Published : 13 Oct 2016 11:53 AM
Last Updated : 13 Oct 2016 11:53 AM

ஆன்மிகச் சுற்றுலா: பிருந்தாவனத்தில் ஒரு நாள்

மதுரா ரயில் நிலையத்திலிருந்தே கிருஷ்ண பக்தியின் வாசம் வீசத் தொடங்கிவிடுகிறது. “ராதே ராதே” என்று சொன்னபடி கார் ஓட்டுனர் வரவேற்கிறார். ஹோட்டல் செல்லும் வழியில் தலையில் மூட்டை முடிச்சோடு மக்கள் சாரி சரியாய் சென்றுகொண்டிருக்கின்றனர். ஜன்மாஷ்டமியன்று தரிசனம் செய்வதற்காக அக்கம் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கூட்டம் லட்சக்கணக்கில் பெருகிவிடும் என்கிறார்.

ஓட்டலில் உணவு பரிமாறும்போதும் “ராதே ராதே” கோஷத்தைக் கேட்க முடிகிறது. ஆலய தரிசனத்திற்கு நம்மை அழைத்துச் செல்ல ஏகப்பட்ட ரிக் ஷாக்கள் உள்ளன. பல இடங்களில் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. எல்லாம் மறுநாள் நடக்கவிருக்கும் கோகுலாஷ்டமி விழாவுக்கான ஏற்பாடு. வண்டி யமுனா நதியோரம் செல்கிறது. இது பிருந்தாவனத்தின் ஒரு பகுதி. கண்ணன் வளர்ந்து கோபிகையரோடு விளையாடி லீலைகள் புரிந்த இடம் இது.

ஒரு இடத்தில் வண்டி நிற்கிறது. இறங்கி, தெருவின் அந்த பக்கம் பார்த்தால் கோட்டை போன்ற அமைப்பு தெரிகிறது. நடுவில் ஒரு கோபுரம். எல்லாம் செம்மண் நிறம். அது கோவிலின் பின்புறம். அங்கே சிறிய குன்றின் மேல் செங்குத்தான படிகள் கட்டப்பட்டுள்ளன. கட்டிடக் கலைக்குப் பேர்போன இந்தக் கோயிலின் பெயர் ராதா மதன் மோகன் கோயில்.

கோயிலின் முன் பக்கம் சுலபமாக ஏறிச் செல்லக்கூடிய அகலமான படிக்கட்டுகள் உள்ளன. குன்றின் உயரம் 50 அடி. பெயர் த்வஸ் ஆதித்ய திலா (12 சூரியன்களைக் கொண்ட மலை). இதன் மேல்தான் கோயில் வளாகம் அமைந்துள்ளது.

கிருஷ்ணரின் குளிர் போக்கிய சூரியன்கள்

இந்த மலை தொடர்பாக ஒரு கதை உள்ளது. கண்ணபிரான் காளிங்க நர்த்தனம் புரிந்து இங்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டாராம். முழுவதும் நனைந்திருந்ததால் குளிர் எடுத்தது. அதைப் போக்க 12 சூரியர்கள் அங்கு தோன்றி வெப்பத்தை அளித்தனர். அதன் விளைவாக அந்தக் குளிரிலும் அவருக்கு வியர்த்தது. நறுமணம் மிகுந்த அவரது வியர்வைத் துளிகள் குளமாக மாறின. இதனால்தான் இந்த இடத்துக்கு 12 சூரியன்கள் கொண்ட மலை எனப் பொருள்படும் ‘த்வஸ் ஆதித்ய திலா’ என்று பெயர் வந்ததாம். இந்தக் கதை ரகுநாத் தாஸ் கோஸ்வாமி என்பவர் எழுதிய ‘விரஜ விலாச ஸ்தலி’ என்ற நூலில் உள்ளது. அறுபது அடி உள்ள இந்த கோயில் 1580-ல் திறக்கப்பட்டது.

இந்தக் கோயில் வந்த கதை, புராணமும் வரலாறும் கலந்து மிகவும் சுவையானது. மதன் என்றால் காமதேவன். மோகன் என்றால் வசீகரிப்பவன். அதாவது காமதேவனையே கவர்பவன் என்று பொருள். மதன் மோகன் கோயிலின் சரித்திரம் 5000 ஆண்டுகளுக்கு முந்தையது.

கிருஷ்ணரின் கொள்ளுப் பேரனான வஜ்ரநபி, இந்தக் கோயிலுடன் மூன்று கோயில்களை பிருந்தாவனில் கட்டினான். ஆனால் நாளடைவில் இந்தக் கோயில்கள் மறைந்துவிட்டன. வரலாற்று சான்றுகளின்படி 1580-ஆம் ஆண்டு முல்தானைச் சேர்ந்த கபூர் ராம்தாஸ் என்னும் வணிகரால் சனாதன கோசுவாமி என்பவரின் ஆணைப்படி இக்கோயில் கட்டப்பட்டது. பின் 1670-ல் முகலாய அரசர் அவுரங்கசீப்பின் படையெடுப்பின்போது மதன் மோகனின் மூல விக்கிரகம் ரகசியமாக ஜெய்ப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பல ஆண்டுகள் வழிபடப்பட்டது.

