணிந்திருப்பவர்).
கரூர் மாவட்டம் சுருமான்பட்டி கிராமத்தில் உள்ளது ‘வானகம்’. இயற்கை வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட இயற்கை வேளாண்மை பண்ணை இது. வறண்ட நிலத்தையும் இயற்கை வேளாண்மை மூலம் வளம் கொழிக்கும் பண்ணையாக மாற்ற முடியும் என்பதற்கு முன்மாதிரியாக விளங்குகிறது. இங்கு தன்னார்வலராகப் பணியாற்றியவர் பொறியாளர் செந்தில் குமரன்.
இன்று இயற்கை விவசாயத்தை பரவலாக்குவதையே தனது முழு நேரப் பணியாக மேற்கொண்டு வருகிறார். விவசாயத்தில் புதிதாக ஈடுபட ஆர்வமுடைய இளைஞர்களுக்கு விவசாயம் குறித்து பயிற்சி அளிக்கிறார்.
இதற்காக கோயம்புத்தூர், சூலூரில் 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, ‘செஞ்சோலை’ என்ற பெயரில் இயற்கை வேளாண்மை பயிற்சிகளத்தை உருவாக்கியிருக்கிறார். இவரது பணிகளை நேரில் பார்க்கும் அனைவருமே, இயற்கை விவசாயத்தைப் பரவலாக்குவதில் இவருக்கு இருக்கும் தீவிர ஆர்வத்தையும், இவரின் அர்ப்பணிப்பு மிகுந்த சேவையையும் கண்டு பிரமித்துப் போகிறார்கள்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘நிலமும் வளமும்’ வாசகர்களுக்காக தன்னுடைய பணிகள் பற்றி செந்தில் குமரன் பகிர்ந்து கொண்டார். நான் பொறியியல் கல்லூரியில் (B.E. - Instrumentation Engineering) படித்துக் கொண்டிருந்த போது நம்மாழ்வார் பற்றி அறிந்து கொண்டேன். அப்போதே நேரம் கிடைக்கும் போதெல்லாம் வானகம் சென்று தன்னார்வலராகப் பணியாற்றினேன்.
படிப்பு முடிந்து ஒரு நிறுவனத்தின் பணியில் சேர்ந்தேன். எனினும் எனது விருப்பமெல்லாம் விவசாயத்திலேயே இருந்தது. அதனால் வேலையிலிருந்து விலகி விட்டேன். நம்மாழ்வார் வழியில் இயற்கை வேளாண்மைப் பற்றி பிரச்சாரம் செய்வதையும், விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதையும் முழு நேரமும் செய்து வருகிறேன்.
இதற்கிடையே ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் 7 மலை கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளோடு பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்தக் கிராமங்களுக்கு சாலை வசதிகள் கிடைத்தவுடனேயே ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் அங்கு சென்றுவிட்டன.
அங்குள்ள மக்கள் ரசாயனங்களை அதீதமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். அமராவதி, ஆழியார் ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அந்தக் கிராமங்கள் உள்ளன. விவசாயிகள் பயன்படுத்திய ரசாயன உரங்கள் இந்த ஆறுகளை நஞ்சாக்கி விட்டன. ரசாயன பூச்சிக்கொல்லி நஞ்சுகள் அந்த ஆறுகளில் உள்ள மீன்களின் உடலிலும் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால் தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் அந்தக் கிராமங்களில் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இந்தப் பணிகளுக்காக சுமார் ஒன்றரை ஆண்டுகள் அந்தக் கிராமங்களில் தங்கி விவசாயிகளுடன் பணியாற்றினேன்.