

துலா ஸ்நானத்தை முன்னிட்டு, திருப்பராய்த்துறை அகண்ட காவிரி ஆற்றில் நேற்று புனித நீராடிய பக்தர்கள். படம்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி/ மயிலாடுதுறை: ஐப்பசி மாத பிறப்பையொட்டி திருப்பராய்த்துறை அகண்ட காவிரி, மயிலாடுதுறை துலா கட்டத்தில் நேற்று துலா ஸ்நானம் நடைபெற்றது. இதில், அஸ்திரதேவருடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர்.
துலா மாதமான ஐப்பசி மாதத்தில் காவிரி நதியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர். ஐப்பசியில் காவிரியில் நீராடினால் பாவங்கள் தீரும், குடும்பத்துக்கு நன்மைகள் வந்து சேரும் என்பது மக்களின் நம்பிக்கை.
இதில், ஐப்பசி முதல் நாளில் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் அகண்ட காவிரியில் முதல் முழுக்கு நிகழ்வும், ஐப்பசி கடைசி நாளில் மயிலாடுதுறையில் கடை முழுக்கு நிகழ்வும் நடைபெறும்.
அந்த வகையில், திருப்பராய்த்துறை காவிரி கரையில் உள்ள தாருகாவனேஸ்வர் கோயிலில் ஐப்பசி முதல் நாளான நேற்று காலை மூலஸ்தான சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதன்பிறகு 2 வெள்ளி ரிஷப வாகனங்களில் சோமாஸ்கந்தர், அம்மன் மற்றும் பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேஸ்வரர் எழுந்தருளி, திருக்கைலாய வாத்தியங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் வீதியுலாவாக அகண்ட காவிரியை வந்தடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, கோயிலில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களால் காவிரி ஆற்றில் ஊற்றப்பட்டது. தொடர்ந்து, அஸ்திரதேவருக்கு விபூதி, மஞ்சள், சந்தனம், இளநீர், அரிசி மாவு, பால், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, பின்னர் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. அப்போது, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் காவிரி ஆற்றில் புனிதநீராடி, சுவாமி- அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
மயிலாடுதுறையில்.. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் துலா உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டு நேற்று துலாக் கட்ட காவிரியில் தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் தொடங்கியது.
மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நேற்று நடைபெற்ற தீர்த்தவாரியையொட்டி அஸ்திர தேவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
இதையொட்டி, திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மயூரநாதர், அறம்வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான படித்துறை விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், தெப்பக்குள காசிவிஸ்வநாதர் ஆகிய சுவாமிகள் காவிரியின் தென்கரையிலும், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர், காசி விஸ்வநாதர் ஆகியோர் பஞ்சமூர்த்திகளுடன் காவிரி வடக்கு கரையிலும் எழுந்தருளினர்.
தொடர்ந்து, அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர், துலா கட்ட காவிரியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
இதில், திருவாவடுதுறை ஆதீன கட்டளை விசாரணை வேலப்ப தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, நவ.7-ம் தேதி கொடியேற்றம், நவ.8-ம் தேதி அமாவாசை தீர்த்தவாரி, நவ.13-ம் தேதி திருக்கல்யாணம், நவ.15-ம் தேதி தேரோட்டம், நவ.16-ம் தேதி கடைமுக தீர்த்தவாரி ஆகியவை நடைபெற உள்ளன.