Published : 27 Jul 2022 03:39 AM
Last Updated : 27 Jul 2022 03:39 AM

8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்: நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்த போலீஸார் 

27-ம் நாளில் நீல நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்த அத்தி வரதர்

கே.சுந்தரராமன்

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 27-ம் நாளில் அத்தி வரதர் நீல நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.

காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் விழாவில் தமிழகம் முழுவதும் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். இதனால் அத்தி வரதரை தரிசிக்க 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர். கோயிலுக்குள் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணித்தனர்.

அத்தி வரதர் வைபவத்தையொட்டி குழந்தைகளுடன் வரும் பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கூட்ட நெரிசலில் எவ்வளவு கவனமாக பார்த்துக் கொண்டாலும் குழந்தைகளைத் தவற விட வாய்ப்புகள் உள்ளன. குழந்தையுடன் வருபவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். உடன் வந்தவர்கள் காணவில்லை எனில் அருகாமையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் தகவல் தெரிவிக்கலாம் என்று காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அத்தி வரதரை தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வந்த நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"ஒரு சிறிய ஊரான காஞ்சிபுரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். அவர்களுக்கு முறையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. அவர்களுக்கும், காவல்துறையினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட நிகழ்வுகள் இருக்கும்வரை இந்து மதம் வளர்ந்து கொண்டுதான் இருக்கும்.

அத்தி வரதரை நிரந்தரமாக கோயிலில் வைக்க வேண்டுமா? என்பது குறித்து அதிகாரம் உள்ள ஆன்மிகவாதிகள்தான் முடிவு செய்ய வேண்டும். எங்கு வைத்தாலும் நாங்கள் வந்து வணங்கிவிட்டுச் செல்வோம். நீருக்குள் வைத்தாலும் நீரை பார்த்து வணங்கிவிட்டுச் செல்வோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x