Last Updated : 03 Jul, 2014 10:06 AM

 

Published : 03 Jul 2014 10:06 AM
Last Updated : 03 Jul 2014 10:06 AM

ரமலான் சிறப்புக் கட்டுரை: வசந்தம் வந்தது

“இறைவா! அபயம், இறைநம்பிக்கை, சாந்தம், இஸ்லாம் ஆகியவற்றை நாங்கள் பெரும் பிறையாக இம்மாதப் பிறையை ஆக்குவாயாக! ஓ! பிறையே என்னுடைய உன்னுடைய இரட்சகன் இறைவனே ஆவான்!”1

ரமளானின் முதல் பிறையைக் கண்டதும் அண்ணல் நபிகளார் செய்யும் பிரார்த்தனை இது. நன்மைகளின் குவியலை எதிர்நோக்கியிருந்தவருக்கு அது தென்படும்போது ஏற்படும் உற்சாகம் அது.

ஆம்..! மனிதகுல நன்மையை நாடி ஓடி வந்தது மற்றொரு வசந்தம்.

சாதாரணமாக பார்ப்போருக்கு ரமளானுக்கும் மற்ற மாதங்களுக்கும் வித்யாசம் தெரியாமல் போகலாம். ஆனால், இறைவன் மற்றும் அவனுடைய இறுதித் தூதரின் பார்வையில் ரமளானுக்கும் மற்ற மாதங்களுக்கும் இடையே விண், மண் அளவு இடைவெளி உண்டு. அது என்னவென்று அறிந்து கொண்டால்… அந்த மாதத்தை வரவேற்க விழிப்புடன் காத்திருப்போம் கணந்தோறும். வரங்களை ஏந்திக் கொண்டு வரும் வசந்தம் ரமளான். இந்த அருட்கொடையை அளித்த இறைவனைப் புகழப் போதாது ஜீவிதம்.

ரமளானின் பூரண நன்மைகள் குறித்து அறிந்தவர்கள் நபி பெருமானார். அதனால்தான், ரமளானை எதிர்நோக்கி சில மாதம் முன்பே ஆவலுடன் காத்திருப்பார்கள். ரஜப், ஷாபான் பிறைகளில் மனம் மகிழ்ந்து போவார்கள்.

“இறைவா! எங்களை ரமளான் வரை சேர்ப்பாயாக!” என்று இறைவனை இறைஞ்சிய வண்ணமிருப்பார்கள். ரமளான் சமீபிக்கும் நிலையில் அதன் சிறப்புகளை எடுத்துரைப்பார்கள். ஒரு மாதம் முன்பே தம் தோழர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள்; அவர்கள் ரமளானின் பூரண நன்மைகளை அடைய.

அன்பு நபிகளாருடன் பயிற்சி பெற பேறில்லை நமக்கு!

ஆனாலும், என்றும் உயிர் வாழும் நடைமுறையாக விளங்குகின்றன நபி மொழிகள். துல்லியமாக, நபிகளாரைக் கண் முன் நிறுத்தும் சித்திரங்களாக, நடைபோடும் வாழ்வியல் முறைகள் அவை!

அதிலொன்று இது:

ஒருமுறை நபிகளார் அவர்கள் ஷாபான் மாத கடைசி நாட்களில் போதனைகள் செய்துகொண்டிருக்கிறார்கள். அப்போது கூறுகிறார்கள்: “மக்களே! மகத்துவமும், அருள்வளமும் மிக்க மாதம் ஒன்று நெருங்கிவிட்டது. அந்த மாதத்தின் ஓர் இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்”2

நபிகளாரின் வார்த்தைகள் சத்திய சிதறல்களாகும். மாணிக்கப்பரல்களாகும்.

ஆயிரம் மாதங்களைவிட சிறந்த ஓர் இரவு.. பேரிரவு.. லைலத்துல் கத்ர் எனப்படும் கண்ணியமிக்க இரவு மறைந்திருப்பதும் ரமளானில்தான்.

அண்ணலாரின் கன்னல் மொழிகள் மீண்டும்..

“.. இறைவன் இந்த மாத்தில் நோன்பு நோற்பதை கடமையாக்கியுள்ளான். இந்த மாதத்தின் இரவுகளில் தராவீஹ் தொழுவதை நஃபிலாக்கியுள்ளான் (உபரித் தொழுகை). யார் இந்த மாதத்தில் தானாக மனமுவந்து ஒரு நற்செயலைச் செய்கின்றார்களோ அவர் ரமளானல்லாத பிற மாதங்களில் ஒரு கடமையை நிறைவேற்றியவரைப் போன்றவராவார். இந்த மாதத்தில் ஒரு கடமையை நிறைவேற்றுபவராவார். இந்த மாதத்தில் ஒரு கடமையை நிறைவேற்றுபவர் ரமளான் அல்லாத பிற மாதங்களில் எழுபது கடமைகளை நிறைவேற்றியவர் போலாவார்”3

நெஞ்சை கொள்ளைக் கொள்ளும் நன்மாராயங்கள். மறுமையில் நாம் பெறும் வெற்றிக்காக போடப்பட்ட வழித்தடங்கள்.

