Last Updated : 27 Oct, 2016 09:42 AM

 

Published : 27 Oct 2016 09:42 AM
Last Updated : 27 Oct 2016 09:42 AM

ஆலயம் ஆயிரம்: புகழ் நிறைந்த புகழிமலை

கரூர் மாவட்டத்தின் ஒரு ஓரத்தில் காவிரி ஆற்றங்கரையில் தென்பகுதியில் உள்ள ஆறு கிராமங்களுக்குப் புகழிமலை சொந்தமானது. அதனால் இந்த மலை, ‘ஆறுநாட்டார் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. சங்க காலத்துக்குப் பின்பு சமணர்கள் இப்பகுதியில் வாழ்ந்துவந்தனர். சமணர்களுக்குப் புகலிடம் தந்த காரணத்தால் இந்த மலை புகலி மலை என்று அழைக்கப்பட்டு, புகழி மலை என மாறிப் பின்னர் புகழூர் என பெயர் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

வேலாயுத வழிபாடு

ஆரம்ப காலத்தில் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் குறைகள் நீங்கி நிறைவுபெற மக்கள் இந்த மலையில் வேல் மட்டும் ஊன்றி அதனை வழிபட்டுள்ளனர். வேலை வழிபடுதல் தொன்மையான மரபு. இந்த வேல் வழிபாட்டை அருணகிரிநாதர் பதிவுசெய்துள்ளார். “பொருத வரு சூரன் கிரியுருவ வளிபுனல் சுவர வேலை எறிவோனே” என திருப்புகழில் பாடுகிறார்.

வேலாயுத வழிபாடே வேலன் வழிபாடாகி பின்னர் உருவுடைய முருகனை நிறுவி வழிபடும் வழக்கமாக மறியுள்ளது. வேல் ஊன்றிய இம்மலை மற்றும் அமைந்துள்ள ஊர் வேலாயுத(ன்)ம்பாளையம் எனப்படுகிறது.

மலை மேல் அமர்ந்த வேலவன்

கரூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது புகழூர். இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் புகழிமலை அமைந்துள்ளது. வேலாயுதம்பாளையம் அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், 315 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது. கோயிலின் விமான அமைப்பு, மைசூரு பகுதிகளில் இருக்கும் விமானங்கள் போல அமைந்திருக்கிறது.

சுமார் 400 அடி உயரமுள்ள மலையின் அடிவாரத்தில் விநாயகர் சன்னிதி உள்ளது. மலையின் நுழைவாயில் மண்டபத்தில் மலையை நோக்கி மேற்குத் திசையில் முருகனுடைய மயில்வாகன சன்னிதி அமைந்துள்ளது. மலைக் காவல் அய்யனாருக்கு எனத் தனிச் சன்னிதி உள்ளது. இதிலிருந்து 48 படிகள் ஏறியவுடன் தென் திசையில் உள்ள சிறிய குகையில் சிவன் – பார்வதி, ஒளவையார் சுதைகள் அமர்ந்த நிலையில் உள்ளன.

இவற்றின் அருகில் கிழக்குத் திசை நோக்கி ஏழு கன்னிமார்கள் சன்னதி உள்ளது. கடும் தவத்தில் இருக்கும் சுதையாலான அகத்தியரின் சிலையைத் தரிசிக்கலாம். மேலும் 14 படிகள் ஏறினால் வட திசை பார்த்த இடும்பன் சன்னிதி உள்ளது. தொடர்ந்து ஏறினால் கிழக்குத் திசையில் அமைந்துள்ள மூலஸ்தானத்துக்குள் நுழையலாம்.

வேலேந்திய பாலன்

மூலஸ்தானம் முன்பு முன் மகாமண்டபம் உள்ளது. அங்கே பாலசுப்ரமணிய சுவாமி கையில் வேலேந்தி நின்ற கோலத்தில் காட்சிதருகிறார். ஒரு கையில் வேலும் மற்றொரு கையில் சேவல் கொடியும் கொண்டு, நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். முருகனுக்குப் பின்புறம் இடது புறம் தலை சாய்த்தபடி தேவ மயில் உள்ளது. வஜ்ஜிரம், சக்தி ஆகிய படைக்கலன்களையும் அபயம், வரதம் ஆகிய நான்கு கரங்களுடன் பாலசுப்பிரமணியராக கருவறைக் கடவுள் காட்சி நல்குகிறார்.

முருகனைத் தரிசத்துப் பின் சன்னிதியை விட்டு வெளியே வந்தவுடன், வலப்புறம் சிவலிங்கம், மீனாட்சி அம்மன் கொடிமரம் மற்றும் நவகிரகங்களைத் தரிசிக்கலாம்.

கோயிலின் பின்புறம் நட்ட வேல் ஒன்றும் கிணறு ஒன்றும் உள்ளன. இத்திருக்கோயிலில் தைப்பூச உற்சவத்துக்கு சிவன் சன்னிதி கொடிமரம், சுப்ரமணியர் கோயில் கொடிமரம் இரண்டிலும் கொடியேற்றி 13 நாட்கள் உற்சவம் நடைபெறும். தைப்பூசத் தேர் சிறப்பாக நடைபெறும். ஐப்பசி கந்தசஷ்டி உற்சவம் சூரசம்காரத்துடன் ஏழு நாட்கள் நடைபெறும். அதில் 50 ஆயிரம் பக்தர்களுக்குக் குறையாமல் கலந்துகொள்வார்கள். கார்த்திகை தீபம், ஆடிக் கிருத்திகை, மாதக் கிருத்திகை, சஷ்டி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தீபாவளி, பொங்கல், தமிழ் - ஆங்கில வருடப் பிறப்பின் போதும் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்.

நல்லன எல்லாம் பெறலாம்

இந்தத் தலத்தில் உள்ள விஷ்ணு, துர்க்கையை 12 வாரம் வேண்டிக்கொண்டு எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றி வணங்கினால் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை. சஷ்டி விரதம் இருந்து மலையில் உள்ள கார்த்திகேயனை வணங்கினால் குழந்தை வரம் கிடைக்கும் என்ற உறுதி இப்பகுதி மக்களின் உள்ளத்தில் ஆழப் பதிந்துள்ளது.

காலை 9 மணி முதல் 12 மணிவரை, மாலை 5 மணி முதல் இரவு 7மணிவரை கோயில் திறந்திருக்கும். இரண்டு காலம், உச்சி காலம் மற்றும் சாயரக்ஷை என இரு கால பூஜை நடைபெறும் திருக்கோயில் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x