Published : 03 Oct 2022 05:30 AM
Last Updated : 03 Oct 2022 05:30 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 16 | திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில்

பக்தவத்சல பெருமாள் கோயில்.

முனைவர் கே.சுந்தரராமன்

திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை (லட்சுமி வனம்) பக்தவத்சல பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 16-வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்துக்கு சப்த புண்ணிய க்ஷேத்ரம் என்ற பெயர் உண்டு. திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.

பண்ணினைப் பண்ணில் நின்றதுஓர் பான்மையைப் பாலுள் நெய்யினை மால் உருவாய் நின்ற

விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை

மண்ணினை மலையை அலை நீரினை மாலை மாமதியை மறையோர் தங்கள்

கண்ணினைக் கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே.

மூலவர்: பக்தவத்சலப் பெருமாள், பத்தராவிப் பெருமாள்

உற்சவர்: பெரும் புறக்கடல் பெருமாள்

தாயார்: கண்ணமங்கை நாயகி (அபிஷேகவல்லி)

தலவிருட்சம்: மகிழ மரம்,

தீர்த்தம்: தர்ஷண புஷ்கரிணி

ஒருசமயத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் கடும் போர் மூண்டது. இதில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர், கவலையடைந்த தேவர்கள், இந்திரன் தலைமையில் நான்முகனை சந்தித்து போருக்கு தீர்வு காணுமாறு வேண்டினர். நீண்ட சிந்தனைக்குப் பின் அவர், திருமால் இப்பிரச்சினையை தீர்த்து வைப்பார் என்றார்.

தேவர்களும் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலை சந்தித்து இறவா நிலையை அடைய வழி கூறும்படி வேண்டி நின்றனர். திருமாலும் பாற்கடலைக் கடைந்து அதில் இருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்தினால் இறவா நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.

பாற்கடலைக் கடைவது ஒன்றும் சுலபமாக செயல் இல்லை என்பதை உணர்ந்த தேவர்கள் அதற்கு வழி கூறும்படி திருமாலைக் கேட்டனர். மந்திரகிரி மலையை மத்தாக்கி வாசுகி என்ற பாம்பை கயிறாக்கி பாம்பின் தலைப்பகுதியில் அசுரர்களும், வால்பகுதியில் தேவர்களும் நின்று பாற்கடலைக் கடைந்தால் அமிர்தம் கிடைக்கும் என்று வழிகூறினார் திருமால். அதன்படி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர்.

பாற்கடலைக் கடைந்தபோது அதில் இருந்து கற்பக விருட்சம், காமதேனு முதலானவை தோன்றின. நிறைவில் திருமகள் வெளிப்பட்டாள். முதலில் அவள் திருமாலின் சவுந்தர்ய தோற்றத்தைக் கண்டாள். அந்த தோற்றத்தையே மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய கடும் தவம் இருந்தாள்.

திருமகள் தவம் இருப்பது பெருமாளுக்கு தெரியவந்தது. தனது மெய்க்காப்பாளரான விஷ்வக்ஸேனரிடம் இதுகுறித்து கூறி முகூர்த்த தேதி குறித்துத் தரக் கூறினார்.

பிறகு மகாலட்சுமிக்கு காட்சி கொடுத்து முப்பத்து முக்கோடி தேவர்கள் சூழ திருமால் இத்தலத்துக்கு வந்து லட்சுமியை கரம்பிடித்தார். தனது பாற்கடலைவிட்டு வெளியே வந்து திருமகளை மணம் முடித்ததால் பெருமாளுக்கு ‘பெரும் புறக்கடல் பெருமாள்’ என்ற பெயர் நிலைத்தது. மகாலட்சுமி இத்தலத்தில் தவம் செய்ததால் இத்தலம் ‘லட்சுமி வனம்’ என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்திலேயே திருமணம் நடந்ததால் ‘கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம்’ என்ற பெயரும் ஏற்பட்டது.

ஒரு தலத்துக்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற ஏழு லட்சணங்களுடன் இத்தலம் அமையப் பெற்றதால் இத்தலத்துக்கு ‘சப்த புண்ணிய க்ஷேத்ரம்’, ‘சப்தாம்ருத க்ஷேத்ரம்’ என்ற பெயர்களைப் பெற்றது. மேலும் மோட்சம் வேண்டுபவர்கள் இத்தலம் வந்து ஓர் இரவு மட்டும் இங்கு தங்கினால் போதும். பக்தர்களுக்காக ஆவி போல் வேகமாக வந்து அருள்பாலிப்பதால் பக்தர் ஆவி – பத்தராவி என்ற பெயர் பெற்றார் பெருமாள்.