ஜெய்ப்பூரின் இளவரசியான கரோலி, இளவரசரை மணமுடித்தபோது இந்த விக்கிரகத்தைத் தன்னுடன் எடுத்துச் சென்றாள். அதிலிருந்து அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆராதனை செய்யப்பட்டுவருகிறது. பிருந்தாவனில் முகலாய ஆக்கிரமிப்பின்போது மூல முதலான கோயிலில் இருந்த கோபுரம் அகற்றப்பட்டது. பிறகு நந்த குமார் போஸ் என்பவரால் ஒரு புதிய கோயில் (1819) கட்டப்பட்டது. அசலின் பிரதி பிம்பங்கள் அங்கே நிறுவப்பட்டு இன்றுவரை வழிபடப்பட்டுவருகின்றன.

அத்வைத ஆச்சார்யா என்னும் மகான் பிருந்தாவன் வந்தபோது அசலான மதன் மோகனின் விக்கிரகத்தை ஒரு பண்டைய ஆல மரத்தின் கீழ் கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது. அந்த விக்கிரகத்தைத் தன் சீடரான புருஷோத்தம சோபே என்பவரிடம் அளித்தார். அவர் அதை சனாதன கோஸ்வாமியிடம் ஒப்படைக்க, கோஸ்வாமி அதை துவாதஷாதித்ய மலை மீது ஒரு மரத்தின் கீழ் நிறுவி வழிபட்டார்.

பின்னர், ராம்தாஸ் கபூர் என்ற வியாபாரி மதன் மோகனின் அருளால் பயன் பெற்று அதன் விளைவாக ஒரு கோயிலை எழுப்பினார். முதலில் அங்கு ராதாவின் சிலை இல்லை. இதை அறிந்த புருஷோத்தம ஜெனா என்ற ஒரிய நாட்டு இளவரசர் பூரியிலிருந்து இரண்டு ராதையின் விக்கிரகங்களை அனுப்பிவைத்தார். பெரியது லலிதா என்றும் சிறியது ராதை என்றும் அழைக்கப்பட்டு மதன் மோகனனான கிருஷ்ணரின் அருகேயே வைக்கப்பட்டன.

இரண்டு கட்டங்களில் உருவான கோயில்

தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில் இது. படியில் ஏறும்போதே சிவப்பு மணற்கல்லால் கட்டப்பட்ட இதன் உயரம் தெரிகிறது. எண்முனையுள்ள இதன் கோபுரத்தின் சுவர், பின்னல் வேலைப்பாடுடன் அமைந்தது. பெரிய பதக்கமும் பொறிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயில் இரண்டு கட்டங்களாகக் கட்டப்பட்டுள்ளது. முதல்கட்டத்தில் பிரதான கோயில் அமைந்தது. அது குட்டையான சிகரம். படித்துறை பட்டைக் கூம்புரு கொண்ட கூரை உடையது. நீள வடிவுடன் பிரமிட் கூரையுடன் கூடிய மற்றொரு மண்டபமும் கட்டப்பட்டது. எல்லாம் கிழக்கு மேற்காக அமைந்தவை.

இரண்டாவது கட்டத்தில் அதற்கு வலது பக்கத்தில் வளைகோடுள்ள சிகரம் கொண்ட இன்னொரு கோயிலும் எழுப்பப்பட்டது. அதுவும் பிரதான கோயிலாக மாற்றப்பட்டது. கீழ்த் திசை நோக்கி உள்ள பிரதான கோயில் எட்டுப் பக்கம் கொண்ட வெளிப்புறமும் சதுர வடிவில் உட்புறமும் கொண்டது. இது அலங்கார பீடத்தின் மேல் நிற்கிறது. ஐந்து அடுக்குள்ள வெளிப்புறம் வைர வடிவமுள்ள வட்டமான தாமரை உருமாதிரிகளால் மிகுதியாகச் செதுக்கப்பட்டுள்ளது. உச்சியில் நெல்லிக்காய் போன்ற அமைப்பு உள்ளது. இது ஒரிய பாணியை ஒத்திருந்தாலும் நகராவைச் சேர்ந்ததுதான் என்கிறார் தொல்பொருள் துறை அதிகாரி. இதில்தான் மூலவர் மதன் மோகன் , ராதா, லலிதாவுடன் காட்சி தருகிறார்.

கோயிலின் கதவு மேல் கட்டையில் நாகரி லிபியில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. இந்த வளாகத்திலேயே சனாதன கோஸ்வாமியின் சமாதியும் குடிலும் உள்ளன. அங்கிருந்து பார்க்கும்போது யமுனா நதியின் வீச்சும் ஊரின் ஒரு பகுதியும் தெரிவது ரம்மியமான காட்சியாக உள்ளது. கண்ணனின் கீதம் காற்றில் கலந்து காதைக் குளிர்விக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x