

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா தரிசனம் இன்று (ஜன.3) காலை நடைபெற்றது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று இரவு (ஜன.2) பொன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பெரியநாயகியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 4 மணிக்கு நடராஜர் சந்நிதி திறக்கப்பட்டு நடராஜர், சிவகாமி அம்மனுக்கு 16 வகை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, நடராஜர், சிவகாமி அம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர், பஞ்ச மூர்த்திகள் நான்கு ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பின்னர் நடராஜர் கலிநடனம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நடராஜரின் கலிநடனம் குறித்து அறிந்து கோபம் அடைந்த சிவகாமி அம்மன் கோயில் நடையை சாத்திக் கொண்டார். அப்போது ஊடல் பாடல்களை பாடி நடராஜர் அம்மனுக்கு தூதுவிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சமாதானம் அடைந்த சிவகாமி அம்மன் கோயில் நடையை திறந்து சுவாமிக்கு வழிவிட்டு, தம்பதி சமேதமாய் பக்தர்களுக்கு அருள்புரிந்தனர். இந்த ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.