

108 வைணவ திவ்ய தேசங்களில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகை சௌந்தர்ராஜப் பெருமாள் கோயில் 19-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. ஆதிசேஷன் தவம் புரிந்து திருமாலின் சயனமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தலம். இதன் காரணமாக இவ்வூர் ‘நாகன்பட்டினம்’ என்றாகி பின்னர் நாகப்பட்டினம் என்று மாறியதாக கூறப்படுகிறது.
திரேதாயுகத்தில் பூமாதேவியும், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயரும் இத்தலத்தில் தவம் புரிந்துள்ளனர். திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.
பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கினஞ் சோதி யகலத்தாரம்
மின், இவர் வாயில்நல் வேதமோதும் வேதியர் வானவ ராவர் தோழி
என்னையும் நோக்கியென் நலுலும் நோக்கி ஏத்தினங் கொங்கையும் நோக்குகின்றார்
அன்னையென் நோக்குமென்றஞ்சு கின்றேன் அச்சோ ஒருவர் அழகியவா?
மூலவர்: நீலமேகப் பெருமாள்
உற்சவர்: சௌந்தர்ராஜப் பெருமாள்
தாயார்: சௌந்தரவல்லி / கஜலட்சுமி
தல விருட்சம்: மாமரம்
தீர்த்தம்: சார புஷ்கரிணி
ஆகமம் / பூஜை: பாஞ்சராத்ர ஆகமம்
விமானம்: சௌந்தர்ய விமானம்
தல வரலாறு
உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன், நாரத மகரிஷி மூலம் நாகப்பட்டினத்தின் பெருமைகளை உணர்கிறான். உலகம் முழுவதும் தனக்கு அடிமையாக வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டு, பெருமாளை தியானித்து இத்தலத்தில் தவம் மேற்கொள்கிறான். தேவர்களின் இடையூறுகளுக்கு இடையேயும், தனது தவத்தை வெற்றிகரமாக நிறைவு செய்கிறான் துருவன்.
கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், துருவனுக்கு காட்சி கொடுத்தார், பெருமாளின் பேரழகைக் கண்டதும் (சௌந்தர்யம்), கேட்க வேண்டிய வரத்தை மறந்த துருவன், உலகிலேயே இறைவனின் அழகைக் காண்பதே உண்மையான சுகம் என்று உணர்கிறான். இந்த அழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியம் தனக்கு கிடைக்க வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டுகிறான். பெருமாளும் இத்தலத்திலேயே கோயில் கொண்டார். பேரழகு கொண்ட பெருமாளாக காட்சி கொடுத்ததால், ‘சௌந்தர்ராஜ பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். பெருமாளின் அழகில் மயங்கிய திருமங்கையாழ்வார், 9 பாடல்களைப் பாடிவிட்டு, தனது 10-வது பாடலில்தான் இத்தலத்தின் பெயரைக் குறிப்பிடுகிறார்.
நாகப்பட்டினம்
நாகர் தலைவன் ஆதிசேஷன், இத்தலத்தில் சார புஷ்கரிணி என்று ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதன் கரையில் அமர்ந்து பெருமாளை நோக்கி தவமிருந்தார். பெருமாளும் ஆதிசேஷனின் தவத்தில் மகிழ்ந்து, அவரை தனது படுக்கையாக ஏற்றுக் கொள்வதாக அருள்புரிந்தார், அதன் காரணமாகவே இத்தலம் நாகப்பட்டினம் என்று பெயர் பெற்றது.
ஆதிசேஷன் உருவாக்கிய சார புஷ்கரிணியில் நீராடி, சுவாமி தரிசனம் செய்தால், சூரிய மண்டலத்தை அடையலாம் என்பது ஐதீகம். கண்டன், சுகண்டன் என்ற இரு சகோதர்கள் நிறைய கொடுஞ்செயல்கள் புரிந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் சார புஷ்கரிணியில் நீராடியதால், செய்த பாவங்கள் நீங்கப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இருவரது சிலைகள் இக்கோயிலில் பெருமாள் சந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன.
கோயிலின் அமைப்பும், சிறப்பும்
ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது, பலி பீடமும், கொடி மரத்தருகே கருடாழ்வார் சந்நிதியும் உள்ளது. கருவறையில் மூலவர் சௌந்தர்ராஜப் பெருமாள் கிழக்கு பார்த்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். தசாவதாரங்களை விளக்கும் செப்புத் தகட்டால் உருவாக்கப்பட்ட மாலை பெருமாளின் இடையை அலங்கரிக்கிறது.
மூலவர் சந்நிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் சௌந்தர்ராஜப் பெருமாள் கிடந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். அருகே சேனை முதல்வர், ஆழ்வார், ஆச்சார்யன் சந்நிதி உள்ளன. கருவறை உள் சுற்றில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. வெளிச்சுற்றில் வைகுண்ட நாதர், சௌந்தரவல்லி தாயார், சீனிவாசப் பெருமாள், ஆண்டாள், ராமபிரான், வீர ஆஞ்சநேயர் சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தில் உள்ள அஷ்டபுஜ துர்கை சக்தி மிக்கவராகப் போற்றப்படுகிறார்.
இத்தலத்தில் உள்ள நரசிம்மப் பெருமாள் 8 கரத்துடன் அஷ்டபுஜ நரசிம்மராக அருள்பாலிக்கிறார். பிரகலாதனை ஆசிர்வதிப்பதுபோல் ஒரு கரமும், அபய முத்திரை காட்டியபடி ஒரு கரமும், மற்ற கரங்கள் இரண்யனை வதம்செய்தபடியும் அமைந்துள்ளன.
ஆதிசேஷன், துருவன், திருமங்கையாழ்வார், சாலிசுக சோழன் இத்தலப் பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். பிள்ளை பெருமாள் அய்யங்கார், திருக்குருகைப் பெருமான் கவிராயர், முத்துசுவாமி தீட்சிதர், இத்தலப் பெருமாளைப் போற்றி பாடல்கள் புனைந்துள்ளனர்.
பிரம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் 10 அத்தியாயங்களில் ‘சௌந்திர ஆரண்ய மகிமை’ என்ற பெயரில், இத்தலம் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
திருவிழாக்கள்
பங்குனி பிரம்மோற்சவம் (10 நாள்), ஆனி உத்திர விழா (10 நாள்), ஆண்டாள் ஆடிப்பூர விழா (10 நாள்), தை, புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு பூஜை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அன்றைய தினங்களில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும். பல்வேறு வாகனங்களில் சுவாமி, தாயார் எழுந்தருளி வீதியுலா நடைபெறும்.