

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக கருட சேவை நேற்று நடைபெற்றது. படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி, கருட வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி சுவாமி கோயிலில், இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
தொடர்ந்து, புன்னைமர வாகனம், சேஷ வாகனம், சிம்ம வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை 5 மணி அளவில், கம்பீரமான கருட வாகனத்தில் பார்த்தசாரதி பெருமாள் எழுந்தருளினார். சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு, வடக்கு குளக்கரை தெரு மற்றும் தெற்கு மாட வீதிகள் வழியாக சுவாமி வீதி உலா வந்தபோது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என முழக்கமிட்டு சுவாமியை தரிசித்தனர்.
தொடர்ந்து, பகல் 12 மணி அளவில் ஏகாந்த சேவையும், இரவு அம்ச வாகனத்தில் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் தொடர்ச்சியாக, இன்று காலை சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
நாளை (மே 5) நாச்சியார் திருக்கோலம் உற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவின் மிக முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 7-ம் தேதி காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.
அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரில் பார்த்தசாரதி சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வரவுள்ளார். இதற்காக தேரை தயார் செய்யும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.