Published : 27 Dec 2022 05:51 AM
Last Updated : 27 Dec 2022 05:51 AM

ராமன் புகழ் பாடுவோம்!: தித்திக்கும் திருப்பாவை - 12

ராமன் புகழ் பாடுவோம்!

கனைத்து இளங் கன்று-எருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலை வழியே நின்று பால் சோர

நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற் செல்வன் தங்காய்!

பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்

இனித் தான் எழுந்திராய், ஈது என்ன பேர் உறக்கம்!

அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய்.

விளக்கவுரை: இளம் கன்றுகளுடைய எருமைகள்(கறப்பாரில்லாமல்) முலை கடுத்துக் கதறி கன்றுகளுக்கு ஊட்டுவதாக நினைத்து இரக்கத்துடன் இடைவிடாமல் பாலை சுரந்து வீடே ஈரமாகி சேறாகியிருக்கும் சிறந்த செல்வனுடைய தங்கையே! பனி எங்கள் தலையை நனைக்க,தென் திசை இலங்கை அரசனான இராவணனைத் தன் சினத்தால் கொன்ற நம் மனதுக்கு இனியவனான ராமனின் புகழைப் பாடிக்கொண்டு, உன் வீட்டு வாசல் மேல் கட்டையைப் பற்றி நிற்கிறோம்,இனியாவது எழுந்துகொள்! உன் பெருந் தூக்கத்தை ஊரார் எல்லோரும் அறிந்துவிட்டார்கள்! ஆகையால் எழுந்திரு!

(விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப் பாடி உன் வீட்டுக்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்?)

இதையும் அறிவோம்: பெருமாளை துயில் எழுப்புவது சுப்ரபாதம். தமிழில் திருப்பள்ளியெழுச்சி. அடியார்களை எழுப்பி பெருமாளையும் எழுப்பும் திருப்பள்ளியெழுச்சியாகவும் திருப்பாவை அமைத்துள்ளது அதன் தனிச்சிறப்பு. திருமலையில் திருவேங்கடவனுக்கு தினமும் அதிகாலைபிரசித்திபெற்ற சுப்ரபாதச் சேவை நடைபெறுவது மரபு. ஆனால் மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்கள் சுப்ரபாதத்துக்கு பதிலாக பாடப்படுகிறது.

- சுஜாதா தேசிகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x