Published : 14 Jul 2014 12:20 pm

Updated : 14 Jul 2014 14:29 pm

 

Published : 14 Jul 2014 12:20 PM
Last Updated : 14 Jul 2014 02:29 PM

ஜெர்மனி வீரர்களின் உதிராத உத்வேகமும் அர்ஜென்டீனா பேரழகிகளின் கண்ணீரும்

பிரேசிலில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் அர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 24 ஆண்டுகளுக்குப் பிறகு >உலகக் கோப்பையைக் கைப்பற்றியது ஜெர்மனி.

அர்ஜென்டீனாவின் இதயத்தை நிறுத்திய அந்தக் கணம்:

ஜெர்மனி 4-வது உலகக் கோப்பையை வெல்லும் அந்தத் தருணம் எங்கிருந்தோ வந்தது. களமிறியது முதல் அர்ஜென்டீனா தடுப்பாட்ட வீரர்களை சுறுசுறுப்பாக வைத்திருந்த ஜெர்மனி ஸ்ட்ரைக்கர் ஷுயர்லி 113-வது நிமிடத்தில் இடது ஓரம் பந்தை வாங்கி அதிவேகமாக அர்ஜென்டீனா பகுதி நோக்கி இடது புறமாகவே முன்னேறினார். அவரது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அர்ஜென்டீனா வீரர்கள் அவர் பின்னால்தான் வர முடிந்தது. பந்தை எடுத்து இடதுபுறமாகவே கடைசி வரை வந்த ஷுயர்லி மிக அருமையாக பந்தை அர்ஜென்டீனா கோல் போஸ்ட் அருகே நின்றுகொண்டிருந்த மரியோ கோட்ஸேவுக்கு 'கிராஸ்' செய்தார். மேலே வந்த அந்தப் பந்தை நெஞ்சில் வாங்கி அபாரமாகக் கட்டுப்படுத்தி, பந்து காலுக்கு இறங்கும்போது தரையைத் தொடுவதற்கு முன்பாகவே இடது காலால் வலது மூலையில் கோலுக்குள் அடிக்க, கோல் வலை வெளியே கொஞ்சம் அதிகமாகவே பிதுங்கி, பின் தன் நிலைக்கு வந்தது. அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த ஷாட் ஆகும் அது.

கோட்ஸே என்பவர் மீது அதிக கவனம் இல்லாததால், அவரை அர்ஜென்டீனா தடுப்பு வீரர்கள் கவர் செய்யவில்லை. அவரை அவ்வளவு அபாயகரமானவராக அவர்கள் கருதாமல் இருந்தது அர்ஜென்டீனாவுக்கு உலை வைத்தது.

அர்ஜென்டீனாவின் பேரழகிகளில் சிலர் வாயடைத்துப் போயினர். சிலர் அந்த புகழ்பெற்ற தென் அமெரிக்க அழுகை நிலைக்கு வந்தனர். இருந்தாலும் பேரழகிகளை அழ வைத்த ஜெர்மனி மீது ஜெர்மனி ரசிகர்களே கூட கோபப்பட்டிருக்கலாம். அர்ஜென்டீனா வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். சற்றும் எதிர்பாரா ஒரு தருணத்தில் எங்கிருந்தோ வந்த கோல் அது.

இடைவேளைக்கு முன்:

ஆட்டம் துவங்கியவுடன் இரு அணிகளும் விறுவிறுப்பாக ஆடின. உண்மையிலேயே இரு அணிகளும் ஒருவரைக் கண்டு மற்றொருவர் அச்சப்பட்டே விளையாடினர். தாக்குதல், எதிர் தாக்குதல் என்றே முதல் 15 நிமிட ஆட்டம் பெரிய ஒரு முடிவுக்காக வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் 113-வது நிமிடம் வரை ஆட்டம் வெறும் வெள்ளோட்டமாகவே இருக்கும் என்பதை ஒருவரும் அப்போது அறிந்திருக்கவில்லை.

