Published : 07 Jan 2023 02:35 PM
Last Updated : 07 Jan 2023 02:35 PM

108 வைணவ திவ்ய தேச உலா - 106 | திருமெய்யம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் 

முனைவர் கே.சுந்தரராமன் 

108 வைணவ திவ்ய தேசங்களில் புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில், 106-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இக்கோயில் முத்தரையர்கள் ஆட்சிக் காலத்தில் அகழப்பட்ட குடைவரைக் கோயில் என்று கூறப்படுகிறது. சத்ய மகரிஷிக்கு பெருமாள் காட்சி அருளியுள்ளார். சத்தியகிரி மலை, சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் இருந்து 19 கிமீ தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 21 கிமீ தொலைவிலும் உள்ள இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்

கொய்யார் குவளையும், காயாவும் போன்று இருண்ட

மெய்யானை, மெய்ய மலையானைச் சங்கேந்தும்

கையானை, கை தொழாக் கையல்ல கண்டோமே.

(2016 – பெரிய திருமொழி 11-7-5)

மூலவர்: சத்தியமூர்த்தி | உற்சவர்: அழகியமெய்யர் | தாயார்: உஜ்ஜிவன தாயார் | தல விருட்சம்: ஆல மரம் | தீர்த்தம்: சத்ய புஷ்கரிணி | விமானம்: சோமசந்திர விமானம்

தல வரலாறு

பாற்கடலில் பாம்பணையில் பெருமாள் சயனித்துக் கொண்டிருந்தபோது, அவர் அருகே ஸ்ரீதேவி, பூதேவி அமர்ந்திருந்தனர். அப்போது தேவியரை அபகரிக்க, மது, கைடபர் ஆகிய அரக்கர்கள் வருகின்றனர். அரக்கர்களின் நோக்கத்தை உணர்ந்த பூதேவி, பெருமாளின் திருவடிக்கருகில் ஒளிந்து கொண்டார். ஸ்ரீதேவி, பெருமாளின் மார்பில் ஒளிந்து கொண்டார். பெருமாளின் நித்திரையைக் கலைக்க விரும்பாத ஆதிசேஷன், தன் வாயில் இருந்து விஷ ஜ்வாலையைக் கக்கி, அரக்கர்களை விரட்டி விடுகிறார். பெருமாளின் அனுமதி இன்றி இவ்வாறு செய்ததற்காக அஞ்சியபடி இருக்கிறார் ஆதிசேஷன்.

பெருமாள் நித்திரை கலைந்து, விஷயத்தை அறிகிறார். அஞ்சி நடுங்கியபடி இருந்த ஆதிசேஷனைப் பார்த்து, “என் அனுமதி இன்றி செய்தாலும், நன்மையைத்தான் செய்திருக்கிறாய்” என்று பாராட்டினார். இச்சம்பவத்தை உணர்த்தும்விதமாக இத்தலத்தில் ஆதிசேஷன் அஞ்சி, தலையை சுருங்கியவாறு காட்சியளிக்கிறார்.

இரண்டு மூலவர்கள்

சத்தியமூர்த்தி கோயிலில் சத்தியமூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும்படி சத்தியகிரீஸ்வரர் (சிவபெருமான்) கோயிலும், சத்தியமூர்த்தி பெருமாள் (திருமால்) கோயிலும் அருகருகே அமைந்துள்ளன. சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் முற்பட்டது என்பதால் இத்தலம் ‘ஆதி ரங்கம்’என்று அழைக்கப்படுகிறது.

சதுர் யுகம் என்பது ஒரு யுகம் முடிந்து மறுயுகம் பிறக்கும் காலச்சக்கரத்தைக் குறிக்கும் அளவு. அதன்படி ஸ்ரீரங்கம் பெருமாள் 64 சதுர் யுகங்களுக்கு முன்னர் தோன்றினார். ஆனால் திருமெய்யம் சத்யகிரிநாதன் (அழகிய மெய்யன்) 96 சதுர் யுகங்களுக்கு முன்னரே தோன்றியுள்ளார்.

