‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷம் முழங்க திருச்செந்தூர் ஆவணி தேரோட்டம் கோலாகலம்

‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷம் முழங்க திருச்செந்தூர் ஆவணி தேரோட்டம் கோலாகலம்
Updated on
1 min read

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கடந்த மாதம் 31-ம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி அம்மன் தனித்தனி சப்பரத்தில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

திருவிழாவின் 10-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது‌. தொடர்ந்து காலை 7 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது.

முதலில் விநாயகர் தேர் ரத வீதிகள் சுற்றி வந்தது. தொடர்ந்து சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் எழுப்பிய ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்ற பக்திகோஷம் விண்ணதிர எதிரொலித்தது. இந்த தேர் ரத வீதிகள் சுற்றி நிலைக்கு வந்ததும், வள்ளியம்மன் வீ்ற்றிருந்த தேரை பக்தர்கள் இழுத்தனர். இந்நிகழ்வில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் ஆ.அருணாச்சலம் மற்றும் திருக்கோயில் பணியாள்கள் செய்திருந்தனர்.

‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ கோஷம் முழங்க திருச்செந்தூர் ஆவணி தேரோட்டம் கோலாகலம்
தமிழகத்துக்கு 6,000 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in