Last Updated : 14 Apr, 2016 08:21 AM

 

Published : 14 Apr 2016 08:21 AM
Last Updated : 14 Apr 2016 08:21 AM

தத்துவ விசாரம்: உங்களால் குழந்தை ஆக முடியுமா?

பகவத் கீதைக்குத் தான் எழுதிய உரையின் முன்னுரையை இப்படி ஆரம்பிக்கிறார் பாரதியார்: “நீங்கள் குழந்தைகளைப் போலானாலன்றி மோட்ச ராஜ்ஜியத்தை எய்த முடியாது”.

இந்த வாசகம் விவிலியத்திலிருந்து எடுத்தாளப்பட்டது. பாரதியார் இந்த வாசகத்துக்கான பொருளையும் தத்துவ, ஆன்மிக உலகில் அதன் இடத்தையும் விளக்குகிறார்.

குழந்தையின் உள்ளம் நேரடியானது. எளிமையானது. அதன் தேவைகளும் கோரிக்கைகளும் வெளிப்படையானவை. அதற்குக் கடந்த கால நினைவுகளின் சுமை இல்லை. எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளின் பாரமும் இல்லை. எனவே அச்சம் இல்லை. பதற்றம் இல்லை. மனவருத்தங்கள் எதுவும் இல்லை.

தற்கணம் என்பதுதான் குழந்தையின் தாரக மந்திரம். அதுவே குழந்தையின் வாழ்க்கை நெறி. தனக்கு அந்தச் சமயத்தில் எது தேவையோ அதைக் கேட்கும். எது தோன்றுமோ அதைச் செய்யும். சாப்பிடுவது, தூங்குவது, அழுவது, ரசிப்பது, விளையாடுவது, சிரிப்பது என எதுவும் திட்டமிட்ட செயல் அல்ல. யாருக்காகவும், எந்த லாபத்துக்காக்வும் செய்யும் செயல்கள் அல்ல. எல்லாமே அந்தக் கணத்தின் இயல்பான தேவைகளின் அடையாளம். இயல்பான மன எழுச்சியின் வெளிப்பாடு.

யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் குழந்தைகளுக்குக் கிடையாது. யாரையும்விடத் தான் பெரியவர் என்று நிரூபிக்க வேண்டிய அவசியமும் கிடையாது. சொத்து, சுகம், வசதி என எந்தத் திட்டங்களும் குழந்தைகளுக்கு இல்லை. வேண்டியதைக் கேட்கும். முடிந்ததைத் தரும். நினைத்ததைச் செய்யும். தூய எண்ணங்களிலிருந்து பிறக்கும் செயல்கள் அவை.

குழந்தைகளைப் போல நம்மால் இருக்க முடியுமா? நமது சுமைகள், ஏக்கங்கள், எதிர்ப்பார்ப்புகள், தன் முனைப்புகள், சொந்தம் கொண்டாடும் தன்மை, நட்பு, விரோதம், கோபம், குரோதம், கர்வம், தாழ்வு மனப்பான்மை, கழிவிரக்கம், பெருமிதம் ஆகியவற்றைத் தூக்கி எறிந்துவிட்டுத் தற்கணத்தில் வாழ்வது நமக்குச் சாத்தியம்தானா?

ராமகிருஷ்ண பரமஹம்சர் அழகான ஒரு காட்சியைச் சித்தரிக்கிறார்.

ஒரு குழந்தை அழுகிறது. அம்மா என்று கதறுகிறது. கையில் இருக்கும் வேலையைப் போட்டுவிட்டு அம்மா ஓடி வருகிறார். குழந்தைக்குப் பசி என்பது அவருக்குப் புரிகிறது. பால் கொடுக்கிறார். பாலைக் குடித்துவிட்டு குழந்தை தூங்கிவிடுகிறது. அம்மாவுக்கு நன்றி எதுவும் சொல்லவில்லை.

தூங்கி எழுந்ததும் விளையாடுகிறது. விளையாடும்போது எங்கோ இடித்துக்கொள்கிறது. வலிக்கிறது. உடனே அம்மா என்று ஒரு சத்தம். அம்மா ஓடி வந்து குழந்தையை ஆறுதல்படுத்தி மருந்து போடுகிறார். சிறிது நேரத்தில் வலியை மறந்து குழந்தை மீண்டும் விளையாடுகிறது.

ஜன்னல் வழியே சாலையைப் பார்க்கும் குழந்தை அம்மா என்று கத்துகிறது. இந்த முறை வியப்புடன் கத்துகிறது. அம்மா ஓடி வந்து பார்க்கிறார். சாலையில் ஒரு யானை ஆடி அசைந்து நடந்து போகிறது. அதைக் கண்டு வியப்புடன் கை கொட்டிச் சிரிக்கிறது குழந்தை. அம்மாவிடம் யானையைக் காட்டி வியக்கிறது. பல நூறு முறை யானையைப் பார்த்திருக்கும் அம்மாவும் குழந்தையுடன் கொண்டாட்டத்தில் சேர்ந்துகொள்கிறார்.

சிறிது நேரத்தில் யானையை மறந்துவிட்டு வேறு எதையோ நாடிச் சென்றுவிடுகிறது குழந்தை. அம்மா வேலையைக் கவனிக்கப் போய்விடுகிறார்.

சிறிது நேரத்தில் மீண்டும் அம்மா என்னும் கதறல். இது பசியின் கதறல் என்று அம்மாவுக்குத் தெரியும். அவர் ஓடி வருகிறார்.

நீங்கள் இந்தக் குழந்தை அம்மாவிடம் பழகுவதுபோலக் கடவுளிடம் உறவாடுங்களேன் என்கிறார் ராமகிருஷ்ணர். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்தக் கணத்தின் உணர்வெழுச்சியுடன் கடவுளை நாடினால், குழந்தையின் குரலுக்கு அம்மா வருவதைப் போலக் கடவுளும் வருவார் என்கிறார் ராமகிருஷ்ணர். அப்படி வர வேண்டுமென்றால் நீங்கள் உண்மையிலேயே குழந்தையாக வேண்டும். அதாவது, குழந்தையின் மனநிலை உங்களுக்கு இருக்க வேண்டும்.

சுமைகள் அற்ற மனநிலை. எதிர்பார்ப்புகள் அற்ற மனநிலை. தற்கணத்தில் வாழும் அற்புதம். அதுதான் குழந்தைமையின் சாரம்.

இப்போது சொல்லுங்கள். குழந்தைகளைப் போல் ஆனால் மோட்ச ராஜ்ஜியத்தை எய்த முடியுமா, முடியாதா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x