Last Updated : 21 Feb, 2023 02:46 PM

 

Published : 21 Feb 2023 02:46 PM
Last Updated : 21 Feb 2023 02:46 PM

புதுச்சேரியில் அன்னையின் 145வது பிறந்தநாளில் பக்தர்கள் தரிசனத்துக்கு அறை திறப்பு: ஏராளமானோர் கூட்டு தியானம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அன்னையின் 145வது பிறந்தநாளையொட்டி பக்தர்களின் தரிசனத்துக்கு அறை திறக்கப்பட்டது. நாடு முழுவதுமிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கூட்டு தியானம் மற்றும் தரிசனத்தில் ஈடுபட்டனர்.

சுதந்திர போராட்ட வீரரும், ஆன்மிகவாதியமான மகான் அரவிந்தரின் முக்கிய சீடராக விளங்கியவர் ஸ்ரீ அன்னை என்று அழைக்கப்படும் மீர்ரா. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மீர்ரா புதுவை வந்தபோது ஆசிரமத்தில் தங்கி அரவிந்தரின் போதனைகளை கேட்டார். அரவிந்தரின் போதனைகளில் ஈர்க்கப்பட்ட இவர் புதுவையிலேயே தங்கி அரவிந்தருக்கு பணிவிடை செய்தார். இதனால் அரவிந்தரின் முக்கிய சீடரானார்.

1878ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி பிரான்சில் பிறந்த மீர்ராவின் பிறந்த நாளை அரவிந்த ஆசிரமவாசிகளும் அவரது பக்தர்களும் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இதன்படி அன்னையின் 145வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை பயன்படுத்திய அறை பக்தர்கள் தரிசனத்திற்காக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் அன்னை மற்றும் அரவிந்தரின் சமாதி முன் பக்தர்கள் தியானம் செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டனர்.

அன்னையின் கனவு நகரமான ஆரோவில் சர்வதேச நகரத்தில் பக்தர்கள் கூட்டு தியானத்தில் ஈடுபட்டனர். மேலும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னை சமாதியை பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

ஆரோவில் 55ம் ஆண்டு விழா 28 ஆம் தேதி வரை நடக்கிறது. புதுவையிலிருந்து 12 கிமீ தொலைவில் ஆரோவில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. அன்னையின் முயற்சியால் 1968ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி ஆரோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தாமரை மொட்டு வடிவில் சலவைக் கல்லால் ஆன ஒரு தாழியில் உலகத்தின் 121 நாடுகள், இந்தியாவின் 25 மாநிலங்களின் மண் இடப்பட்டது. சர்வதேச நகரில் 50 ஆயிம் பேர் வசிக்க திட்டமிட்டு பணிகள் நடந்தன.

நகரின் மையத்தில் ஆரோவில் ஆன்மாவாகிய மாத்ரி மந்திர் அமைந்துள்ளது. அதை சுற்றிலும் பூந்தோட்டங்கள் உள்ளன. இந்த மைய பகுதியை பேரமைதி என அழைக்கின்றனர். இப்போது பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வசித்து வருகின்றனர். ஆரோவில் சர்வதேச நகரின் 55ம் ஆண்டு விழாவைக் கொண்டாட ஆரோவில்வாசிகள் தயாராகி வருகின்றனர். இன்று அன்னையின் பிறந்தநாள் முதல் ஆரோவில் தினமான 28 ஆம் தேதி வரை தொடர்ந்து கொண்டாட்டங்கள் நடக்கிறது.

8 நாள் விழாவில் மகாலட்சுமி, மகாசரஸ்வதி, மகாகாளி, மகேஸ்வரி ஆகிய பிரபஞ்ச அன்னையின் செயல்வடிவங்களை பிரதிபலிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இதனால் ஆரோவில் சர்வதேச நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆரோவில் உதய தினமான 28 ஆம் தேதி போன்பயர் எனப்படும் தீ மூட்டி கூட்டு தியானத்தில் ஆசிரம பக்தர்கள் ஈடுபட உள்ளனர். நாள்தோறும் பல்வேறு விவாதம், சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x