Published : 10 Jul 2014 09:11 AM
Last Updated : 10 Jul 2014 09:11 AM

விவிலியச் சிந்தனைகள்: கடவுள் செவி கொடுக்கிறாரா?

நெருக்கடிகள் தன்னைச் சூழ்ந்துகொள்ளும் போதெல்லாம் காலந்தோறும் மனிதன் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருக்கிறான். தனது குரலைக் கடவுள் காதுகொடுத்துக் கேட்பதில்லை என்றும், கடவுள் செவிடாகிவிட்டார் என்று அவரைத் திட்டித் தீர்க்கவும் தவறுவதில்லை.

தன்னோடு தொடர்புகொள்ள மனிதனுக்கு ஒரு பாலம் தேவைப்படும் என்பதை உணர்ந்து ‘ஜெபம்’ என்கிற சாதனத்தை மனிதனுக்குப் பரிசாகக் கொடுத்தார் கடவுள். உலகில் வாழும் எல்லா மதங்களிலும் ஜெபம் இருக்கிறது.

ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு வழிமுறைகளில், வெவ்வேறு வடிவங்களில் ஜெபம் செய்யப்படுகிறது. வழிமுறைகள் வேறாக இருந்தாலும், இறைவனோடு ‘ நட்பு’ பாராட்டும் வரமாக ஜெபம் இருப்பதை நம்மில் பலரும் மறந்துவிட்டோம்.

கிறிஸ்தவம் காட்டும் ஜெபம்

உலகைப் படைத்து, உலகையும் மனித இனத்தையும் காத்துவரும் பரலோகத் தந்தையை நோக்கி எவ்வாறு ஜெபம் செய்வது என்பதை, கிறிஸ்தவத்தின் ஸ்தாபகராக இருக்கும் இயேசு கிறிஸ்து, தனது சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். ‘கர்த்தர் கற்பித்த ஜெபம்’ என்று அழைக்கப்படும் அந்த ஜெபமானது, தேவதந்தையிடம் நாம் கேட்க வேண்டியது என்ன என்பதைச் சுருக்கமாகவும், தாழ்மையுடனும் வரையறுக்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்து, ‘கர்த்தர் கற்பித்த ஜெபம்’ இன்றும் முக்கியக் கருவியாக இருப்பதற்கு, அதில் இருக்கும் தாழ்மையும், தன்னை எளிய துரும்பாக்கிப் பரலோகத் தந்தையிடம் இறைஞ்சும் கீழ்ப்படிதலுமே முக்கியக் காரணங்கள்.

இயேசு கற்பித்த அந்த ஜெபம் இப்படித் தொடங்குகிறது... “வானுலகில் இருக்கும் எங்கள் பிதாவே, உம்முடைய திருப்பெயர் போற்றப்படுவதாக. உம்முடைய ராஜ்ஜியம் வருக. உம்முடைய சித்தம் வானுலகில் செய்யப்படுவதுபோலப் பூவுலகிலும் செய்யப்படுவதாக.

எங்கள் தினசரி உணவை எங்களுக்கு இன்று தாரும். எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் பாவங்களை மன்னியும். எங்களைச் சோதனைகளில் விழ விடாமல் தீமைகள் அனைத்திலிருந்தும் எங்களைக் காத்தருளும்” என்று முடிகிறது.

வாழ்வின் நிர்வாக அதிகாரி

எனக்கு என்ன தேவை என்பது என்னைப் படைத்த கடவுளுக்குத் தெரியாதா? நான் ஜெபம் செய்தால் மட்டும்தான் அவர் என்னைப் பார்த்துக் கொள்வாரா? என்பதுதான் சிந்திக்கத் தொடங்கிய மனிதன் கேட்ட கேள்விகளில் ஒன்று.

ஆனால் நீங்கள் பணிபுரியுமிடத்தில் உங்களது உயர் அதிகாரியிடம் நீங்கள் பெருமை பொங்க, மரியாதையில்லாமல் ‘நீங்கள் கொடுத்துத்தான் ஆக வேண்டும். உங்களுக்கு வேறு வழியில்லை’ என்ற தொனியில் விடுப்போ, சலுகையோ அல்லது உங்கள் உரிமையையோ நீங்கள் கேட்டால் அவர் உங்களுக்குக் கொடுப்பார் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா? அதைப் போலவேதான் பரமபிதா உங்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுத்து உங்கள் கோரிக்கைகளைக் கேட்க வேண்டுமானால், நீங்கள் அவருக்கும் அவர் வகுத்தளித்த வாழ்முறைக்கும் (கட்டளைகள்) மரியாதை காட்டும்படி எதிர்பார்க்கிறார் என்பதில் ஆச்சரியமில்லை.’ என்கிறது நீதிமொழிகள் (15:29).

அப்படியானால் கடவுளிடம் ஜெபிக்கும்போது மரியாதையான தாழ்மையான சுயநலமில்லாத மனநிலை நமக்கு வேண்டும். கடவுள் நம் வாழ்வின் நிர்வாகி என்பதைப் புரிந்துகொண்டால், ஜெபம் நம்மைக் கர்வமில்லாதவர்களாக வைத்திருக்க உதவும் அற்புதச் சாதனம் என்பதை உணர முடியும்.

