Published : 29 Dec 2016 10:58 AM
Last Updated : 29 Dec 2016 10:58 AM

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 10: அருட்பால் சுரந்த பரமனும் பன்றிக் குட்டிகளும்!

சோதனை பண்ணி அருளுவது ஒன்று, சோதனைகளைக் கொடுத்தருளுவது ஒன்று, சோதனையான காலங்களில் அருளுவதென்பது இன்னொன்று; இவை எல்லாவற்றிற்கும் சூத்திரதாரியான, இவை எல்லாவற்றிலும் கைதேர்ந்தவரான கைலாசநாதப் பெருமான், அர்ஜுனனுக்கு சோதனை கொடுத்து ஆட்கொண்டதைப் பார்த்தோம். இப்போது கர்மவினையால் (எல்லாமே கர்ம வினைதான்) பன்றிக் குட்டிகளுக்கு ஏற்பட்ட சோதனையின் போது, கருணை வெள்ளமாக வந்து அருள் செய்தைப் பார்ப்போம்.

பரமனை நோக்கிய தவம்

கடவுள் செய்யும் சோதனைதான் அருளென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மதுரையம்பதியில் வைகைக் கரை ஓரம், குருவிருந்த துறை என்ற ஒரு ஊர். அங்கே இருந்து தேவ குருவான வியாழன், பரமனை நோக்கித் தவம் புரிந்தான்.

அதே ஊரில் கருத்தொருமித்து வாழ்ந்த தம்பதிக்கு பன்னிரண்டு புதல்வர்கள் பிறந்தார்கள். விவசாயம் மூலம் நல்ல விளைச்சல். பயிரும், பணமும். செல்வச் செழிப்பும் பிள்ளைகளைச் சீரழியவும் செய்தது. பாசம் கண்டிக்கவிடவில்லை. கவலை வாட்டவும் தவறவில்லை; தலைவிதியை நொந்தபடி இறந்தனர் பெற்றோர்.

காணி நிலம் மறந்து, தொழிலை விடுத்து வேட்டையாடுவோர் சகவாசம் கொண்டு, காடுகளில் சுற்றித் திரிந்தனர் சகோதரர்கள். கண்ணில்பட்டதையெல்லாம் வேட்டையாடிக் களித்தார்கள்! அடே! இதை உண்ண முடியாதே! இதை எதற்குக் கொன்றாய் என்று வேடுவர்கள் கேட்டால், ‘‘என் கையால் அது இறக்க வேண்டும் என்று இருக்கிறது! விடுவியா, அதைவிட்டு...! வேலையைப் பாரு!” என்பான் ஒருவன். “சரியாகச் சொன்னாய் சகோதரா!” என்பான் இன்னொருவன். மற்றவர்களோ, காடு அதிரும்படிச் சிரிப்பார்கள். இந்தக் களேபரத்தின் நடுவில், ஆழ்ந்த தவத்தில் இருந்த வியாழ பகவான், அவர்களது கண்களில் மாட்டினார்.

கிண்டல், கேலி எல்லாமும் தாண்டி, எல்லை மீறியபோது வெகுண்டார் வியாழ பகவான். “உழவுத் தொழில் மறந்த நீங்கள், நிலத்தையும், சேற்றையும் உழுது, புரளும் பன்றிக் குட்டிகளாகப் பிறப்பீர்களாக.” வியாழ பகவான், வெகுளி பகவானாய் ஆகிச் சாபமிட்டார். பயந்து நடுங்கிய சகோதரர்கள் மன்னிப்பு கேட்டனர். பிராயச்சித்தம் என்னவென்று கேட்டனர். மனமிரங்கிய வியாழ பகவானும், வழி சொன்னார். உரிய காலத்தில் சொக்க நாதன் அருள் செய்து கரை சேர்ப்பார் என்றார்.

பூர்வஜென்ம ஞாபகமற்ற பன்றிகள்

அந்த ஊரின் அருகே அமைந்திருந்த அடர் காட்டில் வாழ்ந்த ஒரு பன்றிக் கூட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த பன்றித் தம்பதிக்கு, பன்னிருவரும் குட்டிகளாய் பிறந்தார்கள். உல்லாசமாய் உருண்டு, புரண்டு களித்தன.

ஒருநாள் பாண்டிய மன்னன், ஆரவாரத்தோடு வேட்டைக்கு வந்தான். கண்ணில் பட்டதை எல்லாம் கொன்று குவித்தான். தெறிந்து விழுந்த ரத்தத் துளிபட்ட ஒரு பன்றி ஓடி வந்தது. தனது தலைவனிடம் சேதி சொன்னது. “நான் பார்த்துக் கொள்கிறேன்! விலகு!” என்று வீறாப்பாய் மன்னனிடம் சண்டைக்குப் போய், முடிந்தவரை மோதி மாண்டது. பன்றியானாலும் பதி ஆயிற்றே தலைவிப்பன்றியும் தாவி ஓடி, பால் நிறைந்த தனங்களின் பாரத்தோடு முட்டி மோதிப் பார்த்தது, குட்டிகளைத் தவிக்க விட்டு உயிரை விட்டது.

ஒரு பன்றிக் கூட்டம் என்னை எதிர்ப்பதா? என்று கோபம் கொப்பளிக்க பாண்டியன், பன்றிகளைப் பந்தாடினான். முழுக் கூட்டமும் அடியோடு அழிய வேண்டும் என்று ஆணை பிறப்பித்தான். தேடித் தேடி அழித்து முடித்துக் கிளம்பினார்கள்; புதருக்குள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு பதுங்கி இருந்த குட்டிகள் பிழைத்தன. பார்க்கவோ, பராமரிக்கவோ, தாய் இல்லாத நிலையில் வாழ வழி ஏது? பசி வாட்டத் தொடங்க அவை முனகத் தொடங்கின. பின்னர் அதுவே பெருங்குரலாக மாறியது.

