

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்தில் திருமுல்லைவாயிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பச்சையம்மன் கோயில்.
பார்வதி தேவி சிவபெருமானுடன் மீண்டும் இணைய வேண்டி தவம் செய்ய பூலோகத்தில் வீரமாபுரி எனும் தலத்தை அடைந்தாள். அப்போது வீசிய கடும் காற்றால், தரையிலிருந்த மண் வானில் எழுந்து, வீரமாபுரி நகரத்தை மூடியது.
இதனால், வெகுண்டெழுந்த வீரமாபுரி மன்னன் சூரகோமன், ‘‘யார் படையெடுத்து வருவது? எதிரியை சிதறடித்து விட்டு வாருங்கள்’’ என்றான். பார்வதி, நகரத்தின் வாயிலில் நின்றாள். நகரத்தை சூழ்ந்த புழுதிக் காற்று, பார்வதியின் எளிமையை கண்டு, பணிந்து அடங்கியது.
தொடர்ந்து, தன் சகோதரர் திருமாலை வேண்டித் துதித்தாள் பார்வதி. உடனே, பார்வதியை காக்குமாறு சப்த ரிஷிகளுக்கு திருமால் ஆணையிட்டார். நெருங்கி வந்த சூரகோமன் எதிரில், பார்வதி பத்ரகாளியாக வடிவெடுத்தாள்.
அந்த கணமே சப்தரிஷிகளில், அகத்தியர் வாழ்முனியாக, வசிஷ்டர் செம்முனியாக, நாரதர் வேதமுனியாக, வியாசர் முத்துமுனியாக, வியாக்கமர் லாடமுனியாக, பராசரர் ஜடாமுனியாக, விஸ்வாமித்திரர் கரிமுனியாக மாறினர்.
பஞ்சாட்சரத்தை ஜபிக்க, பத்ரகாளி கனலாகச் சிவந்தாள். பத்ரகாளியின் கர்ஜனையில் அசுர வீரர்கள் சிதறினர். மாவீரர்களாக மாறிய முனிகள் அரக்கர்களை வீழ்த்தினர்.
தன் சூலத்தால் சூரகோமனை மாய்த்த பத்ரகாளி, அவ்விடத்தில் அமைதி சூழும்படி பச்சையம்மனாக குளிர்ந்து, முல்லை வனத்தில் வாயிலை அடைந்தாள்.
திருமுல்லைவாயிலில் பச்சையம்மன், சர்ப்பக் குடையின் கீழ் கங்கையம்மனுக்கும், வேங்கையம்மனுக்கும் நடுவில் குளிர்ந்த அம்மனாக அருள்பாலிக்கிறார். அவளுக்கு நேராக, கௌதம மகரிஷி கையில் லிங்கத்தை ஏந்தியபடி நின்ற கோலத்தில் உள்ளார்.