

புதுச்சேரி: வீராம்பட்டினம் தேரோட்டத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் தேரினை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் செங்கழுநீரம்மனை தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற செங்கழுநீர் அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் ஆடி பெருவிழா கொடியேற்றம் கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து நாள்தோறும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் செங்கழுநீர் அம்மன் எழுந்தருளி, வாண வேடிக்கைகளுடன் வீதி உலா நடந்தது.
ஆடி பெருவிழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் இன்று நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தேரினை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்து, அம்மனை வழிபட்டனர்.
பக்தர்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரினை இழுத்துச் சென்றனர். தேரானது வீராம்பட்டினம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து நிலையை அடைந்தது.
இந்நிகழ்வில் சட்டப்பேரவையின் தற்காலிக தலைவர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜவேலு, சிவகொழுந்து, எம்எல்ஏக்கள் மோகன்தாஸ், ராமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேர்த் திருவிழாவையொட்டி வீராம்பட்டினம் வழிநெடுகிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீஸார் என 400 பேர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை குழுவினரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்து நெரிசலைத் தடுக்க அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தேர்த் திருவிழா காரணமாக புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.