Published : 15 Oct 2022 06:13 AM
Last Updated : 15 Oct 2022 06:13 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 28 | சீர்காழி திரிவிக்கிரம பெருமாள் கோயில் 

சீர்காழி திரிவிக்கிரம பெருமாள் கோயில் 

திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 28-வது திவ்ய தேசம், மயிலாடுதுறை மாவட்டத்தில் காழிச் சீராம விண்ணகரம், பாடலிகவனம் என்று அழைக்கப்படும் சீர்காழி திருவிக்கிரம பெருமாள் கோயில் ஆகும். ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.


திருமங்கையாழ்வார் பாசுரம்:

நான்முகன் நாள் மிகைத் தருக்கை இருக்கு வாய்மை நலமிகு சீர் உரோமசனால் நவிற்றி நக்கன்
ஊன் முகமார் தலையோட்டூண் ஒழித்த எந்தை ஒளி மலர்ச் சேவடி அணைவீர் உழுசேயோடச்
சூல் முகமார் வளை அளைவாய் உகுத்த முத்தைத் தொல் குறுக்கு சினை என்னச் சூழ்ந்து இயங்க எங்கும்
தேன் முகமார் கமல வயல் சேல் பாய் காழிச் சீராம விண்ணகரே சேர்மின் நீரே


மூலவர்: திரிவிக்கிரம நாராயணர்,

உற்சவர்: தாடாளன்

தாயார்: லோகநாயகி,

தல விருட்சம்: பலா,

தீர்த்தம்: சங்கு, சக்கர தீர்த்தம்

தலவரலாறு

படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நான்முகன், பல யுகங்கள் வாழும்படி சாகாவரம் பெற்றிருந்தார். இதனால் அவர் மிகுந்த கர்வத்துடன் இருந்தார். இவரது கர்வம் குறித்து திருமால் அறிந்தார். இவரது கர்வத்தை அடக்க தகுந்த நேரம் பார்த்து காத்திருந்தார் திருமால்.

உரோமச முனிவருக்கு உடல் முழுவதும் முடி உண்டு. தனது ஆயுட்காலத்தைப் பற்றி கர்வம் கொண்ட நான்முகன், உரோமச முனிவரை கேலி செய்யும் நோக்கில் அவரை நோக்கி, ”உன் ரோமம் என் ஆயுள் என்று சொல்லலாம்”என்றான். உடனே அதை நிஜமாக்க முடிவு செய்தார் உரோமச முனிவர்.

இதற்கிடையே உரோமச முனிவருக்கு திருமாலின் (வாமன அவதாரம் எடுத்து காலைத் தூக்கி மூன்று உலகங்களையும் அளந்து காட்டிய) திரிவிக்கிரமன் கோலத்தைக் காணவேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று. தனது விருப்பத்தை திருமாலிடம் வெளிப்படுத்திய முனிவர், அவரை நோக்கி தவம் இருந்தார்.

முனிவர் முன் தோன்றிய திருமால், அவருக்கு திரிவிக்கிரமன் கோலத்தைக் காட்டி அருள்பாலித்தார். பின்னர் உரோமசரிடம், “இந்த கோலத்தை நீங்கள் தரிசித்ததால், நீங்கள் பெறுவதற்கரிய பல பேறுகளைப் பெற்று சிறப்பான நிலையை அடைவீர்கள். நான்முகனை விட கூடுதலான ஆயுட்காலத்தைப் பெறுவீர்கள். உன் சரீரத்தில் இருந்து ஒரு ரோமம் உதிர்ந்தால், பிரம்மன் ஆயுட்காலத்தில் ஓர் ஆண்டு குறையும்” என்று அருளினார்.

திருமாலின் இந்த செயலைக் கண்டு வெட்கி தலை குனிந்த நான்முகன் தன் கர்வம் அழியப் பெற்றார்.

சைவ சமயக் குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரின் அவதாரத் தலம் சீர்காழி. இவர் சீர்காழியிலேயே தங்கியிருந்து சிவத்தொண்டு புரிந்து வந்தார். பெருமாள் கோயில் சிலகாலம் வழிபாட்டில் இல்லாதபோது அவ்வூரில் உள்ள ஒரு மூதாட்டி, தன் வீட்டில் உள்ள தவிட்டுப் பானையில் உற்சவர் தாடாளனை மறைத்து வைத்து வணங்கி வந்தாள். திருமங்கையாழ்வார் இவ்வூருக்கு வந்தபோது, சம்பந்தரின் சீடர்களுக்கும் திருமங்கையாழ்வாரின் சீடர்களுக்கும் சிறு பிரச்சினை ஏற்பட்டது.

