

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் போகர் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உள்ள மூலவர் சிலை போகர் சித்தரால் பல்வேறு மூலிகைகள் அடங்கிய நவ பாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. போகர் சித்தர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்தார்.
ஜூன் 12-ம் தேதி வெள்ளிக்கிழமை (இன்று) அவரது ஜெயந்தி விழாவையொட்டி, பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உள்ள போகர் சந்நிதியில் உச்சிக் கால பூஜையின் போது போகர் வணங்கிய புவனேஸ்வரி அம்மன், மரகத லிங்கத்திற்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
இதில் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து, மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி சித்தர் ஆசிரமத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு மலர் வழிபாடு, 6.30 மணிக்கு 108 பரணி தீப விளக்கு பூஜை நடைபெற உள்ளது. பழநி அருகே ஆயக்குடி அடுத்துள்ள பொன்னிமலை அடிவாரத்தில் உள்ள போகர் சித்தர் கோயிலில், போகர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.