கடவுளுக்கு நேரமிருக்கிறதா?

சரி கடவுளை எனது வாழ்வின் நிர்வாகியாக ஏற்றுக்கொள்கிறேன். அப்படிப் பார்த்தாலும் அவருக்கு எனது ஜெபங்களைக் கேட்டுக்கொண்டிருப்பதுதான் வேலையா? மனிதனால் எல்லையே கண்டறிய முடியாத இந்தப் பிரபஞ்சத்தைக் காப்பதில் அவருக்கு எத்தனை வேலைப் பளு இருக்கும்? எனது ஜெபங்களைக் கேட்க அவருக்கு நேரமிருக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

ஆனால் ஜெபம் என்பது கடவுளுடன் கொண்டுள்ள மெய்யான உறவின் திறவுகோலாக இருப்பதை “உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்” என்ற சங்கீதப் புத்தகத்தின் வசனம் (சங்கீதம் 9:10) நமக்குத் தெளிவுபடுத்துகிறது. இந்த இடத்தில் நீங்களும் தினசரி இதே மனநிலையுடன்தான் ஜெபிக்கிறீர்களா என்பதை ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ளுங்கள்.

உறவு இருந்தால்தான் பாலம்

கடவுளுக்கும் உங்களுக்குமான நட்பின் திறவுகோலாக இருக்கும் ஜெபத்தை நீங்கள் கைக்கொள்வதற்கு முன்பு, நீங்கள் ஜெபித்தால் கடவுள் செவிகொடுத்துக் கேட்பார் என்று திடமாக நம்பும் அளவுக்குக் கடவுளை உங்களுக்குத் தெரியுமா? அவரது அன்புக்கும் பாதுகாவலுக்கும் உரிய ஆட்டுக்குட்டியாக நீங்கள் இருக்கிறீர்களா என்பதைச் சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

ஆம்.. நான் கீழ்ப்படிதல் உள்ள ஆட்டுக்குட்டி என்று நீங்கள் திடமாக உங்களைக் குறித்து நம்பினால், “உங்கள் ஜெபத்தைக் கேட்கவும் பதிலளிக்கவும் முடிந்த ஒருவரிடம் நீங்கள் பேசுகிறீர்கள் (எபேசியர் 3:20)” என்கிறார் எபேசியர். அப்படியானால் உங்கள் குரலைக் கேட்கவல்ல அவரது படைப்பு நீங்கள். தன் படைப்பானது தன்னோடு கீழ்ப்படிதலோடு தன்னை அன்பு செய்ய வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார்.

காரணம் “அவரே மனித குலத்தைப் படைத்தார்; ஆகவே நாம் நம்மைப் புரிந்துகொள்வதைக் காட்டிலும் அவர் நம்மை நன்றாகப் புரிந்துகொள்கிறார் (சங்கீதம் 100:3). அவர் “அநாதியாய் என்றென்றைக்கும்” இருப்பதால் எல்லையில்லா அனுபவமிக்கவராகவும் இருக்கிறார். (சங்கீதம் 90:1, 2) என்று சங்கீதமும், ‘அவரால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் ஒன்றுமில்லை(ஏசாயா 40:13)’ என ஏசாயா நூலும் கூறுகின்றன.

அப்படிப்பட்ட கடவுளால் தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமில்லை என்பது மட்டுமல்ல. பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தியை நமக்குத் தருவதிலும் அவருக்கு நிகரான ஞானவான் யாருமில்லை. ஏனெனில் நீங்கள் கடவுளிடம் பேசுகையில், ஞானத்தின் பிறப்பிடத்தையே அணுகுகிறீர்கள்.

குரலைக் கேட்க மாட்டாரா?

மேலும் ஒப்பிடவியலாத அவரது சக்தியால் கடவுளை மனிதன் அறிந்துகொள்ளவில்லை. மாறாக அளவிட இயலாத அவரது அன்பை வைத்தே அறியப்பட்டிருக்கிறார். ‘தேவன் அன்பாகவே இருக்கிறார்’ என்று யோவான் நற்செய்தி (4:8) கூறுகிறது. அவரது மாபெரும் இயல்பாயிருக்கும் அன்பினால்தான், அவர் நம் ஜெபத்தைக் கேட்பார் என நம்புகிறோம். நித்திய வாழ்வை அடையும்படிக்குத் தம் மகனை மீட்கும் பலியாக மனித குலத்துக்குத் தந்தருளியது அவரது அன்புக்கு மிகச் சிறந்த சாட்சி (யோவான் 3:16) என எடுத்துக் காட்டுகிறார் யோவான்.

இத்தனை அன்பானவர் நமது ஜெபத்தைப் புறகணித்துவிடுவார் என்ற எண்ணத்துக்கே இடமில்லை. உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் ஒரே நேரத்தில் பேசினாலும், அனைத்திற்கும் செவிகொடுக்கும் செவி கடவுளிடம் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x