

ஆதவ் அர்ஜுனா
சென்னை: “200 தொகுதியில் வெல்வோம் என சொன்ன திமுக, தனது தேர்தல் அறிக்கையில், விவசாயக் கடன் பற்றி பேசவே இல்லை. அதை முன்னாள் அமைச்சர் எம். ஆர்.கே.பன்னீர் செல்வமே ஒப்புக் கொண்டார். தவெகவின் ஐந்து ஆண்டுகள் விவசாயிகளின் பொற்காலமாக இருக்கும்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: 200 தொகுதிகளிலும் வெல்வோம் என திமுக உறுதியாக சொன்னது. ஆனால், முதல்வர் விஜய் தன்னை ஒரு விவசாயி எனச் சொன்னதை, இங்கே மூன்று முறை திமுகவினர் பதிவு செய்துள்ளனர். அவரின் முதல் பிரச்சாரம் பரந்தூரில், விவசாயிகளுக்கு தான். அப்போதே, என் வாழ்க்கை விவசாயிகளுக்காக இருக்கும் என்றார்.
எங்களின் வாக்குறுதியில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாக சொல்லியிருந்தோம். அதை முயற்சியாக எடுத்து, ரூ.5932 கோடியை முதல்வர் விஜய் தள்ளுபடி செய்திருக்கிறார். ஆனால் 200 தொகுதியில் வெல்வோம் என சொன்ன திமுக, தனது தேர்தல் அறிக்கையில், விவசாயக் கடன் பற்றி பேசவே இல்லை. அதை முன்னாள் அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர் செல்வமே ஒப்புக் கொண்டார்.
ஏன் இது குறித்து அவர்கள் பேசவில்லை. விவசாயிகளுக்கு கடன் இருக்குமா, இருக்காதா என திமுகவினருக்கு தெரியாதா? ஒருவேளை திமுக ஆட்சிக்கும் வந்திருந்தாலும், அவர்களுக்கு அந்த எண்ணம் கிடையாது. ஆனால் முதல்வர் விஜய்க்கு இந்த எண்ணம் இருந்தது. சொன்னதை செய்யக்கூடியவர் முதல்வர் விஜய்.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் வைக்கும் குற்றச்சாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், பொதுமக்களுக்குத் தரமான அரிசியை வழங்கும் நோக்கத்திலும்தான் சன்ன வகை நெல்லுக்கான ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. 100% இருந்த கரும்பு சாகுபடி 30 சதவீதமாக குறைந்துள்ளது. கரும்பு உற்பத்தி திமுக ஆட்சியில் 70% சரிந்தது. 5 ஆண்டு ஆட்சியையும், 3 மாத ஆட்சியையும் ஒப்பிடுவது சரியா?. இந்த ஐந்து ஆண்டுகள் விவசாயிகளின் பொற்காலமாக இருக்கும். முதல்வர் விஜய் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்” இவ்வாறு அவர் கூறினார்.