அன்று பிரேசில் அடைந்த படுதோல்வி அர்ஜென்டீனாவின் மனதில் நிலை கொண்டது போலவே தெரிந்தது. தாக்குதல் தொடுத்தாலும் பந்து ஜெர்மனி வீரர் கால்களுக்குச் சென்று விடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வினால் ஃபினிஷிங் செய்ய முடியாமல் தடுமாறியது அர்ஜென்டீனா.

அப்படிப்பட்ட ஒரு தருணத்தில்தான் 4-ஆம் நிமிடத்தில் சபலேட்டா வலது புறம் வேகம் காட்டி பந்தை எடுத்து வர, அது சில கால்களைத் தாண்டி ஹிகுவேய்னிடம் வந்தது. ஒரு நெருக்கமான கோணத்திலிருந்து அவர் கோலை நோக்கி ஷாட் அடித்தார். அது இடது கோல் போஸ்டை ஒட்டிச் சென்றது. துவக்க கோலாக முடிந்திருக்க வேண்டிய மூவ் விரயமானது.

9-வது நிமிடத்தில் மேஜிக் மெஸ்ஸி பந்தைப் பெற்று ஜெர்மனி வீரர் ஹமெல்ஸிற்கு ஆட்டம் காண்பித்தார். ஹமெல்ஸிற்கு அது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பந்தை மெஸ்ஸி பாக்ஸிற்குள் கொண்டு சென்றார் பிறள பந்தை சற்றே பின்னுக்கு இழுத்து லாவேசியிடம் கொடுத்தார். அதற்குள் ஷ்வெய்ன்ஸ்டெய்கர் பந்தை உதைத்து வெளியே அனுப்பிவிட்டார். மெஸ்ஸி செய்த ஒரு 3 அல்லது 4 மூவ்களில் இதுவும் ஒன்று.

20-வது நிமிடத்தின் காஸ்ட்லி மிஸ்:

ஜெர்மனி வீரர் குரூஸ் ஒரு மிகப்பெரிய தவறு செய்தார். பிரேசில் இந்தத் தொடர் முழுதும் வாங்கிய கோல்களின் போது செய்த அதே வகைத் தவறுதான் இது. கோல்கீப்பர் நூயருக்கு ஹெட் செய்கிறேன் என்ற நினைப்பில் நடுவில் அர்ஜென்டீன ஸ்ட்ரைக்கர் ஹிகுவெய்ன் இருந்ததை கவனிக்கவில்லை. இரண்டு பிட்ச் ஆகி வந்த பந்தை ஹிகுவெய்ன் கொண்டு சென்றார். அவர் சுதந்திரமாக செயல்பட்டார். அவரைத் தடுக்க ஆளில்லை. ஒரு நேரத்தில் அவரும் கோல்கீப்பரும் மட்டும்தான் இருந்தனர். பின்னால் ஜெர்மனியின் குரூஸ் நெருக்கடி கொடுக்க அவரை ஒட்டி ஓடி வந்து கொண்டிருந்தார். இன்னும் கொஞ்ச தூரம் சென்று ஷூட் செய்திருந்தால் அபாரமான கோலாகியிருக்கும், ஆனால் கொஞ்சம் பின்னாலிலிருந்து ஷூட் செய்ய இடதுபுறம் கோலுக்கு வெளியே அடித்தார் ஹிகுவெய்ன். அங்கு தூரத்தில் மஸ்சரானோ தலையைக் கையால் பிடித்தபடி ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இந்த வைடு ஷாட் மூலம் கோல் வாய்ப்பை நழுவ விட்ட ஹிகுவெய்ன் பேரழகிகளின் காதலையும் சேர்த்தே நழுவ விட்டிருப்பார்.

