108 வைணவ திவ்ய தேச உலா - 92 | நத்தம் விஜயாஸனர் கோயில்

108 வைணவ திவ்ய தேச உலா - 92 | நத்தம் விஜயாஸனர் கோயில்
Updated on
2 min read

108 வைணவ திவ்ய தேசங்களில், தூத்துக்குடி மாவட்டம் நத்தம் (வரகுணமங்கை) விஜயாஸனர் கோயில், 92-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. நவதிருப்பதியில் 2-வது திருப்பதியாக சிறப்பிக்கப்படும் இத்தலம் சந்திரனுக்கு உரிய தலமாகும். இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

புளிங்குடி கிடந்து வரகுண மங்கை
இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே
என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப
பனிங்கு நீர் முகிலின் பவளம் போல்
கனிவாய் சிவப்ப நீ காண வாராயே.
(3571) திருவாய்மொழி (9-2-4)


மூலவர்: விஜயாஸனர் (பரமபத நாதன்) | உற்சவர்: எம்மடர் கடிவான் | தாயார்: வரகுண வல்லி, வரகுண மங்கை | தீர்த்தம்: அக்னி தீர்த்தம், தேவ புஷ்கரிணி | விமானம்: விஜயகோடி விமானம்

வரகுணமங்கை என்று தாயார் பெயரிலேயே இவ்வூர் அழைக்கப்பட்டாலும், நத்தம் என்று சொன்னால் மட்டுமே பலருக்குப் புரியும். திருவரகுண மங்கை வேதவித்து என்ற அந்தணருக்கு பெருமாள் காட்சியளித்த தலமாகும். அவரது விண்ணப்பத்தின்படி பெருமாள் இங்கு விஜயாஸனர் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார். அக்னி, உரோமச முனிவர், சத்தியவான் ஆகியோருக்கும் பெருமாள் இங்கு காட்சி அளித்துள்ளார்.

கோயில் அமைப்பும் சிறப்பும்: விஜயகோடி விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் விஜயாஸனர் பெருமாள் கிழக்கு நோக்கி வீற்றிருந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். வரகுணமவல்லி, வரகுணமங்கை ஆகிய இரு தாயாருடன் பெருமாள் இங்கு சேவை சாதிக்கிறார். ஒரே ஒரு சொல்லால் இத்தலத்தை நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தலத்தில் உள்ள பெருமாளுக்கும், நரசிம்மருக்கும் ஏலக்காய் மாலை சமர்ப்பித்து வழிபட்டால், அனைத்து செயல்களும் வெற்றி பெறும் என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்: வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரை வருடப்பிறப்பு, ஆடி மாதப் பிறப்பு, புரட்டாசி சனிக்கிழமைகள், தீபாவளி, ஐப்பசி தெப்போற்சவம் (5 நாள்), திருக்கார்த்திகை தீப விழா, மார்கழி மாதப் பிறப்பு, பொங்கல், மாசி பிரம்மோற்சவம் (11 நாள்), பங்குனி உத்திர விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அன்றைய தினங்களில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும். காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.

திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறந்து விளங்க இத்தல பெருமாள் அருள்புரிவார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in