கோயில் அமைப்பும் சிறப்பும்

திருமெய்யம் நகரின் தென்புறத்தில் உள்ள சத்தியகிரி மலைச்சரிவில் அகழப்பட்டுள்ள இரண்டு குடைவரைகளுள் கீழ்ப்புறத்தில் உள்ள குடைவரை திருமெய்யர் என்னும் சத்தியமூர்த்தி பெருமாளுக்கான கருவறையாகத் திகழ்கிறது.

சோமச்சந்திர விமானத்தின் கீழ் நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி பெருமாள் ஒரு கரத்தில் சங்கு, மற்றொரு கரத்தில் பிரயோகச் சக்கரம் தாங்கி சேவை சாதிக்கிறார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் சத்தியமாகத் துணை நிற்பேன் என்று இத்தல பெருமாள் உறுதி அளித்ததால் ’சத்தியமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார்.

முத்தரையர்களைத் தொடர்ந்து, பாண்டியர்கள், போசாளர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலங்களில் குடைவரைக் கோயில், பிரகாரம், மண்டபங்கள், திருக்குளம் என்று விரிவாக்கம் அடைந்துள்ளது, குடைவரைக் கோயில் மூலவர் ‘திருமெய்யர்’ 22 அடி நீளம் கொண்டு, பள்ளிகொண்ட பெருமாளாக அருள்பாலிக்கிறார்.

தலையை சற்றே உயர்த்திய நிலையில் மேற்கில் தலைவைத்து, கிழக்கில் கால் நீட்டியவாறும், நீட்டிய வலது கை பின்புறம் பாம்பணையை அணைத்தவாறும், இடது முழங்கை மடங்கிய நிலையில் விரல்கள் இடது மார்பைச் சுட்டியவாறும் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. பெருமாளின் திருவடியில் பூதேவி, நாபிக்கமலத்தில் இருந்து எழும் தாமரை மலரில் நான்முகன், அவர் அருகே தட்சன், அக்னி உள்ளனர்.

மேலும் நான்முகனின் இருபுறமும் பெருமாளின் ஆயுத புருஷர்களான பாஞ்சஜன்யன், சுதர்சனன், சாரங்கன், நந்தகன், கௌமோதகி உள்ளனர். மூலவருக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை தைலக் காப்பு இடப்படுகிறது.

அனைத்து பாவங்களையும் போக்கும் திருக்குளமாக சத்திய புஷ்கரிணி உள்ளது. தசாவதார மண்டபத் தூண்களில் உள்ள சிற்பங்கள் புகழ் பெற்றவை.

உஜ்ஜீவனத் தாயார்

ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார் என்ற திருநாமம் தாங்கி இத்தல தாயார் அருள்பாலிக்கிறார். குழந்தைப் பேறு கிட்ட, வாழ்க்கையில் பல நலன்கள் பெற, நரம்புத் தளர்ச்சி நீங்க, பேய், பிசாசு அகல தாயார் அருள்பாலிப்பார் என்பது நம்பிக்கை. தாயார் படிதாண்டா பத்தினி என்பதால் வீதியுலா வருவது இல்லை. தாயாருக்கு தினமும் இரவில் புட்டும் பாலும் நைவேத்தியம் செய்யப்பட்டு, பின்னர் அந்த வழக்கம் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திருவிழாக்கள்

வைகாசி பௌர்ணமி தேர்த் திருவிழா, ஆடிப்பூர விழா, கிருஷ்ண ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தமிழ், ஆங்கில வருடப் பிறப்பு, தீபாவளி, பொங்கல் தினங்களில் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.

மனநிலை பாதிப்பு, திருமணத் தடங்கல், தம்பதி ஒற்றுமையின்மை ஆகியவற்றுக்கு சிறந்த பரிகாரத் தலமாக இத்தலம் விளங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x