இத்தலத்தில் திருமால் – திருமகள் திருமணம் நடைபெற்றதால், அந்நிகழ்வை எப்போதும் காணவேண்டும் என்று தேவர்கள் நினைத்தார்கள். அதனால் தேனீக்கள் வடிவம் எடுத்து இத்தலத்தில் இருப்பதாக கூறுவர். அதற்கேற்ப தாயாரின் சந்நிதியின் வடப்புறத்தில் ஒரு தேன் கூடு உள்ளது. இந்த தேன் கூடு எவ்வளவு காலமாக இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. இத்தேனீக்கள் பக்தர்கள் யாருக்கும் இன்னல்கள் விளைவிப்பது இல்லை, இது இத்தலத்தில் நிகழும் அற்புதம் ஆகும்.

இத்தல பெருமாள் உத்பல விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். ஈசன் நான்கு உருவம் எடுத்து இத்தலத்தின் நான்கு திசைகளையும் காத்து வருகிறார். பொதுவாக விஷ்வக்ஸேனர் நான்கு கரங்களுடன் அருள்பாலிப்பார். ஆனால் இத்தலத்தில் இருக்கும் விஷ்வக்ஸேனர், பெருமாள் சார்பாக மகாலட்சுமியை சந்திக்கச் சென்றதால் இருகரங்களுடன் அருள்பாலிக்கிறார்.

திருமால் வாமன அவதாரம் எடுத்தபோது வானத்தை அளந்த காலை, நான்முகன் தனது கமண்டல நீரால் அபிஷேகம் செய்தார். அதில் இருந்து ஒரு துளி தீர்த்தம் இத்தலத்தில் விழுந்து, அதுவே தர்ஷண (தரிசன) புஷ்கரிணி ஆயிற்று. மேலும் இத்தீர்த்தத்தை தரிசனம் செய்தாலே சிறந்த பலனை அளிக்கும் என்று கூறுவர். ஒரு சமயம் சந்திர பகவான் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்க பல இடங்கள் சென்றார். அப்போது இந்த புஷ்கரிணியைக் கண்டதுமே அவரது சாபம் நீங்கியது. இத்தல தாயாரை பெருமாள் இத்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, பட்டமகிஷி ஆக்கினார். இதன் காரணமாக இத்தல தாயாருக்கு ‘அபிஷேக வல்லி’ என்ற பெயர் வழங்கலாயிற்று. இத்தலத்தை வருணன், உரோமச முனிவர், முப்பத்து முக்கோடி தேவர்கள் தரிசித்துள்ளனர்.

5 அடுக்கு ராஜ கோபுரத்துடன் அமைந்துள்ள கோயிலுக்குள் நுழைந்தால் பிரகாரத்தில் ஆழ்வார்கள், அபிஷேகவல்லித் தாயார், வசந்த மண்டபம், ஆண்டாள், ஹயக்ரீவர், மணவாள மாமுனிவர் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள கருடாழ்வார் நின்ற கோலத்தில் பிரம்மாண்டமாக அருள்பாலிக்கிறார். கோயிலுக்கு எதிரே ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. திருமங்கையாழ்வார் தனது 14 பாசுரங்களில் இத்தலத்தைப் பாடியுள்ளார். இத்தலம் தமிழகத்தில் உள்ள பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று.

(பஞ்ச கிருஷ்ண தலங்கள் – திருக்கண்ணங்குடி லோகநாத பெருமாள் கோயில், கபிஸ்தலம் கஜேந்திர வரதர் கோயில், திருக்கண்ணபுரம் நீலமேகப் பெருமாள் கோயில், திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில்)

இத்தலத்துக்கு திருக்கண்ணமங்கை என்ற பெயர் வழங்கப்பட்டதற்கு காரணமாக ஒரு சம்பவம் உண்டு. நாதமுனிகள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர். இவருக்கு திருக்கண்ணமங்கை ஆண்டான் என்று ஒரு சீடர் இருந்தார், அவர் பெருமாளிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு, கோயிலை தூய்மைப்படுத்துவதிலும் பெருமாள் சேவை என்பதிலும் தனது காலத்தைக் கழித்து வந்தார். ஒருநாள் வேதபாராயணம் செய்துகொண்டே, நாய் வடிவம் எடுத்து மூலஸ்தானத்துக்குள் ஓடி ஜோதியாகி, பெருமாளுடன் கலந்தார். ஆனி மாதம் திருவோண நட்சத்திரம் அவரது நட்சத்திரம் ஆகும். இன்றும் அவரது நட்சத்திரம் மகா நட்சத்திரமாக கொண்டாடப்படுகிறது. இவரது பெயரே இவ்வூருக்கும் நிலைத்து விட்டது. பத்ம புராணம் 5-வது காண்டத்தில் 81 முதல் 87 வரையிலான 7 அத்தியாயங்களில் இத்தலம் பற்றி கூறப்படுகின்றது.

திருவிழாக்கள்

  • சித்திரை மாத பவுர்ணமியை ஒட்டி 10 நாள் உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
  • திருமணத் தடை நீங்க, குழந்தை வரம் பெற, நல்ல வேலை கிடைக்க, நினைத்தது நடைபெற பதவி உயர்வு பெற இத்தல பெருமாள் அருள் புரிவார்.

அமைவிடம்: திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x