அதன்காரணமாக திருமங்கையாழ்வாருக்கும் திருஞான சம்பந்தருக்கும் வாதப்போட்டி நடத்துவது என்று முடிவாயிற்று. அதற்கு மறுநாள் வாதப்போட்டி என்று நாளும் குறித்தாயிற்று. எனவே திருமங்கையாழ்வார் சீர்காழியிலேயே அன்றிரவு தங்கினார்.

இரவு திருமங்கையாழ்வாரின் கனவில் திருமால் தோன்றி, தான் மூதாட்டியின் தவிட்டுப் பானையில் இருப்பதாகத் தெரிவித்தார். அதன்படி மூதாட்டியிடம் இருந்து உற்சவர் தாடாளனைப் பெற்றுக் கொண்டு வாதத்துக்கு தயாரானார். போட்டி தொடங்கியது. திருமங்கையின் பெருமையை உணர்ந்த சம்பந்தர் அவரைப் பாராட்டி தான் வைத்திருந்த வேலை பரிசாகக் கொடுத்தார். காலில் தண்டையையும் அணிவித்தார்.

திருமங்கையாழ்வார், பெருமாள் கோயிலை அனைவரும் வழிபடும்படி திறந்து வைத்தார். உற்சவர், தாயார், உரோமச முனிவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்தார்.

(விண்ணகரம் என்றால் ஆகாயத்துக்கு அப்பாலுள்ள வைகுண்டம் என்ற அர்த்தம்..

1.பரமேஸ்வர விண்ணகரம்.(காஞ்சிக்கு அருகில்)
2.காழிச்சீராம விண்ணகரம்.(சீர்காழி)
3.அரிமேய விண்ணகரம்.(திருநாங்கூர்)
4. வைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்)
5. திருநந்திபுரவிண்ணகரம் .(நாதன்கோயில்).

இந்த ஐந்து க்ஷேத்திரங்களையும் வைகுண்டத்துக்கு இணையானது என்று பாடியுள்ளார் திருமங்கையாழ்வார்)

கருவறையில் இடது காலை தலைக்கு மேல் தூக்கியபடியும், வலக்கையை தானம் பெற்ற அமைப்பிலும், இடக்கையில் ஒரு விரலை மட்டும் தூக்கியபடி திரிவிக்கிரமனாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் திருமால். தவிட்டுப்பானை தாடாளன் என்று அழைக்கப்படும் உற்சவர், மூலவருக்கு அருகே உள்ளார்.

தன் திருவடியால் மூன்று உலகங்களையும் அளந்தவன் என்பதால் ஆண்டாள் இவருக்கு ‘தாடாளன்’ என்று பெயர் சூட்டி, உலகளந்த பெருமாள் குறித்து தனது திருப்பாவை, நாச்சியார் திருமொழியில் பாடியுள்ளாள். மழலை செல்வம் வேண்டி தாடாளனை வணங்கினால், குழந்தை பாக்கியத்தை அவன் அருள்வான் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பொதுவாக பெருமாள் தன் மார்பில் திருமகளைத் தாங்கி இருப்பார். ஆனால் இங்கு தாயார் தனது மார்பில் திரிவிக்கிரமனைத் தாங்கியபடி அருள்பாலிக்கிறாள். ஒருகாலைத் தூக்கியபடி திருமால் இத்தலத்தில் அருள்பாலிப்பதால், அவர் பாதம் வலித்துவிடாமல் இருப்பதற்காக திருமகள் அவரைத் தாங்குவதாகக் கூறப்படுகிறது. தாயாரை மனமுருகி சேவித்தால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். பெண்கள் கணவர் மீது கூடுதல் அன்பு செலுத்துவர் என்றும் கூறப்படுகிறது.



பிரகாரத்தில் ராமர் சந்நிதியும் வெளிப்புறத்தில் ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளன.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு சிறப்பாக நடைபெறும். தை மாதத்தில் 10 நாள் பிரம்மோற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படும். வெள்ளிக்கிழமைதோறும் தாயாருக்கு ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. தங்க கருடனுக்கு தினசரி இரண்டு கால பூஜைகள் நடைபெறுகின்றன.

வாஸ்து பூஜை செய்யும் முன்பு இங்குள்ள பெருமாளை சேவிப்பது பக்தர்களின் வழக்கமாக உள்ளது. பணிகளில் சிறக்க, பதவி உயர்வு பெற, ஆயுள் விருத்தி பெற பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை பெருமாளிடம் சமர்ப்பிப்பர்.

அமைவிடம்: சீர்காழி நகரின் மையப்பகுதியில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x