30-வது நிமிட அர்ஜென்டீன ஆஃப் சைடு:

ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் லாவேசி வலது புறம் சுதந்திரம் பெற்றார். நிறைய இடமும் நேரமும் அவருக்கு அனுமதிக்கப்பட்டது. அவர் பந்தை மிக அழகாக வெட்டி எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார். அங்கு நடுவில் நின்று கொண்டிருந்த ஹிகுவெய்னுக்கு துல்லிய பாஸ் ஒன்றைச் செய்தார். அவர் பக்கவாட்டு பாதத்தினால் கோல் வலையின் வலது மூலைக்கு அடித்த கோலாக மாற்றியதாக நினைத்து தனது இடது மார்பை வலது கையால் தொட்டுக் காண்பித்தபடியே அர்ஜென்டீன ரசிகர்கள் இருக்கும் பகுதிக்கு ஓடி வந்த வேகத்தில் ஆஃப் சைடு என்று நடுவர் கொடியைத் தூக்கியதை அவர் கவனிக்கவில்லை. மறுக்கப்பட்ட கோல் ஆனது அது.

பிறகு 37-வது நிமிடத்தில் தாமஸ் முல்லர் இடதுபுறமாக பந்தை சுதந்திரமாக எடுத்துச் சென்று அபாய வீரர் ஷுயர்லியிற்கு அடிக்க அவர் அர்ஜென்டீன கோல் போஸ்டின் இடது மேல் மூலைக்கு அடித்தார். ஆனால் ரொமேரோ அபாரமாக ஒரு முழு நீள டைவ் அடித்து பந்தை வெளியே தட்டி விட கார்னர் வாய்ப்பு ஜெர்மனிக்குக் கிடித்தது. கார்னர் ஷாட்டை ஜெர்மனி அடிக்கும்போது அங்கு ஓஸில் ஆஃப் சைடில் இருந்தார். முடிந்தது கோல் வாய்ப்பு.

40-வது நிமிடத்தில் மெஸ்ஸி மீண்டும் சுதந்திரம் எடுத்துக் கொண்டார். அவர் வலது புறமாக வேகமாக பந்தை எடுத்து சென்றார். ஜெர்மனி சற்று கண் அசந்திர்க்கும் போல் தெரிந்தது. ஆனால் மெஸ்ஸி அடித்த ஷாட்டில் வலுவில்லை அதனை போடெங் எளிதில் பாதியிலேயே முறியடித்தார்.

இடைவேளைக்கு முன் ஸ்டாப்பேஜ் டைம் ஆட்டத்தில் குரூஸ் ஒரு ஷாட்டை அருகில் இருந்த போஸ்ட் நோக்கி அடிக்க திரும்பி வந்த பந்தை பெனெடிக்ட் ஹோவிடேஸ் தலையால் கோல் நோக்கி அடிக்க பந்து போஸ்டில் பட்டது. ரொமேரோ பந்தை பிடித்தார். ஆனால் அதற்குள் அங்கே முல்லர் ஆஃப் சைடு என்றார் நடுவர், விறுவிறுப்பான முதல் பாதி ஆட்டம் நிறைவு பெற்றது.

இடைவேளைக்குப் பிறகு:

47-வது நிமிடத்தில் அர்ஜென்டீனா வீரர் பிக்ளியா சறுக்கியபடியே செய்த பாஸை இடது உள்புறம் வாங்கிய மெஸ்ஸி கோல் அடிக்க அருமையான வாய்ப்பைக் கோட்டைவிட்டார். ஜெர்மனி கோல் கீப்பர் நூயரைத் தாண்டி அடிக்க வேண்டியதுதான் பாக்கி, ஆனால் இலக்கை விட்டு தள்ளி அடித்தார் மெஸ்ஸி, ஆனால் அவர்தான் கேப்டன் கூலாயிற்றே அதனை தவற விட்ட வாய்ப்பு போலவே அவர் நினைக்கவில்லை.

