

| படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: ஆழ்வார்பேட்டை குழந்தை முத்துக்குமார சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மிகவும் பழமையான குழந்தை முத்துக்குமார சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வடபழனி முருகன் கோயிலின் உபகோயிலான இதனை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டது.
அதன்படி, சிற்ப சாத்திர முறைப்படி நூதன கொடிமரம் நிறுவப்பட்டு, திருப்பணிகள் அனைத்தும் முழுமையாகப் பூர்த்தியடைந்த நிலையில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, நேற்று முன்தினம் காலை யாகசாலை வளர்க்கப்பட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேசபலி, யந்திர சமர்ப்பணம், விக்கிரக பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல் ஆகிய வைபவங்கள் நடைபெற்றன.
மாலையில் அங்குரார்ப் பணம் எனும் முளைப்பாரியிடுதல், ரக் ஷாபந்தனம், முதற்காலயாகசாலை பூஜைகள், பூர்ணா ஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
சென்னை ஆழ்வார்பேட்டை குழந்தை முத்துக்குமாரசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. காலை 9 மணிக்கு பூர்ணாஹூதி நிறைவடைந்து, அதனைத் தொடர்ந்து யாத்ராதானம், கடப்புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, காலை 10 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மூலவர் குழந்தை முத்துக்குமார சுவாமி, பரிவார தெய்வங்களான விநாயகர், தட்சிணாமூர்த்தி, சிவலிங்கம், அம்பாள், சண்டிகேஸ்வரர் சந்நிதிகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
வடபழனி முருகன் கோயில் தலைமை சிவாச்சாரியார் செல்வம் தண்டபாணி தலைமையில் சிவாச்சாரியார்கள் இந்த கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
இந்த விழாவில் வடபழனி முருகன் கோயில் தக்கார் எல். ஆதிமூலம், துணை ஆணையர் லட்சுமி, சென்னை முழுவதிலு மிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அவர்கள் மீது புனித கும்ப நீர் தெளிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, நேற்று மாலை மூலவருக்கு விசேஷ அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.