பருவக் காலத்தில் விரைந்து விற்பனையாகும் பொருட்களை விற்க வியாபாரி சலிப்படைவதில்லை! வியாபாரத்தின் முதலீட்டை அதிகரிக்கத் தயங்குவது மில்லை! தன் தேவைகளைக்கூட சில நேரங்களில் சுருக்கிக் கொள்ளலாம். இது வியாபார லட்சணம். அதுபோல உண்மையான இறையடியான் வாழ்வின் வழிகாட்ட வந்த இறைத்தூதரின் நன்மொழிகளைப் பற்றிப் பிடித்து ‘மறுமைக்கான’ வியாபாரத்தில் ‘லாபம்’ சம்பாதிக்கவே முனைப்புடனிருப்பான். ரமளானின் ஒரு மணித்துளியையும் வீணாக்க விரும்ப மாட்டான்.

இறையடியானுக்கு ஒவ்வொரு மாதமும் இறையருள் பொழியும் மாதம்தான். ஆனால், ரமளானில் இறையருள் அடைமழையாய் பொழியும்போது அதை அலட்சியப்படுத்துவதேது?

ரமளானின் முக்கியத்துவங்களைக் குறித்து நபிபெருமானார் சொல்வதை இன்னும் கேட்போமா?

“.. இது பொறுமையின் மாதமாகும். பொறுமையின் கூலி சுவனமாகும். மேலும், இந்த மாதம் சமுதாயத்திலுள்ள ஏழைகள், தேவையுள்ளோர் மீது அனுதாபமும் பரிவும் செலுத்த வேண்டிய மாதமாகும்”4

வாழும் மொழிகளிவை என்றும்.

இன்னும் கொஞ்சம்…

“ரமளானில் ஒருவன் ஒரு நோன்பாளிக்கு நோன்பு துறக்க வசதி செய்து கொடுத்தால்.. அவனது குற்றங்களுக்கு மன்னிப்பும், நரகத்திலிருந்து விடுதலையும் கொடுக்கப்படும். அந்த நோன்பாளிக்குக் கிடைப்பது போன்ற நற்கூலியும் அவனுக்குக் கிடைக்கும்; அதிலிருந்து கொஞ்சமும் குறையாமல்..”

“… இது எத்தகைய மாதமென்றால்… இந்த மாதத்தின் முற்பகுதி ‘கருணையால்’ சூழப்பட்டது. நடுப்பகுதி ‘மன்னிப்பால்’ நிறைந்தது. பிற்பகுதியோ நரகத்திலிருந்து ‘முக்திபெற’ உதவுவது.”

கேட்டீர்களா… நன்மாராயங்களை? தேனூற்றுகளை..? இறையடிமை எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமெனத் தெளிவுபடுத்தும் பொன்மொழிகளிவை.

நபிகளார் எல்லாவற்றுக்கும் முதன்மையாக வலியுறுத்தும் விஷயம் ‘பொறுமை’. இது ஆன்மிக வாழ்வின் உயிர் போன்றது. இறைவழியில் உறுதியாய்… கலங்காமல்… நிலைகுலையாமல் நிற்க உதவும் அடிப்படை இது.

சத்தியத்துக்காக.. அறப்போர் புரிய, இறைக்கட்டளையை பாரெங்கும் நிலைநிறுத்த தேவை… பொறுமை. யார் பொறுமையெனும் நற்குணத்தை ரமளானில் பெறுகிறாரோ அவர் எத்தகைய சூறைக் காற்றுகளிலும், வாழ்வின் போக்குகளிலும் நிலைகுலையாமல் நிற்பார்.

மனித குலம் கூட்டுவாழ்வுடன் சம்பந்தப்பட்டது. அவ்வாழ்வின் மேன்மைக்குப் பெரிதும் உதவும் மாதம் ரமளான். கஷ்ட, நஷ்டங்களை, சுக துக்கங்களை ஒருவர் மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தும் மாதமிது. இந்த முக்கியத்துவத்தை எவ்வகையிலும் நாம் பாழாக்கக் கூடாது.

அதுபோலவே, இறைவனின் கருணையை ஈட்ட, அவனுடைய கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள முயல்வோருக்கு விலைமதிப்பற்ற மாதமிது! அதனால், இறைவனின் அருளுக்காக நாம் ஏங்கிய வண்ணம் இருக்க வேண்டும். நம் பாவங்கள் மன்னிக்கப்பட அவனை இறைஞ்சிய வண்ணமிருக்க வேண்டும். இறைவனுக்குப் பிடிக்காத எச்செயலையும், இனி செய்வதில்லை என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். நற்காரியங்களில் முனைப்புடனிருப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் ஒன்றை மீண்டும் பார்ப்போமா?

“ஒருவர் ரமளானின் இரவு களில் இறை நம்பிக்கையுடனும், மறுமையின் நற்கூலியைப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்துடனும் (தராவீஹ்) தொழுகை செய் வாராயின் அவர் முன்னர் செய்த பாவங்களை இறைவன் மன்னித்துவிடுவான்”5

மொத்தத்தில், இறையடியார் களுக்கு ரமளான் ஒரு வசந்தம். அதிலிருந்து பயன்பெறாவிட்டால் கைசேதம். அடுத்த முறை எல்லோருக்கும் இந்த நற்பேறு கிட்டும் என்பதில் உத்திரவாத முமில்லை. அதனால், இதையே இறுதி வாய்ப்பாக நாம் பாவித்து நற்காரியங்களில் விரைந்து ஈடுபடுவோமாக!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x