59-வது நிமிடத்தில் இதே போல் ஜெர்மனி அபாய வீரர் தாமச் முல்லர் வலது புறம் நிறைய இடம் கிடைக்க பந்தை எடுத்து வந்து க்லோஸிற்கு பாஸ் செய்ய கோலுக்கு 6 அடியிலிருந்து அவர் ஒரு ஷாட்டை அடிக்க அது மிகவும் பலவீனமான ஷாட்டாக அமைய கோல் வாய்ப்பு வீண்.

இப்படியே மாறி மாறி இரு அணிகளும் வந்து வந்து கோல் அடிக்க முடியாமல் திரும்பினர். இடையில் அர்ஜென்டீன வீரர் அகுரேயிற்கு மஞ்சள் அட்டைக் காண்பிக்கபட்டது மற்றபடி ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை.

ஆனால், ஒரு கட்டத்தில் ஜெர்மனி கோல்கீப்பர் நூயருக்கு ஃபவுல் கொடுத்திருக்க வேண்டும், உயரத்தில் வந்த பந்தை ஹிகுவேய்னும் இவரும் எம்பி எதிர் கொள்ள முயன்றபோது பந்தை கையால் தள்ளிய கோல் கீப்பர் நூயர் ஹிகுவெய்னை காலால் உதைத்தார். இது நிச்சயம் மஞ்சள் அட்டை காண்பிக்கக் கூடிய ஒரு ஃபவுல். ஆனால் நடுவர் கண்டுகொள்ளவில்லை. இதனைக் கண்டுகொள்ளாத நடுவர் மஸ்செரானோவிற்கும் ஆகுரேயிற்கும் மஞ்சள் அட்டை காண்பித்தது ஏன் என்பது சர்ச்சைக்குரிய விஷயமே.

முழு நேர ஆட்டமும் ஒன்றும் பயனளிக்காத நிலையில், ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. கூடுதல் நேரத்தில் அர்ஜென்டீன வீரர் ரோஜோ ஒரு அருமையான பாஸை பலாசியோவுக்குச் செய்ய ஆபத்தை உணர்ந்த நூயர் முன்னே வர பலாசியோவுக்கு அருமையான வாய்ப்பு ஆனால் இலக்கு தவறிய ஷாட்டானது அது.

அதன் பிறகு கூடுதல் நேரத்தின் 2-வது பாதியில், 113வது நிமிடத்தில்தான் ஷுயலியின் இடப்புற பேயாட்டம், துல்லியமாக பாஸை கோட்சேவுக்கு அடித்தது, அவர் அருமையாக அதனை நெஞ்சால் தடுத்து பிறகு கீழே இறங்கிய பந்தை இடது காலால் கோலுக்குள் சக்தியுடன் அடித்தார். அர்ஜென்டீனா இருதயம் நின்றது.

கடைசி தருணத்தில் அர்ஜென்டீனாவுக்கு 25 யார்டிலிருந்து ஃப்ரீ கிக் ஒன்று கிடைக்க, மெஸ்ஸி அதனை அபூர்வமாக கோலாக மாற்றுவார் என்று படபடக்கும் இருதத்துடன் அர்ஜென்டீனா, ஜெர்மனி ரசிகர்கள் பார்க்க பந்து கோல் போஸ்டிற்கு வெகு மேலே சென்றது.

அவ்வளவுதான்! விசில் ஊதப்பட்டது. ஜெர்மனி கொண்டாட்டம் தொடங்கியது. அர்ஜென்டீனாவின் பேரழகிகளின் கண்களில் கண்ணீர் வரத் தொடங்கியது. கோல் அடித்த கோட்சவையும் அதற்குக் காரணமான ஷுயர்லியையும் ஜெர்மனி வீரர்கள் மொய்த்தனர்.

இந்த உலகக் கோப்பை போட்டிகளில் கடைசி வரை உத்வேகத்தைக் கைவிடாமல் ஆடியதற்கான பரிசே ஜெர்மனிக்கு இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றி.

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிஉலகக் கோப்பை சாம்பியன்ஃபிஃபா 2014ஜெர்மனிஅர்ஜென்டீனா

You May Like

More From This Category

More From this Author