Published : 12 May 2016 12:11 PM
Last Updated : 12 May 2016 12:11 PM

இஸ்லாம் வாழ்வியல்: இருள் எப்படி விலகியது?

ஞானி அபுல் காசிமுல் முனாதி தன் தேவைக்கு அதிகமாக எதையும் சேர்த்து வைக்க விரும்பாத வாழ்க்கை வாழ்ந்தவர். எப்போதும் வழிபாட்டிலும் தன் மனதின் போக்குகளை நன்கு கவனித்துச் செப்பம் செய்துகொண்டும் தூய்மையான நெறியில் வாழ்ந்தவர். தன் பொருட்களைச் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டுசென்றாலும் தன் தேவைக்குரிய பணம் கிட்டும் வரைதான் பொருள்களை விற்பார். அதற்கு மேல் விற்பனையைத் தொடர மாட்டார். வீட்டுக்குத் திரும்பிவிடுவார்.

அப்பெருந்தகை ஒரு நாள் நோய்வாய்ப்பட்டார். அபுல்காசிம் நோயில் விழுந்துவிட்டாரே என்று அவருடைய நண்பர்களுக்கு வருத்தம். அவருடைய நெருங்கிய நண்பர்கள் இருவர் அபுல்காசிமைக் காண வேண்டும் என்று விரும்பினார்கள். வெறுங்கையை வீசிக்கொண்டு போனால் நன்றாக இருக்குமா? எனவே இருவரும் கடைவீதிக்குச் சென்றார்கள். ஒரு கடையில் அரை தீனாருக்கு ஆப்பிள் பழங்களை வாங்கினார்கள். ஆனால் காசு கொடுக்கவில்லை. கடனுக்குத்தான் வாங்கிச் சென்றார்கள்.

படுக்கையில் படுத்திருந்தார் அறிஞர். நண்பர்கள் இருவரும் அவர் படுக்கையருகில் சென்று அமர்ந்தார்கள். மெதுவாகக் கண் திறந்து பார்த்தார். “என்ன நண்பர்களே, உங்களைச் சுற்றி இப்படி இருள் மண்டிக் கிடக்கிறதே?” என்றார். நண்பர்களுக்குத் திக்கென்றது. என்ன இது, இப்படிச் சொல்லிவிட்டாரே என்ற தவிப்பு. வீட்டுக்கு வெளியே வந்தார்கள். நாம் என்ன தவறு செய்துவிட்டோம். அபுல் காசிம் ஏன் அப்படிச் சொன்னார் என்று இருவரும் பேசிக்கொண்டார்கள்.

உடனடியாகப் பழத்தை வாங்கிய கடைக்குச் சென்றார்கள். உரிய தொகையைக் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்தார்கள்.

இருள் விலகியது

நண்பர்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அபுல்காசிம், “அட, என்ன இது வியப்பு? மனிதன் அதற்குள் இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்துவிட்டானே. அப்போது வந்தபோது உங்களைச் சுற்றி இருள் மண்டிக்கிடந்தது. இப்பொழுது இருள் விலகி ஒளிமயமாக இருக்கிறது. சரி என்ன நடந்தது சொல்லுங்கள்” என்றார்.

நண்பர்கள் இருவரும் காசு கொடுக்காமல் கடனுக்கு ஆப்பிள் பழங்கள் வாங்கி வந்ததைச் சொன்னார்கள். ஆனால் இவர் எப்படி இதைக் கண்டுபிடித்தார் என்ற எண்ணம் இருவருக்கும் எழுந்தது. மெதுவாக அறிஞர் சொன்னார்.

“நீங்கள் இருவரும் ஆப்பிள் பழங்களை வாங்கினீர்கள். உண்மைதான். ஆனால் உங்களில் யார் பணம் கொடுப்பது என்பதைப் பற்றி இருவருமே பேசவில்லை. நீங்கள் கொடுக்கட்டும் என்று அவரும் அவர் கொடுக்கட்டும் என்று நீங்களும் ஒருவரையொருவர் எதிர்பார்த்தீர்கள். அதனால் என்ன நடந்தது தெரியுமா? உங்கள் இருவரின் செயல்களையும் பார்த்துக் கடைக்காரன் வெட்கப்பட்டுப் போய்விட்டான். அதனால் அவன் உங்களிடம் பணத்தைக் கேட்கவுமில்லை வாங்கவுமில்லை. நீங்கள் கடனுக்கு என்றதும் ஏதும் சொல்லாமல் பழங்களைத் தந்துவிட்டான். இதற்குக் காரணம் யார்? நான்தானே. நான் நோய்வாய்ப்பட்டதால்தானே என்னைக் காண வந்தீர்கள்.. அதனால்தான் என்னால் உங்களிடம் இருளையும் ஒளியையும் காண முடிந்தது. என் பார்வையில் யாவும் தெளிவாகத் தெரிந்தன” என்றார்.

நண்பர்கள் இருவரும் “இறை நம்பிக்கையாளரின் அகப் பார்வை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் அவர் இறைவனின் ஒளியைக் கொண்டு பார்க்கிறார்” என்ற இறைத்தூதரின் மொழிகளை எண்ணியபடியே வெளியே நடந்தார்கள்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x