பால் அளித்த சிவன்

இனியும் தாமதம் வேண்டாம், புறப்படுங்கள் என்று பார்வதி தேவி கோர பரமனும் அவ்விடத்திற்குப் புறப்பட்டார்.கருணை பாலாய்ச் சுரக்க, தாய்ப் பன்றி உருவில் வந்தார். பால் கொடுத்தார். பாவத்தையும் களைந்தார். தெய்வீகப் பால் அந்தியதில் ஞானம் பெற்றன பன்றிக்குட்டிகள். முகம் மட்டும் அப்படியே இருக்க உடல் மனித உடலாய் மாறியது. பின்னர் அவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கி வாழும் சமயம், பாண்டியன் கனவில் தோன்றிய பரமன், அவர்களை அழைத்து வந்து மந்திரிகளாகப் பணியமர்த்தச் சொன்னார். விடிந்ததும் அழைத்து, மற்ற மந்திரி பிரதானிகளுடன் பன்றிமலை சென்று அவர்களைத் தக்க மரியாதையுடன் அழைத்து வர உத்தரவிட்டான். வந்தவர்களுக்குப் பணியும் கொடுத்து மணமும் முடித்து அழகு பார்த்தான் பாண்டியன் என்கிறது புராணம்.

குருவருளும் திருவருளும பெற்ற சிற்பிகள்

இங்கே நீங்கள் பார்க்கும் இன்த அற்புதமான சிற்பம் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகனைப் பார்த்த நிலையில் உள்ளது. பன்றியின் முகம் அவ்வளவு, அழகோடும், எழிலோடும் விளங்குவதைப் பார்க்கையில் அந்தச் சிற்பி நிச்சயம் குருவருளும், திருவருளும் நிறைந்தவரென்பது தெரிகிறது. இப்போதெல்லாம் பன்றி முகம், குதிரை முகம்போல இருப்பதை எல்லாம் பார்க்கிறோம். இங்கே இந்தப் பன்றியின் முகத்தில் பால் கொடுக்கும் தாய்க்கு ஏற்படும் அந்தச் சுகமான வலியை, கண்களில் பொதிந்து வைத்து அழகை என்னவென்பது! கடமையே என்று வந்து பால் கொடுக்காது, அந்தத் தாய்மையைத் தன்னுள் தேக்கி வைத்து, ஆண்டவன் அருள்வது கண்கொள்ளாக் காட்சி.

மிக கவனமாக வேடனையும், மீதிப் பன்றிக்குட்டிகள் காலில் துள்ளுவதையும் (இந்தப்பக்கம், அந்தப்பக்கம், கால்களின் நடுவில்) தாய்ப் பன்றி இறந்து கிடக்கும் காட்சியைக் காட்டியிருப்பதோடு அவற்றின் இயல்புகளையும் காட்டியிருப்பது நமது சிற்பிகளை எண்ணி பெருமை கொள்ள வைக்கிறது. பன்றிமேல் ஒரு அம்பு தைத்து வெளியே தெரிகிறது பாருங்கள்- பன்றித் தோலில் அவ்வளவு எளிதில் அம்பெய்து விடமுடியாது; பட்டுத் தெறிக்கும். உள்ள நுழைய முடியாத அம்பு, தோலில் உரசிப் பாய்ந்து வெளியில் தெரியும் நுணுக்கம் வியக்க வைக்கிறது. உயிர் குடித்த அம்பு அந்தப்பக்கம் இருக்கும் போலும்!

வளரும் சிற்பிகள் இவற்றை உன்னிப்பாகக் கவனித்து கதைகள் புராணங்களின் அறிவை விருத்தி பண்ணிக்கொள்வதோடு, மிருகங்கள், பறவைகள் பற்றிய அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பக்கத்தில் காட்டப்பட்ட சிற்பம் அதே கதைதான். இவை சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொற்சபையுடன் கூடிய பிரகாரத்தில், நடராஜருக்கு பின்புறம் அமைந்துள்ளது. இங்கே பன்றி உருவமே காட்டப்பட்டுள்ளது. பக்கத்தில் பாண்டியன் மந்திரியிடம் கூறுவதும், அடுத்ததில் மந்திரிப் பதவி ஏற்று, கிரீடங்களுடன் பன்னிருவரும் நிற்பதுமான அழகான சிற்பங்கள். கதை ஒன்றானாலும் கற்பனை வேறு! வேறு! திருப்பரங்குன்றம் சிற்பம், சிவபெருமானின் கம்பீரத்தையும் கருணையையும் ஒரு சேரக் காட்டியதில் நிமிர்ந்து நிற்கிறது, நம்மையும், நம் பாரம்பரியத்தையும் நிமிர்த்தி நிற்கிறது.

இந்தச் சிற்பம், சொக்கநாதருக்குப் பக்கத்தில் அமைந்திருக்கும் முருகன் கோவிலில் அமைந்திருக்கிறது.

குறிப்பு: இந்தச் சிற்பத்தின் கீழ்- வராஹி அம்மன் என்று எழுதப்பட்டுள்ளதால், மஞ்சளும், குங்குமமுமாய் பூசி அழகு போகப் பண்ணியிருக்கிறாரர்கள். எழுத்தை அழித்து சிற்பத்தை சுத்தப்படுத்தினால், சிற்பம் பழைய பொலிவைப் பெறும்- கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.

(அடுத்த வாரம்… )


ஓவியர் பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x