Last Updated : 13 Oct, 2016 11:40 AM

 

Published : 13 Oct 2016 11:40 AM
Last Updated : 13 Oct 2016 11:40 AM

குர்ஆன் உவமைகள்: மழையைப் போன்றவன் அல்லாஹ்

மழை இல்லாது போனால் நீர் இல்லை, நீர் இல்லையென்றால் அன்றாட வாழ்க்கையே முடங்கிவிடும். உலக வாழ்க்கை முடங்கிப்போனால் ஒழுக்கம், நீதி, தர்மம் அனைத்துமே நிலைபெறாமல் போய்விடும். நீர் இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியுமா?

மழையின் மாண்பைப் பற்றி குர்ஆனில் பல இடங்களில் இறை வசனங்கள் எடுத்துரைக்கின்றன. உவமையாகவும், பொது உண்மைகளாகவும் மழையின் அருமை மொழியப்பட்டிருக்கிறது. இறைவன் தன் அருளின் அடையாளமான மழையைப் பொழிவிப்பதற்கு முன் காற்றை அனுப்புகிறான் என்று அது குறிப்பிடுகிறது.

“நிச்சயமாக, அல்லாஹ்தான் மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து அதனை பூமியில் ஊற்றுகளாக ஓடச் செய்கிறான். அறிவுடையோருக்கு இதில் அத்தாட்சி இருக்கிறது; படிப்பினை இருக்கிறது என்றும் குர்ஆன் கூறுகிறது.

“(நபியே!) நீர் பார்க்க வில்லையா? நிச்சயமாக, அல்லாஹ்தான் பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும் மேகங்களை ஓட்டி, அவற்றை ஒன்று சேர்த்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்குகிறான். பின்னர் அந்த மேகங்களின் மத்தியிலிருந்து மழையைப் பொழிவிப்பதையும் காண்கிறீர்” என நுார்- பிரகாசம் அத்தியாயம் கூறுகிறது (24:43)

“அவனே மேகத்திலிருந்து மழையைப் பொழியச் செய்து உயிரிழந்த பூமிக்கு அதைக் கொண்டு ஜீவனளிக்கிறான்!” என்று தேனீ அத்தியாயத்தில் மீண்டும் எடுத்துரைக்கிறான் இறைவன்.

உயிரிழந்த பூமி, மழையினால் எவ்வாறு உயிர் பெறுகிறது என்பதைக் கால்நடைகள்- அன்ஆம்- அத்தியாயமும் வரையறுத்துச் சொல்கிறது.

அவ்வப்போது மழையைப் பொழியவைக்கும் இறைவன் பூமியில் தேவைான அளவுக்கு நீரைத் தங்கும்படி செய்கிறான்.

காற்று அடித்துச் செல்லும் பதர்

“இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உவமானம், அது நாம் வானத்திலிருந்து அனுப்புகிற மழை நீருக்கு ஒப்பாகும். ஆகவே, பூமியிலுள்ள புல் பூண்டுகள் அதனுடன் செழித்து வளர்ந்து பின்னர் அது காற்று அடித்துச் செல்லும் காய்ந்த பதராகிவிடுகிறது. அல்லாஹ் சகல பொருள்களின் மீதும் சக்தியுள்ளவனாக இருக்கின்றான்…”

கஹஃப் (குகை) அத்தியாயத்தின் வசனம் இது. வானத்திலிருந்து மழை எதற்காக அனுப்பப்படுகிறது?

பூமி செழித்து வளம்பெற வேண்டும். மக்களின் தாகத்தைத் தணித்து உயர்த்த வேண்டும். வறண்டு போன நீர்நிலைகள் நிரம்ப வேணடும். உயிரினங்களும் பயிர் வகைகளும் மழை வளத்தால் செழித்துப் பலன் தருகின்றன. எதுவரை?

குர்ஆனின் மற்றொரு வசனம் இதற்கு பதிலாக அமைந்திருக்கிறது.

“மனிதர்களே, நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக, இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கை யும், அலங்காரமும்தாம்! மேலும், அது உங்களுக்கிடையில் வீண் பொறாமை ஏற்படுத்துவதாகவும், பொருள்களிலும் சந்ததிகளிலும் போட்டி ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. இது மழையின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அதன் உதவியால் முளைத்த பயிர்கள் நன்கு வளர்ந்து விவசாயிகளுக்குக் களிப்பைத் தந்துகொண்டிருந்தன. பின்பு காய்ந்து விடுகின்றன. அதை மஞ்சள் நிறத்தில் நீங்கள் காண்கிறீர்கள். பிறகு அது காற்றில் பறக்கும் சருகுகளாகி விடுகிறது. இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கிறது” ஹதீத்- இரும்பு அத்தியாயம் இவ்வாறு விவரிக்கிறது (57:20)

மழை நீர் இந்தக் காரியங் களுக்குக் காரணமாகவும், ஒரு கருவியாகவும் இருக்கிறது. ஆனாலும் அனைத்தையும் நாடியபடி நடத்திவைப்பவன் இறைவன். ‘ஆகுக!’ என்று அவன் நினைத்த மாத்திரத்தில் நடக்கும் இயற்கை நிகழ்ச்சி இது. இந்த விளைவுகள் பயிரினங்களுக்கு மட்டுமல்ல. எல்லா உயிரினங்களுக்கும உரியது.

“செல்வமும் மக்களும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களாகும். ஆனால், என்றும் நிலைத்திருக்கும் நற்செயல்கள் உம்முடைய இரட்சகனிடம் சன்மானத்தில் சிறந்தவையாகவும், நம்பிக்கை மிக்கவையாகவும் இருக்கின்றன!” என்று கஹஃப் குகை- அத்தியாய வசனம் (18:46) கூறுகிறது.

“ செல்வத்தையும் மக்களையும் நாடியவருக்கு மறுமையில் தண்டனையும், மறுமையை விரும்புவோருக்கு இறைவனின் மன்னிப்பும் திருப் பொருத்தமும் உண்டு. இவ்வுலக வாழ்க்கை சொற்ப சுகமேயன்றி வேறில்லை!” என்று இரும்பு அத்தியாய வசனம் எடுத்துரைக்கிறது.

மக்கள் இறை விசுவாசிகளாக வாழ வேண்டும், அன்றாடம் நற்கருமங்களைச் செய்துவந்தால் இம்மையிலும் மறுமையிலும் நலமும் வளமும் உண்டு, மழை உவமையாகக் கூறப்பட்டாலும், இறைவனின் அருள்மழை அரிய உருவகமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x